Published:Updated:

`இங்கு கால்நடை மருத்துவர்களின் தேவை அதிகம்!' - நுழைவுத் தேர்வில் தேசிய அளவில் சாதித்த ஓவியா

``எல்லோரும் எம்.பி.பி.எஸ், இன்ஜினீயரிங் என்றே முயற்சிக்கின்றனர். அவர்களது தேர்வாக கால்நடை மருத்துவமும் முன்னிலை பெற வேண்டும். ஏனென்றால் கால்நடை மருத்துவர்களின் தேவை இங்கு அதிகமாக உள்ளது. மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'' - ஓவியா

திண்டுக்கல்லைச் சேர்ந்த அரியநாயகம்-சுமதி தம்பதியின் மூத்த மகள் டாக்டர் அ.ஓவியா(24). இவர் திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இளங்கலை கால்நடை அறிவியல் (BVSc - Bachelor of Veterinary Science) படிப்பை 2021-ல் முடித்து, முதுநிலைப் படிப்புக்குத் தயாராகி வந்தார்.

இந்தியன் கவுன்சில் ஆஃப் அக்ரிகல்ச்சர் ரிசர்ச்(The Indian Council of Agricultural Research - ICAR) அமைப்பு ஆண்டுதோறும் முதுகலை கால்நடை அறிவியல் (MVSc - Master of Veterinary Science) படிப்புக்கான அகில இந்தியத் தேர்வை நடத்துகிறது. கடந்த செப்டம்பர் 17-ம் தேதி தமிழகத்தில் எம்.வி.எஸ்சி தேர்வு நான்கு மையங்களில் நடந்தது. இந்தத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.

ஓவியா
ஓவியா

இதில், அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் அ.ஓவியா பிடித்து சாதனை படைத்துள்ளார். அவரைப் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கால்நடைத்துறையைச் சேர்ந்தவர்கள் பாராட்டி வருகின்றனர். இவரின் தம்பி வெங்கடேஷ், வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ் படித்துவருகிறார்.

டாக்டர் அ.ஓவியாவிடம் பேசினோம். ``பள்ளிப்படிப்பை முடித்ததும் எம்.பி.பி.எஸ் படிக்கவே முயற்சி செய்தேன். சிறு மதிப்பெண் வித்தியாசத்தில் வாய்ப்புக் கிடைக்காமல் போனது. இதையடுத்து பி.வி.எஸ்சி படிப்பைத் தேர்வு செய்தேன். தொடங்கத்தில் பெரிய அளவில் ஈடுபாடு இல்லை. ஆனால் போகப்போக விலங்குகள் குறித்துப் படிப்பது பெரிய ஆர்வத்தை உண்டாக்கியது.

`முதல்வரின் முகவரி துறை' எப்படிச் செயல்படும்? - சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் விளக்கம்!

நன்றாகப் படிக்கத் தொடங்கிவிட்டேன். கொரோனா காலம் என்பதால் 2020-ல் முடிய வேண்டிய படிப்பு தள்ளிப்போனது. பி.வி.எஸ்சி முடித்தவுடன் மேற்படிப்புப் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

தமிழ்நாடு அளவில் நடத்தப்படும் தேர்வில் பங்கேற்பதை விட, அகில இந்திய அளவிலான தேர்வில் பங்கேற்றால் சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வதுடன் நல்ல உதவித்தொகை கிடைக்கும் என்று முடிவு செய்தேன். இந்தத் தேர்வுக்காக ஒன்றரை மாதங்கள் மட்டுமே படித்தேன். ஏற்கெனவே ஆழ்ந்து படித்திருந்ததால் கேள்விகள் மிகவும் கடினமாக கேக்கப்பட்டிருந்தாலும் எனக்கு எளிதாகவே இருந்தது.

டாக்டர் அ.ஓவியா
டாக்டர் அ.ஓவியா

கால்நடைகளில் மாடுகள், ஆடுகள், நாய்கள் மிகவும் அன்பானவை. அவற்றை குறித்துப் படிக்கப் படிக்க விலங்குகள் மீது அன்பு அதிகமாகிவிட்டது. தற்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு கால்நடை மருத்துவப் படிப்பு குறித்துப் பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லை. எல்லோரும் எம்.பி.பி.எஸ், இன்ஜினீயரிங் என்றே முயற்சிக்கின்றனர். அவர்களது தேர்வாக கால்நடை மருத்துவமும் முன்னிலை பெற வேண்டும். ஏனென்றால் கால்நடை மருத்துவர்களின் தேவை இங்கு அதிகமாக உள்ளது. மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு