Published:Updated:

`முன்பணத்தைத் தர மறுக்கும் மண்டப உரிமையாளர்கள்!’ - தவிக்கும் தேனி மக்கள்; எச்சரிக்கும் கலெக்டர்

திருமண மண்டபம்
திருமண மண்டபம் ( Representational Image )

திருமண மண்டபம் மற்றும் மீட்டிங் ஹால் உரிமையாளர்களிடம் செலுத்தப்பட்ட முன்பணத்தை வாங்க முடியாமல் பலரும் சிரமத்தை சந்தித்துவருவதாகக் கூறப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக, முன்னரே திட்டமிட்ட திருமணங்கள் பல ஒத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது எளிமையாகக் கோயில்கள், வீடுகளில் நடைபெற்று முடிந்துள்ளன. இந்நிலையில், கோயில், வீடுகளில் திருமணம் நடத்திய பெற்றோர்கள், திருமண மண்டபங்களுக்குக் கொடுத்த முன்பணத்தைக் கேட்டிருக்கிறார்கள். அதற்கு, பணத்தை திரும்ப தர இயலாது என்றும், வேறு தினத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்திக்கொள்ளுங்கள் எனவும் பதில் கூறியிருக்கிறார்கள் சில திருமண மண்டப உரிமையாளர்கள்.

Corona spread
Corona spread
`70 கிலோமீட்டர் சுற்றி வருகிறோம்!’ - கொரோனா கண்காணிப்பால் அவதிப்படும் தேனி மக்கள்

இது தொடர்பாக நம்மிடையே பேசிய போடியைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர், “என் மகனுக்கு போடியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக, கோயிலில் மிக எளிமையாக, உறவினர்கள் சிலரின் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்தது. மண்டபத்திற்குக் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கேட்டேன். அவர்கள், ’வேறு தேதி ஒன்றைக் கூறுங்கள், அதில் வரவேற்பு நிகழ்ச்சி வைத்துக்கொள்ளுங்கள்’ எனக் கூறினர். சரி, கொரோனா ஊரடங்கு முடிந்து நல்ல நாள் பார்த்து சொன்னால், அது அனைத்தும் புக்கிங் எனக் கூறி, ஆறு மாதங்களுக்குப் பிறகு நல்ல நாள் உள்ளது எனக் கூறினார்கள். திருமணம் முடிந்து ஆறு மாதம் கழித்து வரவேற்பு நடத்துவது நன்றாகவா இருக்கும்.

திருமண மண்டபம்
திருமண மண்டபம்
Representational Image

எனக்காவது பரவாயில்லை. என் நண்பர் ஒருவர், அவரது மகனுக்கு வரும் மே 24 -ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர், கோயிலில் திருமணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார். அட்வான்ஸ் தொகையைக் கேட்டதற்கு, தர முடியாது எனக் கூறியது மட்டுமல்லாமல், வேறு தேதியில் திருமணத்தை நடத்திக்கொள்ளுங்கள் என கறாராகக் கூறுவிட்டனர். இதற்கு மாவட்ட நிர்வாகம்தான் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் வருத்ததோடு.

திருமண மண்டபங்கள், மீட்டிங் ஹால் உரிமையாளர்கள் , நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செலுத்திய முன்பணத்தை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட கலெக்டர் சமீபத்தில் உத்தரவிட்டது மட்டுமல்லாமல், எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

குஜராத் டு தேனி; கோயம்பேடு டிராவல் ஹிஸ்ட்ரி! - கண்காணிப்பில் கோட்டைவிடுகிறதா தேனி?

தேனி மாவட்ட கலெக்டரிடம் இது தொடர்பாகப் பேசினோம். “கொரோனா ஊரடங்கில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது. திருமண மண்டபங்கள், மீட்டிங் ஹால்கள் வைத்திருப்பவர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முன்பணத்தைக் கேட்டால், உடனே திருப்பி ஒப்படைக்க வேண்டும். யாரேனும் இது சம்பந்தமாக புகார் கூறினால், கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு