Published:Updated:

`குழந்தையைக் கையில் எடுத்து முதல்வர் கொஞ்சியபோது!'- கைதானம் பெற்ற திண்டுக்கல் நாராயணசாமி நெகிழ்ச்சி

நாராயணசாமி
நாராயணசாமி

``என் உடல்நலம் குறித்து விசாரிச்சு வாழ்த்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, என் குழந்தையைக் கையில் எடுத்துக் கொஞ்சினார். அப்போ என் மகன் சிரிச்சான்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணசாமி, பணியிடத்தில் ஏற்பட்ட மின் விபத்தில் தனது இரண்டு கைகளையும் இழந்தார். சில ஆண்டுகள் நம்பிக்கையுடன் போராடி, மூளைச்சாவு ஏற்பட்ட ஒருவரின் கைகளைத் தானம் பெற்றார். நாராயணசாமிக்கு, தமிழகத்தின் முதல் கைமாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. பிறகு, தன் காதலி நதியாவைக் கரம்பிடித்தார். இந்தத் தம்பதிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. 

நாராயணசாமி
நாராயணசாமி

இந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் ஒடுக்கம் கிராமத்தில் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. அதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும், நாராயணசாமியின் தன்னம்பிக்கை குறித்து வெகுவாகப் பாராட்டினர். தன் குழந்தையுடன் சென்று முதல்வரைச் சந்தித்த நாராயணசாமியிடம் அங்கு நடந்த நிகழ்வு குறித்துப் பேசினோம்.

"தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டில்தான், முதல்வர் கலந்துகிட்ட நிகழ்ச்சியில் நானும் கலந்துகிட்டேன். என் வீட்டுக்கே கார் அனுப்பிட்டாங்க. முதல்வர் வருவதற்கு முன்பே நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு மனைவி, குழந்தையுடன் போயிட்டேன். நிகழ்ச்சியின் தொடக்கத்துலயே என்னை மேடைக்குக் கூப்பிட்டாங்க. அமைச்சர் விஜயபாஸ்கர் சார், `நம்பிக்கையோடு கைதானம் பெற்று இன்னைக்கு நல்லா இருக்கீங்க'ன்னு பாராட்டினார். மேலும், என் குழந்தையைக் கையில் எடுத்துக் கொஞ்சினார். பிறகு, என் கைகளின் செயல்பாடு நல்லா இருக்கிறதை எல்லோரும் தெரிஞ்சுக்கணும்னு, பார்வையாளர்களைப் பார்த்து என் ரெண்டு கைகளையும் அசைக்கவும், வணக்கம் சொல்லவும் சொன்னார், அமைச்சர் விஜயபாஸ்கர் சார். அதுபோலவே செய்தேன். எல்லோரும் கைதட்டினாங்க.  

நாராயணசாமி
நாராயணசாமி

அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாருக்கு பூங்கொத்துக் கொடுத்து, எனக்கு அரசுப் பணி கொடுத்ததுக்காக நன்றி சொன்னேன். என் உடல்நலம் குறித்து விசாரிச்சு வாழ்த்தியவர், என் குழந்தையைக் கையில் எடுத்துக் கொஞ்சினார். அப்போ என் மகன் சிரிச்சான். `இக்கட்டான சூழலில் அரசு மருத்துவமனையை அணுகி, நம்பிக்கையுடன் சிகிச்சை பெற்றார். இன்று, மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார். நாராயணசாமியைப் போல பலரும் அரசு மருத்துவமனைகளை அணுகி உரிய சிகிச்சைகளைப் பெற்று மறுவாழ்வு பெறலாம்'னு முதல்வர் மேடையில் பேசினார். எனக்குச் சந்தோஷமா இருந்துச்சு.

அந்த விபத்துக்குப் பிறகு, அர்த்தமுள்ள வாழ்க்கை அமைஞ்சு, குழந்தையும் பிறந்தான். சமீபத்துலதான் என் குழந்தைக்கு தெய்வமித்ரன்னு பெயர் வெச்சேன்" என்று புன்னகையுடன் கூறுகிறார் நாராயணசாமி.

அடுத்த கட்டுரைக்கு