Published:Updated:

யாசகம் கேட்டுச் சென்ற பழங்குடியினரை, காவல் நிலையத்துக்கு அனுப்பினாரா நீதிபதி? - பின்னணி என்ன?!

புதுக்கோட்டை

``எங்களோட காசு ரூ.100-ஐ வாங்கிக்கிட்டு அதுல ரூ.90-க்கு சாப்பாடு வாங்கிட்டு ரூ.10-ஐ மிச்சத்தை கொடுத்திட்டாங்க. காலையில 10மணிக்கு போனவங்கள, மதியம் 2மணிக்கு மேல தான் விட்டாங்க.”

யாசகம் கேட்டுச் சென்ற பழங்குடியினரை, காவல் நிலையத்துக்கு அனுப்பினாரா நீதிபதி? - பின்னணி என்ன?!

``எங்களோட காசு ரூ.100-ஐ வாங்கிக்கிட்டு அதுல ரூ.90-க்கு சாப்பாடு வாங்கிட்டு ரூ.10-ஐ மிச்சத்தை கொடுத்திட்டாங்க. காலையில 10மணிக்கு போனவங்கள, மதியம் 2மணிக்கு மேல தான் விட்டாங்க.”

Published:Updated:
புதுக்கோட்டை

``புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதி குடியிருப்பினைச் சேர்ந்தவர் அப்பாதுரை. இவர், கருப்பசாமி வேடம் அணிந்து கையில் அரிவாளுடன் வீடு, வீடாகச் சென்று யாசகம் கேட்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

தீபாவளிப் பண்டிகையொட்டி அப்பாதுரை, அவரின் மருமகன்கள் ரஞ்சித், பாண்டி ஆகியோருடன் சேர்ந்து நகர் முழுவதும் கடந்த 21-ம் தேதி யாசகம் கேட்டு சுற்றியிருகின்றனர். அப்போது, அறந்தாங்கி ஜே.எம் நீதிமன்ற நீதிபதி தீபாவின் வீட்டிற்குச் சென்று யாசகம் கேட்டவர்களை, நீதிபதி,போலீஸை அழைத்து `இவர்கள் மீது கேஸ்போட வேண்டாம், ஒரு வாரத்திற்கு காவல் நிலையத்தில் வைத்து மேஜை, நாற்காலிகளை தினமும் சுத்தம் செய்ய வையுங்கள். இது தான் அவர்களுக்கான தண்டனை’ என்று காவல்துறையினரிடம் கூறியிருக்கிறார். அவர்களும் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றி அப்படியே செய்திருக்கிறார்கள். ஒன்றும் செய்யாத அப்பாவி பழங்குடிகளை அனைவரும் சேர்ந்து சித்திரவதை செய்திருக்கின்றனர். நீதிபதியின் செயலைக் கண்டித்து நீதிமன்றத்தை முற்றுகையிட உள்ளோம்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கவிவர்மன் என்பவர் சமூகவலைதளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய இந்தப் பதிவு பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

பழங்குடிகள்
பழங்குடிகள்

பாதிக்கப்பட்டவர்களிடம் பேசினோம், ``ஒவ்வொரு வருஷமும் புரட்டாசி மாசம், எங்க வீட்டுல வச்சி சாமிக்கு விசேஷ பூஜை போடுவோம். அதுக்கு கொஞ்சம் பணம் தேவைப்படும். அதுக்காகத் தான் ஒவ்வொரு வருஷமும் பத்தோ, அஞ்சோ பொதுமக்கள்கிட்ட வசூலிச்சி அந்தக் காச வச்சி பூஜை நடத்துவோம். அவங்க நீதிபதின்னு மொதல்ல எங்களுக்குத் தெரியாது. எல்லார்கிட்டயும் கேட்கிற மாதிரியே, பூஜை போடணும் காசு கொடுங்க சாமின்னு தான் கேட்டோம். எங்க மேல கோபப்பட்ட நீதிபதிஅம்மா, இப்படி எல்லாம் வேஷம் போட்டு வரக்கூடாதுன்னு எங்களைக் கண்டிச்சாங்க. அங்கேயே எங்களை உட்கார வச்சிட்டாங்க. நீங்க பணம் காசு கொடுக்கலாட்டியும் பரவாயில்லை, எங்களை விட்டுறுங்க நீதிபதி அம்மான்னு கேட்டுக்கிட்டோம். கொஞ்ச நேரத்துல போலீஸ்காரங்க வந்து ஸ்டேஷனுக்குக் கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க. எங்களோட காசு ரூ.100 வாங்கிக்கிட்டு அதுல ரூ.90க்கு சாப்பாடு வாங்கிட்டு ரூ.10ஐ மிச்சம் கொடுத்தாங்க. காலையில 10 மணிக்கு போனவங்கள, மதியம் 2 மணிக்கு மேல தான் விட்டாங்க. பத்து நாளைக்கு தினமும் கையெழுத்துப் போடணும்னு சொன்னாங்க. நாங்களும் மூணு நாளு ஸ்டேஷனுக்குப் போய் விடாம கையெழுத்து போட்டோம். திடீர்ன்னு 25-ம் தேதி கையெழுத்தெல்லாம் வேண்டாம்னு சொன்னதோட, ரூ.500-ஐ கையில் கொடுத்து, கறி எடுத்து சமச்சி சாப்பிடுங்கன்னு சொல்லி கொடுத்தாங்க.

வாங்கிட்டு வந்திட்டோம். எப்ப, எங்கயிருந்து போலீஸ்காரங்க வருவாங்க. என்ன சொல்வாங்கன்னு தெரியலை. ஒரு வித பயத்திலேயே இந்த வருஷம் தீபாவளியையும் கொண்டாடலை. பூஜையையும் போடலை" என்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கவிவர்மனிடம் பேசினோம், "தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகவே கையில் அரிவாளுடன் சுவாமி வேடமணிந்து சென்றவாறு நீதிபதியிடம் யாசகம் கேட்டிருக்கின்றனர். யாசகம் கொடுப்பதற்கு விருப்பமில்லை என்றால், கொடுக்க மறுத்து அவர்களை அங்கிருந்து அனுப்பியிருக்கலாம். ஆனால், அப்படி செய்யவில்லை. வழக்கு ஏதும் போடாத நிலையிலும் 10 நாட்களுக்கு தினமும் வந்து கையெழுத்துப் போடச் சொல்லியிருக்கின்றனர். கூடவே, காவல் நிலைய மேசை, நாற்காலிகளை துடைக்கவிட்டிருக்கின்றனர். இப்படி நம் பூர்வகுடிகள் மீது மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருக்கின்றனர். கடைசியாக, இந்தப் பிரச்னை வெளியே வந்ததும், நடந்ததை வெளியே சொல்லக்கூடாது என்று பாதிக்கப்பட்டவர்களை மிரட்டியதோடு, ரூ.500 பணத்தைக் கொடுத்து கறி எடுத்து சாப்பிடுங்கள், இனி கையெழுத்து ஏதும் போட வர வேண்டாம்"என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்திருக்கின்றனர். உரிய விசாரணை நடத்தணும்" என்றார்.

யாசகம் கேட்டுச் சென்ற பழங்குடியினரை, காவல் நிலையத்துக்கு அனுப்பினாரா நீதிபதி? - பின்னணி என்ன?!

இதுகுறித்து போலீஸாரிடம் விளக்கம் கேட்டபோது, "கையில் அரிவாளோடு, கேட்டை திறந்து கொண்டு நீதிபதியின் வீட்டிற்குள் சென்றனர். மூன்று பேருமே மதுபோதையில் தான் இருந்தனர். மாறுவேடம் அணிந்தததோடு, அரிவாள் கையில் இருந்ததைப் பார்த்த நீதிபதி உடனே, எங்களுக்கு தகவல் கொடுத்தார். கண்டித்து அனுப்பும்படி கூறினார். மற்றபடி, அவர்களை எதுவும் செய்ய சொல்லவில்லை. மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றோம். தீபாவளி நேரம் என்பதால், அடுத்தடுத்த அழைப்புகள் ஓய்வு இல்லாமல் ஓடிக்கிட்டு இருந்தோம். மூவரில் ஒருவர் ஏற்கெனவே உடும்பு வழக்கின் குற்றவாளிக்கு ஜாமீன் கையெழுத்து போட்டிருக்கிறார். தீபாவளி வரையிலும் மீண்டும் அரிவாளைத் தூக்கிக் கொண்டு நகரில் இதுபோன்று சுற்றி பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதை தவிர்க்கவே, அவர்களை 3 நாட்களுக்கு வர சொன்னோம். தீபாவளி அன்னைக்கு வந்ததோட,விட்டுட்டோம். யாசகம் கேட்டு போயிக்கிட்டு இருந்தவங்க, யாசகம் கேட்க போகலை. பார்க்க பாவமா இருந்ததால கைகாசு ரூ.500-ஐ, கோழிக்கறி எடுத்து சாப்பிடங்கன்னு சொல்லி கொடுத்து அனுப்பினோம். டேபில், நாற்காலி எல்லாம் அவர்களை துடைக்க வச்சோம் என்று சொல்வதில் எந்த உண்மையும் இல்லை. இதையெல்லாம், தவறாக சமூக வலைதளங்கள்ல சிலர் பதிவிட்டிருப்பது வருத்தமாக இருக்கிறது" என்றார்.

பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் தொடர்பு கொண்டு, மதுபோதையில் சென்றதாக போலீஸார் சொன்னது குறித்து கேள்வி எழுப்பினோம், ``எங்களுக்கு குடிக்கிற பழக்கம் உண்டு தான் சாமி. ஆனா, அன்னைக்கு குடிச்சிட்டு அவங்க வீட்டுக்குப் போய் காசு கேட்க போகலை” என்றனர்.