Published:Updated:

`ஜூன் மாதம் முடிவடைந்த பணிகள்’ - தொட்டபெட்டா சாலையைத் திறந்துவைத்த அமைச்சர்

ஊட்டி தொட்டபெட்டா சாலை 1.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் அமைச்சரின் வருகைக்காக திறக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்துவைத்தார்.

S.P. VELUMANI
S.P. VELUMANI

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் தொட்டபெட்டா காட்சி முனை சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் பகுதியாக உள்ளது. தொட்டபெட்டா சிகரத்தில் உள்ள தொலை நோக்கி மூலம் மலைத்தொடர்கள், பள்ளத்தாக்குகளை கண்டு ரசித்துச் செல்கின்றனர். வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இந்தச் சாலை கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்தது. இதனால், சாலையில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டன.

S.P. VELUMANI
S.P. VELUMANI

சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் சாலை மூடப்பட்டு ரூ.1.89 கோடி மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் தொடங்கின. சாலை சீரமைப்புப் பணிகள் கடந்த ஜூன் மாதம் முடிந்தநிலையில் இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்தச் சாலை திறக்கப்படாமல் சுற்றுலாப் பயணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், வியாபாரிகள் பலர் தொட்டபெட்டா சாலையைத் திறக்க மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்திய போதும் இன்று, நாளை என அமைச்சர் வருகைக்காக சாலையைத் திறக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இந்த நிலையில், இன்று ஊட்டியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் வேலுமணி தொட்டபெட்டா சாலையைத் திறந்துவைத்தார்.

இரு மாதங்களாக பூட்டிக்கிடந்த இச்சாலையில் இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இது குறித்து சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கூறுகையில், “மிக முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் தொட்டபெட்டா காட்சி முனை பல மாதமாக திறக்கப்படாமல் இருந்தது.

S.P. VELUMANI
S.P. VELUMANI

நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மேலும் சுற்றுலா தொழிலை நம்பி வாழும் வாடகை வாகன ஓட்டுநர்கள், சிறு வியாபாரிகள் எனப் பலரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த சாலையைக் கூட அமைச்சர் வந்துதான் திறக்கவேண்டும் என்பது வேடிக்கையாக உள்ளது. ஒரு வழியாக இன்றைக்கு அமைச்சரால் சாலை திறக்கப்பட்டு விடிவு பிறந்தது,” என்றார்.

வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் கூறுகையில், ``சீரமைக்கப்பட்ட ஒரு சாலையைத் திறக்கவே 1௦ அடிக்கு ஒரு போலீஸ் போக்குவரத்து நிறுத்தம் என ஆடம்பரச் செலவுகள்.. இதெல்லாம் தேவையில்லாத ஒன்று,” என்றார்.