Published:Updated:

`வலிகளுக்கு இடையில் கடுமையான பயிற்சி!'- சிவகங்கை வீராங்கனையின் ஒலிம்பிக் கனவு

``அதற்குப் பின் மனு எழுதிக் கொடுக்கும் பணியைச் செய்துவருகிறேன். செயற்கை கால்களை மாட்டிக்கொண்டு பணி செய்ய முடியாது என்பதால் அமர்ந்து செய்யும் பணியைத் தொடர்ந்து செய்கிறேன்.''

சுபஜா
சுபஜா

கால்கள் இல்லை என்பதைக் கஷ்டமாக நினைக்காமல் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளக் கடுமையான பயிற்சி எடுத்துவருகிறார் சுபஜா (27). சிவகங்கை மாவட்ட தாலுகா அலுவலகத்தில் மனு எழுதிக் கொடுக்கும் பணி செய்கிறார் சுபஜா.

Subaja
Subaja

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனையான இவருக்கு அம்மா, அப்பா என்று யாரும் இல்லாத சூழலில் தனக்குக் கிடைக்கும் 10, 20 ரூபாயைச் சேர்த்து ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு தங்கம் வெல்லத் தயாராகிவருகிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனு எழுதிக்கொண்டிருந்த சுபஜாவைச் சந்தித்துப் பேசினோம், ``எனக்குச் சொந்த ஊர் நாகர்கோவில் அருகில் உள்ள காட்டாத்துரை.

அம்மா, அப்பா இரண்டுபேரும் இறந்துட்டாங்க. நான் ப்ளஸ் டூ படிக்கும்போது ரயில் விபத்தில் எனது இரண்டு கால்களையும் இழந்துவிட்டேன். உறவினர்களுக்குப் பாரமாக இருக்கக் கூடாதென்று பெண்கள் விடுதியில் தங்கிப் படித்தேன். சிவகங்கை மாவட்டத்தில் தோழி ஒருவரின் நட்பு கிடைத்து சக்கந்தியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். 500, 1000 ரூபாய் செல்லாது என்ற சமயத்தில் அந்த நிறுவனம் செயல்படாமல் நின்றுவிட்டது.

சுபஜா
சுபஜா

அதற்குப் பின் மனு எழுதிக் கொடுக்கும் பணியைச் செய்துவருகிறேன். செயற்கைக் கால்களை மாட்டிக்கொண்டு பணி செய்ய முடியாது என்பதால் அமர்ந்து செய்யும் பணியைத் தொடர்ந்து செய்கிறேன். திங்கள் கிழமை மட்டும் இலவசமாக மனு எழுதிக் கொடுக்கிறேன். எனக்கு வாழ்க்கையில் தோற்றுவிடக் கூடாது என்ற எண்ணம் உள்ளது. என் மனதில் உள்ள வலிகளை மறக்க விளையாட ஆரம்பித்தேன். ஆனால், தற்போது லட்சியமாக மாறியுள்ளது.

அதனால் சிவகங்கை மன்னர் பள்ளி மைதானத்தில் தினமும் காலையில் பயிற்சி எடுத்துவருகிறேன். சக்கர நாற்காலி கூடைப்பந்து மற்றும் மாரத்தான் போட்டியில் ஈடுபட்டு மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் பரிசுகள் பெற்றுவருகிறேன். பாரா ஒலிம்பிக் போட்டியில் மாரத்தான் ஓட்டத்தில் பரிசு வெல்வதே என்னுடைய லட்சியம். அதற்காகத் தினமும் கடுமையான பயிற்சி எடுத்துவருகிறேன்.

மாரத்தான் ஓட பிளேட் கால்களுக்கு கோடம்பாக்கம் ஃப்ரீடம் டிரெஸ்ட் உதவி செய்தது. ஓடுவதற்கு மட்டும் அந்தக் கால்களைப் பயன்படுத்திக் கொள்வேன். கடைசியாகப் பஞ்சாப் மொகாலியில் நடைபெற்ற சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டியில் தேசிய அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளோம். இவ்வாறு பல்வேறு பரிசுகளைத் தொடர்ந்து பெற்றுவருகிறேன்.

சுபஜா வின் மெடல்கள்
சுபஜா வின் மெடல்கள்

தற்போது மாரத்தான் ஒலிம்பிக் போட்டிக்காகப் பயிற்சி எடுத்துவருகிறேன். எனக்கு எடை கூடினாலும் பிரச்னை, குறைந்தாலும் பிரச்னை. அதனால் சீராக உடலைப் பார்த்துவருகிறேன். ஒவ்வொரு முறையும் இயற்கை உபாதைகளுக்குச் செல்ல தவழ்ந்து செல்வது கொடுமையான ஒன்று. அதனால் அதிகம் தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை. இப்படி எனக்குப் பின்னால் பல கஷ்டங்கள் இருந்தாலும் ஒரு சாதனைப் பெண்ணாக உயர்ந்து, என்னை வாழவைக்கும் சிவகங்கை மண்ணுக்குப் பெருமை தேடித் தர வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம்" என்றார்.