Published:Updated:

கொரோனா விழிப்புணர்வு ஓவியம் அழிப்பு -சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கமிஷனரிடம் புகார்!

அழிக்கப்படும் கொரோனா ஓவியம்
அழிக்கப்படும் கொரோனா ஓவியம்

சென்னையில் கொரோனா விழிப்புணர்வுக்காக வரையப்பட்ட ஓவியத்தை அழித்துவிட்டதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது சமூக ஆர்வலர் சென்னை போலீஸ் கமிஷனருக்குப் புகார் அனுப்பியுள்ளார்.

சென்னை குரோம்பேட்டை, நேருநகர், பால்விக்டர் தெருவைச் சேர்ந்த சமூக சேவகர் எபனேசர். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பிய புகார் மனுவில் கூறியிருப்பதாவது, `நான் கட்டுமான நிறுவனம் நடத்திவருகிறேன். தி.மு.கவில் வட்டச் செயலாளராக உள்ளேன். கட்சி பாகுபாடின்றி மக்களுக்கான பணியாற்ற நான் 50 ஆயிரம் ரூபாய் செலவில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் 100 அடி நீளம் 60 அடி அகலத்தில் சிட்லபாக்கம் மெயின் சாலையில் வரைந்திருந்தேன். அதற்கு காவல் ஆய்வாளர், நகராட்சி ஆணையர் ஆகியோரிடம் அனுமதி பெற்றுள்ளேன்.

கொரோனா விழிப்புணர்வு ஓவியம்
கொரோனா விழிப்புணர்வு ஓவியம்
கொரானா விழிப்புணர்வு ஓவியம்... சட்டப் பேரவை வாசலில் பரிசோதனை செய்யப்பட்ட முதல்வர்... #Day14 #Curfew

நகராட்சி ஆணையர் வந்து ஓவியத்தைப் பார்த்து வாழ்த்து தெரிவித்தார். ஆனால், காவல்துறையைச் சேர்ந்தவர்கள் ஓவியத்தை உடனடியாக அழிக்குமாறு உத்தரவிட்டனர். நான் அதற்கு ஏன் அதை அழிக்க வேண்டும் என்றும் மக்கள் விழிப்புணர்வு பெறுவதற்காக அரசியல் சாயமின்றி வரையப்பட்டுள்ளது என்றும் கூறினேன். ஆனால் போலீஸார் ஓவியத்தை அழிக்கும்படி கூறினர். நீங்கள் அழிக்கவில்லை என்றால் நாங்கள் அதை அழித்துவிடுவோம் என்று மிரட்டும் தொனியில் போலீஸார் என்னிடம் கூறினர். அதன்பிறகு நான், சிட்லபாக்கம் இன்ஸ்பெக்டரை அழைத்து போனில் பேசியபோது, அந்த ஓவியத்தில் கட்சியின் பெயர்கூட குறிப்பிடவில்லை, பின்னர் ஏன் அதை அழிக்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர் காவல் நிலையத்துக்கு வரும்படி கூறினார்.

இதற்கிடையில் அடையாளம் தெரியாத நபர்கள் ஓவியத்தைச் சேதப்படுத்திவிட்டனர். இந்த ஓவியத்தைச் சேதப்படுத்தின காரணத்தினால் மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய கொடிய நோயினால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திய காவல் துறை ஆய்வாளர் மீது கொலை முயற்சி வழக்கு மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும், இந்தச் தேச விரோதச் செயலில் பின்னணியில் யார், யார் உள்ளனர் என்பதைக் கண்டறியுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

புகார் மனு அனுப்பியதற்கான சான்று
புகார் மனு அனுப்பியதற்கான சான்று

இதுபோன்ற செயல்களில் இன்ஸ்பெக்டர் தொடராமலிருக்க அவரைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து எங்கள் பகுதி மக்களை கொரோனா பாதிப்பிலிருந்து காப்பாற்றும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் புகாரைப் பெற்ற பின் 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடி தகுந்த பரிகாரத்தை தேடிக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் எபனேசர் கூறுகையில், எதற்காக கொரோனா விழிப்புணர்வு ஓவியத்தை அழித்தார்கள் என்று தெரியவில்லை. ஓவியத்தை அழிக்கும்போது போலீஸாரும் ஊழியர்களும் அங்கு இருந்தனர். அதற்கான வீடியோ ஆதாரமும் என்னிடம் உள்ளது. ஆளுநர், முதல்வர், தலைமை நீதிபதி, சென்னை போலீஸ் கமிஷனர், மாநில மனித உரிமை ஆணையம் ஆகியோருக்கும் மனுவை அனுப்பியுள்ளேன் என்றார்.

சமூக ஆர்வலர் எபனேசர்
சமூக ஆர்வலர் எபனேசர்

இதுகுறித்து சிட்லபாக்கம் இன்ஸ்பெக்டர் தனசெல்வனிடம் கேட்டபோது, `கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரைவது நல்ல விஷயம்தான். அந்த ஓவியத்தில் எபனேசர் தன்னுடைய பெயரை எழுதியிருந்தார். அதன்மூலம் அவர் அரசியல் செய்தார். அதனால்தான் நெடுஞ்சாலை துறையினர் எபனேசரின் பெயரை மட்டும் அழித்தனர். காவல்துறையினர் அழிக்கவில்லை’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு