Published:Updated:

`மார்ச் 22... ஏப்ரல் 29!’ - ஆச்சர்யத்தை ஏற்படுத்திய கோவை பருந்து பார்வை படம்

கோவை
கோவை

ஊரடங்கு உத்தரவால் காற்று மாசு அளவு குறைந்து, கோவையின் அழகு மீண்டு வருகிறது.

சிறுவாணி தண்ணீர், மேற்குத் தொடர்ச்சி மலை என்று இயற்கையாகவே கோவைக்கு அத்தனை அழகு. இத்தனை அழகுகளைக் கொண்டிருப்பதால், மெய்சிலிர்க்க வைக்கும் கோவையின் க்ளைமேட்டை ரசிக்காதவர்கள் மிகவும் குறைவுதான். பொதுவாக, சொந்த ஊரில் இருந்து, பணி, கல்வி நிமித்தமாக பலரும் வெளியூர்களுக்குச் செல்வார்கள். அப்படி செல்பவர்கள் தங்களது சொந்த ஊரைப் போல வராது என்று கூறுவது வழக்கம்.

கோவை
கோவை

ஆனால், கோவைக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் அப்படிச் சொல்ல மாட்டார்கள். கோவையின் சூழல், அவர்களது சொந்த ஊரையும் மறக்கடித்துவிடும். கோவையில் செட்டிலாக வேண்டும் என்று நினைப்பவர்களும் உண்டு. காரணம் இங்கு நகர்ப்பகுதி, கிராமப்பகுதி என்று இரண்டு சூழல்களும் உள்ளன. இப்படி கோவையின் சிறப்பம்சங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

அதேநேரத்தில் கடந்த சில ஆண்டுகளாக கோவை இயல்பாக இல்லை. வளர்ச்சி என்ற பெயரில் கோவையின் அழகை நாம் இழந்து வருகிறோம் என்ற கருத்து வேகமாகப் பரவியது. தொழில் நகரமாக மாறிவரும் கோவை ஸ்மார்ட் சிட்டி அந்தஸ்தையும் பெற்றுவிட்டது. மக்கள் தொகை 30 லட்சத்தை கடந்துவிட்டது. சோலைக்காடுகள், கான்கிரீட் காடுகளாக மாறிவிட்டன. இதனால், பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெயில் சுட்டெரிக்கத் தொடங்குகிறது.

கோவை
கோவை

ஏப்ரல், மே மாதங்களில் வெயில் உச்சத்தில் இருக்க, நம்ம கோவைக்கு என்னதான் ஆச்சு என்று கோவை வாசிகள் வேதனை தெரிவித்து வந்தனர். ஆனால், தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு கோவையின் அழகை மீட்டு வருகிறது. ஊரடங்கால் கோவையில் காற்றுமாசு கிட்டத்தட்ட 80 சதவிகிதம் குறைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மார்ச் 22-ம் தேதியும், ஏப்ரல் 29-ம் தேதியும் கோவை காந்திபுரம் மேம்பாலம் பகுதியை ட்ரோன் கேமரா மூலம் படம் பிடித்தோம். ஆனால், இரண்டு படங்களுக்கும் ஏராளமான வித்தியாசங்கள். மார்ச் 22-ம் தேதிதான் முதல்முதலாக சுய ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டது. அதனால், அன்று எடுக்கப்பட்ட படத்தில் மேம்பாலமும், கட்டடங்களும் மட்டுமே தெரிந்தன. அந்தப் படம் எடுத்து, ஒரு மாதம் கழித்து ஏப்ரல் 29-ம் தேதி அதே இடத்தில் மீண்டும் படம் பிடித்தோம்.

கோவை
கோவை

ஆனால், இந்த முறை மேம்பாலம் மற்றும் கட்டடங்களுடன் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் படத்தில் விழுந்தன. மார்ச் மாதம் நிலவரப்படி அங்கு மலை இருந்ததற்கான அறிகுறியே தெரியவில்லை. ஏப்ரல் மாதத்தில் கோவையின் உண்மையான அழகு தெரியத் தொடங்கியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் பல பகுதிகளிலும் இந்தக் காட்சியைப் பார்க்க முடிந்தது.

இதுகுறித்து சூழலியல் ஆராய்ச்சியாளர்கள் சிலரிடம் பேசினோம். ``கோவை போன்ற பெருநகரங்களில் இந்தக் காலகட்டத்தில் காற்றுமாசு குறையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேபோல, கோவையில் கடந்த சில நாள்களாக மழை பெய்துள்ளது. பொதுவாக மழைபெய்யும்போது இந்த மாசு துகள்கள் எல்லாம் போய்விடும். அதனால்கூட, மலைகளில் காட்சி தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், ஒரு மாதத்துக்கு மேலாக போக்குவரத்து இல்லாமல் காற்று மாசு குறைந்ததும் மலைகள் தெரிவதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம்.

`மார்ச் 22... ஏப்ரல் 29!’ - ஆச்சர்யத்தை ஏற்படுத்திய கோவை பருந்து பார்வை படம்

கோவையில் மட்டுமல்ல உத்தரப்பிரதேசம் சஹரன்பூரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலை காட்சி தெரிந்துள்ளது. கேரளாவிலும் பல இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலை தெரிவதாக அங்கிருக்கும் மக்கள் கூறுகின்றனர். அந்த விதத்தில் இந்த ஊரடங்கு இயற்கைக்கு நல்ல காலமாக அமைந்துள்ளது’’ என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு