Published:Updated:

`தெருவோர மின்விளக்கில் இரட்டை இலை!' - கொந்தளிக்கும் புதுக்கோட்டை தி.மு.க

மின்விளக்குக் கம்பங்கள்
மின்விளக்குக் கம்பங்கள்

மக்கள் வரிப்பணத்தில் அ.தி.மு.கவின் கட்சி சின்னமான இரட்டை இலையை விளம்பரப்படுத்துவது போல அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குக் கம்பங்களை அகற்ற வேண்டும் - புதுக்கோட்டை தி.மு.க

புதுக்கோட்டை தி.மு.க வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் தி.மு.கவினர் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், ``புதுக்கோட்டை பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சாலையின் நடுவே, நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குக் கம்பங்கள், இரட்டை இலை வடிவத்தில் இருப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையம் முதல் மகளிர் கல்லூரி வரையிலும் 10-க்கும் மேற்பட்ட மின்விளக்குக் கம்பங்கள் அ.தி.மு.கவின் கட்சி சின்னமான இரட்டை இலை வடிவத்தில் அமைத்துள்ளனர். பொது இடங்களில், கட்சி சின்னங்களை வைக்கக்கூடாது என்பதை மீறி அரசு நிதியில் வைக்கப்பட்டுள்ள இரட்டை இலைச் சின்ன மின்கம்பங்களை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தனர்.

மின்விளக்குக் கம்பங்கள்
மின்விளக்குக் கம்பங்கள்

இதுபற்றி மனுகொடுக்க வந்தவர்கள் கூறும்போது, "வரக்கூடிய நகர்மன்றத் தேர்தலை மனதில் வைத்துதான் அ.தி.மு.க விதிகளையும் மீறி செயல்படுகிறது. அ.தி.மு.கவினர் நினைப்பது நடக்காது. மக்கள் வரிப்பணத்தில் அ.தி.மு.கவின் கட்சி சின்னமான இரட்டை இலையை விளம்பரப்படுத்துவது போல அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குக் கம்பங்களை அகற்ற வேண்டும். இல்லையென்றால், இதற்காகப் போராட்டத்தில் ஈடுபடுவோம். இதேபோல், மாவட்டத்தில் அ.தி.மு.க சார்பில் 100 அடி உயரம் உள்ள கட்சிக்கொடி அமைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. இதையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு