Published:Updated:

`உதவித்தொகை மட்டும் கிடைச்சா காலத்தை கழிச்சிருவோம்..!’ - முதியவர்களை நெகிழ வைத்த மாவட்ட ஆட்சியர்

முதியவர்களை நெகிழ வைத்த மாவட்ட ஆட்சியர்
முதியவர்களை நெகிழ வைத்த மாவட்ட ஆட்சியர்

``வயிற்றுப்பிழைப்புக்காகத் தான் இத செய்றோம். உதவித்தொகை எல்லாம் கிடைச்சா அத வச்சு காலத்தை கழிச்சிருவோம்’’ - முதியவர்கள்

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால், கோயில், மசூதி, தேவாலயம் என பொது இடங்களில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்த முதியவர்கள் கடந்த இரு மாதங்களாக சாப்பாட்டிற்கே சிரமப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தான், தற்போது ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு பொதுப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீண்டும் பிழைப்பு தேடி அவர்கள் இருந்த இடங்களுக்கு வந்துவிட்டனர். புதுக்கோட்டை இருதய ஆண்டவர் தேவாலயம் வாசலில் மூதாட்டி உட்பட முதியவர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது, அந்த வழியாக நகராட்சி ஆய்வு மாளிகை திறப்பு விழாவுக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர், தேவாலயம் வாசலில் முதியவர்கள் அடுத்தடுத்து உட்கார்ந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, உடனே காரில் இருந்து இறங்கி தேவாலயத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அவர்களிடம் விசாரித்தார்.

`உதவித்தொகை மட்டும் கிடைச்சா காலத்தை கழிச்சிருவோம்..!’ - முதியவர்களை நெகிழ வைத்த மாவட்ட ஆட்சியர்

ஒவ்வொருவரும் தங்களது நிலை பற்றி எடுத்துக்கூறவே, அவர்களின் கதையைக் கேட்டுக் கவலையடைந்த ஆட்சியர், முதியவர்கள் அனைவருக்கும் உடனே முதியோர் உதவித் தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தார். மேலும், மாவட்ட ஆட்சியர், ``சில தினங்களிலேயே உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்கிறேன். தயவு செய்து இனி யாசகம் பெற வேண்டாம்" என்று அன்புக் கட்டளை விதித்தார். அதோடு, அருகே இருந்த சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இவர்களுக்கு உடனே உதவித்தொகை கிடைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

இதுபற்றி முதியவர்களிடம் கேட்டபோது, ``உழைத்துச் சாப்பிட உடம்பில் தெம்பு இல்லை, ஆதரவுக்கு இப்போ யாரும் இல்லை. வயிற்றுப்பிழைப்புக்காகத்தான் இத செய்றோம். உதவித்தொகை எல்லாம் கிடைச்சா அத வச்சு காலத்தை கழிச்சிருவோம். அப்படி கிடைச்சா ஆட்சியரின் உதவியைக் காலம் இருக்க வரைக்கும் மறக்க மாட்டோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு