Published:Updated:

`என் மனைவிக்கு கணவனாகவும் தந்தையாகவும் இருப்பேன்!' - கனவுகளோடு சின்னக்கருப்பு

சின்னக்கருப்பு - பஞ்சு
சின்னக்கருப்பு - பஞ்சு

"பிறந்ததுல இருந்து எனக்கு கஷ்டம் பழகிட்டதால வேற ஒண்ணும் பெருசா தெரியல. நமக்குக் கல்யாணம்னு ஒண்ணுயெல்லாம் நடக்காதுனுதான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்."

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சின்னக்கருப்பு. 24 வயதான இவரின் உயரம், மூன்று அடி. இந்நிலையில் இவரைப்போல் உயரம் குறைந்த பஞ்சு என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார் சின்னக்கருப்பு. இந்தப் புதுமண தம்பதிக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

காதல் திருமணம் செய்துகொண்ட சின்னக்கருப்பு - பஞ்சு தம்பதியை ஒக்கூரில் உள்ள அவர்களது வீட்டில் சந்தித்தோம். சந்தனம், குங்குமம் கொடுத்து வரவேற்ற சின்னக்கருப்புவின் அம்மா ஆனந்தவல்லி நம்மிடம், ''எங்க வீட்டுக்காரோட பிறந்தது மொத்தம் 5 பேரு. அதுல அவரு ரெண்டாவது ஆளு. எங்க வீட்ல நாங்க நாலு பேரு. நான்தேன் மூத்தவ. அத்தமக, மாமன் மகனு என்னைய அவருக்குக் கட்டிவெச்சாக.

சின்னக்கருப்பு குடும்பத்துடன்
சின்னக்கருப்பு குடும்பத்துடன்

கூலி வேலை செஞ்சாலும் சந்தோமா இருந்தோம். ஆனா, முதல்ல பொறந்த ரெண்டு குழந்தைங்க இறந்து போச்சுக. நான் வடிக்காத கண்ணீரு இல்ல. அதுக்கு அப்புறம்தேன் சின்னக்கருப்பு பிறந்தான். பிறக்கும்போதே அவன் உடம்பு ஒரு மாதிரியாதேன் இருந்துச்சு. அதனால எங்க ஊர்ல சாமிய வேண்டிக்கிட்டு மடிப்பிச்ச எடுத்தேன். `ஆத்தா மாரி என் மகனுக்கு எதுவும் ஆகக்கூடாது'னு மடிப்பிச்ச எடுத்த காசுல தொட்டி கட்டி, அவனுக்கு மூக்குத்தி குத்தி நேந்துக்கிட்டேன்.

மண்டைக்கு பத்து போடாம என் மகனுக்கு தலமாடு காத்துவா கருப்பானு எங்க வீட்டுக்காரர் குலதெய்வமான சின்னகருப்ப வேண்டிக்கிட்டு, அந்தப் பேரையே என் மகனுக்கு வெச்சுட்டோம். ஆளு உருண்டு திரண்டு நல்லபடியா வந்தான். இருந்தாலும் அவன் எங்க போனாலும் வந்தாலும் எனக்கு கொலயப் பிடிக்கும் பிள்ளைக்கு என்னாகுமோ ஏதாகுமோனு அடிச்சுக்கிடும்.

சின்னக்கருப்பு ஜல்லிக்கட்டு மாடுடன்
சின்னக்கருப்பு ஜல்லிக்கட்டு மாடுடன்

சின்னக்கருப்புக்குத் துணையா என் மகன் மணிகண்டன் பிறந்தான். ரெண்டு பேரையும் நல்லாதான் வளர்த்தோம். சின்னக்கருப்புக்கு வளர்ச்சி கூடல. மூணு அடிதான் வளர்ந்தான். சரி பிள்ளையா பிழைச்சுக்கிட்டானேனு நிம்மதியா இருந்தோம். சின்னக்கருப்பு அப்பா கூலி வேலைதேன் பாக்குறாரு. கிடைச்ச வேலைக்குப் போவாரு. மண்ணு தோண்ட, மரம் வெட்டனு எதுக்கும் அசராம போய் குடும்பத்தக் காப்பாத்துறாரு.

சின்னக்கருப்புக்கு படிப்பு மண்டையில ஏறல. 9 வது வரைக்கும் படிச்சுட்டு நிப்பாட்டிக்கிட்டியான். ஆடு, மாடுகனா அம்புட்டு உசுரு. அதுவும் ஜல்லிக்கட்டு மாடுனா அம்புட்டுத்தேன்... தண்ணியும் கஞ்சியும்கூட வேணாம். இளையவன் மணிப்பய படிச்சுட்டு தனியார் கம்பெனிக்கு வேலைக்குப் போய்கிட்டு இருக்கான். இப்படி இருக்க டயத்துல, என் தங்கச்சி மகள அழகர்கோயில் பக்கத்துல பஞ்சஞ்தாங்கிபட்டில கட்டிக்குடுத்தோம். சித்திமக ஊர்ல இருக்கேனு என் மகன் அந்த ஊருக்குப் போக, வர இருந்தான்.

சின்னக்கருப்பு
சின்னக்கருப்பு

அப்ப அவன மாதிரியே உயரம் கம்மியா இருக்க பொண்ண பாத்ததும் அவனுக்குப் பிடிச்சுப்போச்சு. வீட்ல எங்கட்ட சொன்னான். ஆனா அவுக அப்பா அதுக்கு ஒத்துக்கிடல. அப்புறம் ரெண்டு நா(ள்) போகவட்டி நான்தேன் எடுத்துச் சொன்னேன். நாம இருக்குற வர இருப்போம், பாவம் அவன கடைசி காலத்துல யார் பாத்துக்குவா, அவனுக்குப் பிடிச்ச பொண்ணையே கட்டி வெப்போம்னு பேசுனேன்.

எங்க வீட்டுக்காரரு சரினு சொல்லிட்டாரு. அதுகப்புறம் ரெண்டு வீட்டோட சம்மதத்தோட இப்ப கல்யாணம் முடிஞ்சுருக்கு. ரெண்டு பேரும் நல்லா இருந்தா சரி" என்றார் நிம்மதி பெருமூச்சுடன்.

கல்யாண மாப்பிள்ளை சின்னக்கருப்பு, "அப்பா, அம்மா ரெண்டு பேரும் சொந்தத்துல கல்யாணம் முடிச்சுக்கிட்டதால எனக்கு முன்னாடி பொறந்த ரெண்டு குழந்தைங்களும் இறந்துட்டதா சொல்லுவாங்க. நானும் அதனாலதான் குட்டையா பிறந்தேன்னு சொல்லுவாங்க. எனக்குப் பிறந்ததுல இருந்து கஷ்டம் பழகிட்டதால வேற ஒண்ணும் பெருசா தெரியல. நமக்குக் கல்யாணம்னு ஒண்ணுயெல்லாம் நடக்காதுனுதான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

சின்னக்கருப்பு - பஞ்சு
சின்னக்கருப்பு - பஞ்சு

அப்போதான் என் மனைவி பஞ்சை பார்த்தேன். என்ன கல்யாணம் செஞ்சுகிறியானு கேட்க பயமா இருந்துச்சு. இருந்தாலும் மனசுல தைரியத்த ஏற்படுத்திக்கிட்டு, அவங்ககிட்டயும், அவங்க வீட்டுலயும் சம்மதம் வாங்கி திருமணம் செஞ்சுக்கிட்டேன். கல்யாண மறுவீடும் போய்ட்டு வந்துட்டேன். நடந்தது எல்லாம் ஒரு கனவு மாதிரி இருக்கு. என் மனைவிக்கு சின்ன வயசுல இருந்து அப்பா இல்ல. அதனால அவளுக்கு ஒரு நல்ல அப்பாவாவும் கணவனாவும் இருக்கணும்னு ஆசைப்படுறேன்'' என்றார் நேசத்துடன்.

மணப்பெண் பஞ்சு, "எனக்குக் கல்யாணம் ஆகும்னு நானும் நினைச்சுகூடப் பார்க்கல. ஆனா, இப்ப ஒரு குடும்பத் தலைவியா இங்க நிக்குறேன். எனக்கு எம்பிராய்டரிங் தெரியும். அதுக்கான வாய்ப்புதான் இந்தப் பக்கம் கிடைக்குதானு தெரியல. எனக்கு இல்லாட்டியும் என் கணவருக்கு ஏதாவது ஒரு அரசு உத்தியோகம் கிடைச்சா போதும். எங்க வாழ்க்கையில முழுசா ஒளி ஏற்பட்டதா நினைப்போம்" என்றார் வேண்டுகோளாக.

அன்பு வளரட்டும்!

அடுத்த கட்டுரைக்கு