திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தேவிநாயக்கன்பட்டி கிராமம் உள்ளது. இங்கு உலக அமைதி, ஊர் செழிக்க வேண்டியும், நோய் தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டியும் `நிலா பெண்' என்று ஒருவரைத் தேர்வுசெய்து வழிபடுவது வழக்கம். இதற்காக இந்த கிராமத்தில் உள்ள சிறுமிகள் பொது இடத்தில் இரவு முழுவதும் அமர வைக்கப்படுவர். எந்தச் சிறுமி விடியும்வரை தூங்காமல் இருக்கிறாரோ, அந்தச் சிறுமி நிலா பெண்ணாகத் தேர்வு செய்யப்படுவார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த ஆண்டுக்கான திருவிழாவில் 20-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கலந்துகொண்டதில், விஸ்வநாதன் - விசாலாட்சி தம்பதியின் மகள் பிரத்திக்ஷா நிலா பெண்ணாகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் 3 ஆண்டுகளுக்கு நிலா பெண்ணாக இருப்பார். தேர்வு செய்யப்பட்ட சிறுமி, ஊர் எல்லையிலுள்ள சரளிமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து அவர் ஆவாரம் பூ நிரம்பிய கூடையை தலைச்சுமையாக தேவிநாயக்கன்பட்டி எடுத்து வந்தார்.
ஊர் திரும்பிய சிறுமிக்கு ஊர் மக்கள் மலர் மாலை அணிவித்தும், மலர் கிரீடம் சூட்டியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாசடச்சியம்மன் கோயிலுக்குச் சென்று சிறுமி வழிபட்டார். தொடர்ந்து ஊர் எல்லையில், முறைமாமன்களால் தென்னை ஓலையால் வேய்ந்திருந்த குடிசையில் அமர வைக்கப்பட்டார். பிறகு, பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சிறுமியை கோயிலுக்கு அழைத்து வந்தனர்.

கோயில் முன்பு சிறுமி அமரவைக்கப்பட்டு, கும்மியடித்து சடங்கு செய்யப்பட்டது. மறுநாள் காலை நிலா மறையத் தொடங்கியதும், ஆவாரம்பூ நிரம்பிய கூடையை சிறுமி தூக்கிச் சென்று அப்பகுதியிலுள்ள குளத்தில் வீசினார். தண்ணீரில் மிதந்த பூக்களில் அவர் விளக்கேற்றியதும் அந்த விளக்கு தொடர்ந்து 7 நாள்கள் எரியும் என்பது ஐதீகம்.
இந்த வழிபாட்டு முறையால் மக்கள் நோய் நொடியின்றி, ஊர் செழித்து, மழை வளம் பெருகி சிறப்போடு வாழ்வார்கள் என்பது மூதாதையர்களின் நம்பிக்கை. இதை தற்போதுவரை இப்பகுதி மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.