Published:Updated:

மதுரை: கிசான் திட்டம் டு ஸ்மார்ட் சிட்டி முறைகேடு! - கண்காணிப்புக்குழு கூட்டத்தில் விறுவிறு விவாதம்

கண்காணிப்புக்குழு கூட்டம்
கண்காணிப்புக்குழு கூட்டம்

மத்திய அரசு சார்பில் மதுரையில் நடைபெறும் கூட்டத்தில் 23 திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து மாநகராட்சியிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவீந்திரநாத் குமார் (தேனி), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), ஆட்சியர் வினய் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்,

கண்காணிப்புக்குழு கூட்டம்
கண்காணிப்புக்குழு கூட்டம்

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இக்கூட்டத்தில் மத்திய அரசின் மூலம் மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. திட்டங்கள் செயல்படுத்தப்படுவது பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறினர்.

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், `மத்திய அரசின் பிஎம் கிசான் திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதா?’ எனக் கேள்வி எழுப்பியதற்கு,

கண்காணிப்புக் குழு கூட்டம்
கண்காணிப்புக் குழு கூட்டம்

மதுரை ஆட்சியர் வினய், ``மதுரை மாவட்டத்தில் 11,000 பேர் போலியான கணக்கு மூலம் பிஎம் கிசான் நிதியுதவி பெற்றுள்ளனர், இது கண்டுபிடிக்கப்பட்டு 6,000 பேரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 7,06,000 திரும்பப் பெறப்பட்டுள்ளது. முறைகேடு பற்றி விசாரிக்க உயரதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மூன்று நாள்களுக்குள் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, முறைகேடாக பெற்ற பணம் திருப்பிப் பெறப்படும். நடப்பு ஆண்டில் மதுரை மாவட்டத்தில் 16,474 பேர் பிஎம் கிசான் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

மதுரையில் நடந்துவரும் ஸ்மார்ட் சிட்டி வேலைகள் பற்றியும், அதற்கு செலவான தொகை பற்றியும் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விகளுக்கு ஸ்மார்ட் திட்ட மேலாண்மை அதிகாரியும், மாநகராட்சி ஆணையாளருமான விசாகன் பதில் சொல்ல முடியாமல் திணறினார். ஆறு மாதங்களுக்கு முன்னர் நடந்த கூட்டத்தில் ஆணையாளர் சொன்ன செலவுத் தொகைக்கும், தற்போது கூறியிருக்கும் செலவுத் தொகைக்கும் பல கோடி ரூபாய் கூடுதலாக வந்துள்ளதை சு.வெங்கடேசன் சுட்டிக்காட்டினார். இதற்கு வருத்தம் தெரிவித்த மாநகராட்சி ஆணையாளர், முழுமையான திட்ட மதிப்பை உடனே வழங்குவதாகக் கூறினார்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

ஏழு மணி நேரம் நடந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய சு.வெங்கடேசன், ``மத்திய அரசு சார்பில் மதுரையில் நடைபெறும் 23 திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது, இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து மாநகராட்சியிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக்குழு அமைக்கப்படும். மதுரை மாவட்டத்தில் 16,474 நபர்கள் பிஎம் கிசான் திட்டத்தில் பதிவு செய்து, 11,000 நபர்கள் முறைகேடாக நிதியுதவி பெற்றுள்ளனர். ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் எடுக்கப்பட்ட மணல் எங்கே கொண்டு செல்லப்பட்டது என அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின் மூலம் மத்திய அரசின் திட்டங்கள் முறைகேடு இல்லாமல் விரைவாகச் செயல்படுத்தப்படுகின்றனவா என்று கண்காணிக்கப்படுகிறது’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு