Published:Updated:

`ஹெல்மெட் போடலையா; வாங்க சுற்றுலா போகலாம்!' - தர்மபுரி காவல்துறையினரின் 'வாவ்' முயற்சி

நாங்கள் சுற்றுலா அழைத்துச் சென்ற 50 பேரிடமும் நல்லவிதமான மாற்றம் இருந்தது. இனி கட்டாயமா ஹெல்மெட் அணிவதாகக் கூறினார்கள்.

ஹெல்மெட்
ஹெல்மெட்

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களிடம் அபராதம் வாங்குவது, கண்டிப்பது என்பது வழக்கமான ஒன்று. ஆனால், ஹெல்மெட் அணியா வாகன ஓட்டிகளை தேநீர் விருந்துடன் இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளனர் தர்மபுரி மாவட்டப் போக்குவரத்து காவல்துறையினர்.

`ஹெல்மெட் போடலையா; வாங்க சுற்றுலா போகலாம்!' - தர்மபுரி  காவல்துறையினரின் 'வாவ்' முயற்சி

இன்று (07.08.2019) ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய சுமார் 50 நபர்களை அபராதம் ஏதும் விதிக்காமல் காவல்துறையைச் சார்ந்த வாகனம் ஒன்றில் ஏற்றிக்கொண்டு தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்குச் சுற்றுலாவாக அழைத்துச் சென்றனர். மாவட்ட அமர்வு மற்றும் கூடுதல் அமர்வு நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குடும்பநல நீதிமன்றம், மாவட்ட மகிளா மற்றும் கூடுதல் மகிளா நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட 11 நீதிமன்றங்களைச் சுற்றிக்காட்டினர். அதோடு தேநீர், சிற்றுண்டி கொடுத்து அவர்களை அனுப்பியுள்ளனர் போலீஸார். இதன்மூலம் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் இழப்புகளையும் அவர்கள் சந்திக்க வேண்டிய சட்டரீதியான சிக்கல்களையும், நேரவிரயத்தையும் உணர்த்துவது காவல்துறையினரின் நோக்கம் என்கிறார்கள்.

இதுதொடர்பாக தர்மபுரி மாவட்டப் போக்குவரத்து காவல்துறை அதிகாரி சின்னசாமியிடம் பேசினோம். ``தர்மபுரி மாவட்ட எஸ்.பி கூறியதன் பேரில் நாங்கள் இதைச் செய்தோம். இது நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு முழுமையாக உள்ளது. நாங்கள் சுற்றுலா அழைத்துச் சென்ற 50 பேரிடமும் நல்லவிதமான மாற்றம் இருந்தது. இனி கட்டாயமாக ஹெல்மெட் அணிவதாக அவர்கள் கூறினார்கள்.

விழிப்புணர்வு
விழிப்புணர்வு

ஹெல்மெட் அணியாதவர்களை இன்பச்சுற்றுலா அழைத்துச் சென்றது மட்டுமன்றி இன்னும் சில முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

500 ஆட்டோக்களில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தைப் பேனர் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அதுமட்டுமன்றி தர்மபுரி நான்கு ரோட்டில் 24 மணிநேரமும் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை ஒலிபெருக்கிகள் (speaker) மூலமாக ஒலிபரப்புவது ஆகிய திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம்.

விழிப்புணர்வு
விழிப்புணர்வு

இந்த முயற்சிக்கு மக்களிடமும் நல்ல வரவேற்புள்ளதாகத் தெரிகிறது. நாளை ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் சுமார் 20,000 துண்டுப் பிரசுரங்களை செய்தித்தாள் வழியே மக்களுக்கு வீடுவீடாக அனுப்பி வைக்கப்போகிறோம். நிச்சயம் எங்கள் திட்டங்கள் வெற்றி பெறும்" என்று நம்பிக்கையாகப் பேசுகிறார்.