Election bannerElection banner
Published:Updated:

`மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சேவை வழங்கிய மாவட்டம்!' - தேசிய அளவில் அசத்திய தர்மபுரி

மாற்றுத் திறனாளிகள்
மாற்றுத் திறனாளிகள்

உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு அரசு வழங்கும் அனைத்து உதவிகளும் கிடைக்கப் பாடுபடுவோம்.

தேசிய அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த சேவைபுரிந்த மாவட்டமாகத் தர்மபுரி மாவட்டம் அறிவிக்கப்பட்டது. அதற்காகச் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமான டிசம்பர் 3-ம் தேதி இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவிடம் தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி விருதையும், பாராட்டையும் பெற்று வந்திருப்பது தமிழகத்துக்கே பெருமையைச் சேர்த்திருக்கிறது.

கலெக்டர் மலர்விழி
கலெக்டர் மலர்விழி
எம். விஜயகுமார்

இதுபற்றி தர்மபுரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் துறையினரிடம் விசாரித்தோம். ``இந்த விருதைப் பெற முழுத் தகுதி பெற்றவர் மாவட்டக் கலெக்டர் மலர்விழி. மாற்றுத்திறனாளிகள் மீது மிகுந்த பாசமும், அக்கறையும் காட்டியவர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை மீது தனிக் கவனம் செலுத்தியதோடு துறைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உடனே செய்துகொடுத்தவர்.

`விரக்தியில் இருந்தேன்; மனைவி சொல்லே மந்திரமானது!’- வேலூரை அசத்தும் மாற்றுத்திறனாளி எலெக்ட்ரீஷியன்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் குறைதீர்ப்புக் கூட்டங்கள் அதிகளவில் நடத்தி சாலையோரமாக உள்ள மாற்றுத்திறனாளிகளை மீட்டு அவர்களைப் பாதுகாப்பான விடுதிகளில் சேர்த்ததோடு மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை கை, கால்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் உதவித் தொகைகளை உடனுக்குடன் வழங்கி அரவணைத்தார். அதையடுத்தே 2019-ம் ஆண்டுக்கான தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சேவைபுரிந்த மாவட்டமாகத் தர்மபுரி மாவட்டம் அறிவிக்கப்பட்டு விருதைப் பெற்றிருக்கிறோம்.

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தில் இந்திய அளவில் 62 விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தமிழகத்துக்கு 7 விருதுகள் வழங்கினார்கள். சாதனைபுரிந்த 5 மாற்றுத்திறனாளிகளுக்கான விருதும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் கொடுத்த தமிழக கூட்டுறவு வங்கிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சேவைபுரிந்த மாவட்டமாகத் தர்மபுரி மாவட்டத்தையும் தேர்வு செய்து விருது வழங்கப்பட்டிருக்கிறது. இது தமிழகத்துக்கும், தர்மபுரி மாவட்டத்துக்கும் பெருமையைச் சேர்த்திருக்கிறது.

விருது
விருது

இதுபற்றி தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழியிடம் பேசினோம். ``இந்த விருது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதோடு, தொடந்து சிறந்த முறையில் செயல்படுவதற்கு ஊக்கத்தை அளித்திருக்கிறது. தமிழக அரசுக்கும், மாவட்ட மாற்றுத்திறனாளித் துறைக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு அரசு வழங்கும் அனைத்து உதவிகளும் கிடைக்கப் பாடுபடுவோம்'' என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு