Published:Updated:

`அத்தியாவசியப் பொருள்கள் வீட்டு வாசலுக்கே வரும்!’ -100 சதவிகித லாக் டௌனில் திருப்பத்தூர் நகரம்

கொரோனா ராட்சச ஓவியம்
கொரோனா ராட்சச ஓவியம்

நோய்ப் பரவலைத் தடுக்க ஆம்பூர், வாணியம்பாடியைத் தொடர்ந்து திருப்பத்தூர் நகரமும் தடை செய்யப்பட்ட பகுதியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில், கொரோனா கொடியத் தொற்றுக்கு இதுவரை 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் நகரைச் சேர்ந்த 5 பேர் டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டு ஊர் திரும்பினர். அவர்களில், ஒருவருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனாவைத் தடுக்கும் வகையில் திருப்பத்தூர் நகரம் முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``திருப்பத்தூரைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் கடந்த 16-ம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டது.

திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருள்
திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருள்

அதனடிப்படையில், நோய்ப் பரவலைத் தடுக்க திருப்பத்தூர் நகரம் முழுவதும் இன்று (18-ம் தேதி) முதல் மறு உத்தரவு வரும் வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. மக்கள் வெளியில் நடமாடுவதைத் தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். வெளியில் வரவேண்டாம். திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் வாகனங்களை இயக்குவதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.

நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறித் தொகுப்பு 100 ரூபாய்க்கும், மளிகைப் பொருள்கள் தொகுப்பு 500 மற்றும் 1,000 ரூபாய்க்கும் வீடு தேடி வந்து விற்பனை செய்யப்படும். பொதுமக்கள் தங்களின் வீட்டு வாசலில் நின்றபடியே பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். வயதானவர்கள், சுவாசக் கோளாறு உள்ளவர்கள், கட்டாயமாக வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும். அந்தந்தப் பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம்-களில் பணம் எடுத்துக்கொள்ளலாம். நடமாடும் வாகனங்கள் மூலம் ரேஷன் பொருள்களும் வீடு தேடி வந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்புக் கட்டுப்பாட்டு மையம்
கொரோனா வைரஸ் தடுப்புக் கட்டுப்பாட்டு மையம்

அத்தியாவசிய மற்றும் அவசரமான தேவைகளுக்கு, திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொள்ளலாம். காய்கறிகளுக்கு 9787888377, மளிகைப் பொருள்களுக்கு 9787888757, மருத்துவர் மற்றும் மருந்துகளுக்கு 9787922020, காவல் அவசர உதவிக்கு 9787927070 ஆகிய செல்போன் எண்களுக்கு போன் செய்யலாம். மேலும், 9787885003 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் தகவல்களைத் தெரியப்படுத்தலாம்’’ என்று கூறியுள்ளார். தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி ஆகிய நகரங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு