Election bannerElection banner
Published:Updated:

`10 வருஷமா வளர்த்த காளை இப்படிப் பண்ணிடுச்சே!' - திண்டுக்கல் விவசாயிக்கு நேர்ந்த சோகம்

காளை
காளை

காளை தாக்கியதில் காயமடைந்த விவசாயி மணிவேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், ஜயர் மடம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி மணிவேல். விவசாயப் பணிகளுடன் ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்பையும் ஆர்வமாக செய்துவருகிறார். மணிவேல் 10 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுக் காளை ஒன்றை பாசமாக வளர்த்துவருகிறார். காளை வழக்கம்போல் தோட்டத்தில் மேய்ந்துகொண்டிருந்தது. தோட்டத்தில் எதையோ பார்த்து மிரண்ட காளை அங்கும் இங்கும் ஓடியது. மிரண்டு ஓடிய மாட்டைப் பிடிக்க மணிவேல் முயற்சி செய்திருக்கிறார். அப்போது கோபமாகவும் பதற்றமாகவும் இருந்த மாடு மணிவேலை குத்திச் சாய்த்தது. காளை தொடர்ந்து அவரைத் தாக்கியபடி இருந்தது.

காளை
காளை

அவரும் காளையை விடுவதாக இல்லை. கொம்பைப் பிடித்து போராடியபடி இருந்தார். ஒருகட்டத்தில் காளை அவரை வயிற்றில் குத்தியது. இதில், கடுமையாகக் காயமடைந்த அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்தார். 10 ஆண்டுகளாக பாசமாக வளர்த்த காளை மார்பில் பாய்ந்த அதிர்ச்சியில் மயக்கநிலைக்குச் சென்றுவிட்டார். தகவல் கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த அவரின் மகன் பூபதி மாட்டுடன் போராடினார். கொம்பைப் பிடித்து மாட்டைச் சாய்த்து அடக்கினார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் மணிவேலை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

உரிய நேரத்தில் கொண்டுவந்ததால் மணிவேலின் உயிர் காப்பாற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். கல்லூரி படித்துக்கொண்டிருக்கும் பூபதி, தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தந்தையைக் காப்பாற்றுவதற்காக காளையுடன் போராடிய காட்சி அங்கிருந்த பொதுமக்களை நெகிழவைத்தது.

Vikatan

10 ஆண்டுகளாக வளர்த்த காளை மார்பில் பாய்ந்த அதேநேரத்தில், தன் உயிரை மகன் காப்பாற்றிய நிம்மதியில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார் மணிவேல்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு