Published:Updated:

தனிமனிதன் முதல் அரசாங்கம் வரை... டிஜிட்டல் வளர்ச்சி உண்டாக்கிய மாற்றம் என்ன?

டிஜிட்டல் துறையில் உள்ள மாற்றங்கள், அதன் ஏற்றம் மற்றும் சரிவுகள் பற்றிய கருத்தரங்கு இன்று சென்னையில் நடைபெற்றது.

டிஜிட்டல் கருத்தரங்கு
டிஜிட்டல் கருத்தரங்கு

மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன், டிஜிட்டல் பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் konrad adenauer stiftung india ஆகியவை இணைந்து நடத்திய கருத்தரங்கம் இன்று சென்னையில் நடைபெற்றது. எம்.எம்.ஏ மேனேஜ்மென்ட் மையத்தில் `டிஜிட்டல் மாற்றம் - ஒரு உண்மை’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில், பத்திரிகை மற்றும் டிஜிட்டல் துறையைச் சேர்ந்த பல்வேறு இயக்குநர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர்.

டிஜிட்டல் கருத்தரங்கு
டிஜிட்டல் கருத்தரங்கு

இந்தக் கருத்தரங்கில் பேசிய ஆனந்த விகடன் குழுமத்தின் இயக்குநர் சீனிவாசன், ``90-களில் வெளிநாடுகளில் உள்ள வாசகர்கள், ஆனந்த விகடன் பத்திரிகை, ஏன் டிஜிட்டல் தளம் தொடங்கக் கூடாது?’ எனக் கேட்டுக்கொண்டே இருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று நாங்கள் தொடங்கினோம். முதலில் நிறைய நஷ்டங்களைச் சந்தித்தாலும், பின்னர், எல்லாம் சரியானது. டிஜிட்டலின் வளர்ச்சியை நாங்கள் முறையாக அணுகியுள்ளோம். நாங்கள் டிஜிட்டலுக்குச் சென்றது தற்செயலாக நடந்தது. இன்று சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது” என்றார்.

Vikatan

ஆப்பிரிக்கா, இந்தியா, மத்திய கிழக்கு ஆலோசனை சேவைகள் நிறுவனத்தின் பங்குதாரர் பாலாஜி,``முன்பெல்லாம் மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டும், ஆனால், தற்போது சில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் செலுத்திவிடலாம். அதேபோல் மளிகை பொருள்கள், ஷாப்பிங் செய்ய வேண்டுமென்றால் நீண்டதூரம் பயணம் செய்து களைத்துப் போவோம். ஆனால், தற்போது இருக்கும் இடத்திலேயே அனைத்துப் பொருள்களையும் வாங்கிக்கொள்ள முடிகிறது.

பாலாஜி
பாலாஜி

2025-ம் ஆண்டுக்குள் ஷாப்பிங் கடைகளை கண்முன்னே கொண்டு வரும் அளவுக்கு டிஜிட்டல் துறையின் வளர்ச்சி இருக்கப் போகிறது. இதை நோக்கித்தான் பல்வேறு வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. டிஜிட்டல் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஒரு தனிமனிதன், தொழிலதிபர் மற்றும் அரசாங்கத்தைப் போன்ற அனைவரின் பெரும்பாலான வேலைகளைக் குறைத்துள்ளது. எந்தத் துறையாக இருந்தாலும் அச்சுறுத்தல் இருப்பது மிகவும் சாதாரணமானதுதான். அதைத் தாண்டி வரும் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்று குறிப்பிட்டு டிஜிட்டல் தளத்தின் மாற்றங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிப் பேசினார்.

இவரையடுத்து பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூகவலைதள பிரிவின் தலைவர் அங்கிட் லால், ``முதன்முதலில் சமூகவலைதளம் பெரிதாக்கப்படும்போது, போராட்டங்களில் பெரிய மாற்றங்கள் கொண்டுவந்தது. முன்பெல்லாம் டெல்லியில் ஒரு போராட்டம் நடந்தால் அது அங்கு இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் ஆனால், தற்போது சமூகவலைதளம் மூலம் இந்தியா முழுவதும் தெரிகிறது.

அங்கிட் லால்
அங்கிட் லால்

சினிமா பாடல்கள் ஹிட் முதல் பேரிடர் காலங்களில் மக்களுக்குத் தேவைப்படும் பொருள்கள் வரை சமூகவலைதளங்களின் உதவியுடன் கொண்டுபோய்ச் சேர்த்தது வரை டிஜிட்டல் துறையின் பங்கு அதிகமாக உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி அரசியலில் மிகப் பெரும் மாற்றமாக இருந்தது, அதற்காக நாங்கள் சமூகவலைதளத்தை அதிகமாகப் பயன்படுத்திக்கொண்டோம். அதன் மூலம் நிறைய பிரசாரம் செய்தோம். இந்தியா உட்பட உலகம் முழுவதும் டிஜிட்டல் துறை மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.