Election bannerElection banner
Published:Updated:

கோவை : `மிஸ்டர் வேலுமணி... அப்படியெல்லாம் உங்களை விட மாட்டோம்...' - மு.க.ஸ்டாலின் சூசகம்

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

கோவை தேவராயபுரம் பகுதியில் நடந்த மக்கள் கிராமசபைக் கூட்டத்தில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் வேலுமணியைக் கடுமையாக விமர்சித்தார்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தேவராயபுரம் பகுதியில், மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ``தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களைவிட, கோவை மாவட்டத்தில் பெரிய அராஜகம் நடந்துகொண்டிருக்கிறது. அதற்கு யார் காரணம் என்று உங்களுக்கும் தெரியும். தி.மு.க ஆட்சியில் நான் துணை முதல்வராக இருந்தபோது, உள்ளாட்சித்துறை என் வசம் இருந்தது. அப்போது `உள்ளாட்சியில் நல்லாட்சி’ என்று பெயரெடுத்தோம்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
கோவை: `அவங்களை வெளிய அனுப்புங்க’ - அ.தி.மு.க பெண் நிர்வாகியிடம் கொதித்த ஸ்டாலின்... என்ன நடந்தது?

இப்போது நடப்பதையெல்லாம் பார்த்தால், அந்தத் துறையில் இருந்ததற்கு வெட்கப்படுகிறேன். அவ்வளவு அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள். வேலுமணி ஊழலாட்சித்துறை அமைச்சராகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அதைத்தான் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். அதை இவர்கள் தடுக்கப் பார்க்கின்றனர்.

சமீபத்தில் அ.தி.மு.க-வுக்கு எதிராக கோவையில் போராடியதற்காக நம் தோழர்களைக் கைதுசெய்தனர். `அவர்களை வெளியில் விடாவிடில், காலை நான் கோவை வருவேன்’ என்று போனில் பேசினேன். நான் பேசிய 10-வது நிமிடத்தில் தோழர்களை வெளியில் விட்டனர். அந்த பயம் இருக்கணும். இன்னும் நான்கு மாதங்களில் இவர்களின் சேப்டர் முடிந்துவிடும். சீப்பை ஒளித்துவைப்பதால், கல்யாணம் நின்றுவிடாது.

கிராமசபைக் கூட்டம்
கிராமசபைக் கூட்டம்

தமிழகத்தில் கரப்ஷன், கலெக்ஷன் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தி.மு.க தேர்தல் அறிக்கை தயாராகிக்கொண்டிருக்கிறது. அதில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அம்சம் இடம் பெற்றிருக்கிறாது.

`ஸ்டாலின் பொய் சொல்கிறார். என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்காவிடில் அரசியலைவிட்டு ஒதுங்கிவிட முடியுமா?' என்று வேலுமணி எனக்குச் சவால் விடுகிறார். நான் பொத்தாம் பொதுவாக இல்லாமல் ஆதாரங்களுடன், புள்ளிவிவரங்களுடன் சொல்கிறேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சம்பந்தி, சம்பந்தியின் சம்பந்திக்கு கான்ட்ராக்ட் கொடுத்திருக்கிறார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

ரூ.6,000 கோடி மதிப்பில் அதில் ஊழல் நடந்திருப்பதாக, நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் விட மாட்டோம். இது உங்க அப்பா வீட்டு பணமா... மக்கள் வரிப்பணம்.

ரூ.450 மதிப்பிலான எல்.ஐ.டி பல்பை, இவர்கள் ரூ.3,737-க்கு வாங்கியதாக கணக்கு காண்பித்திருக்கிறார்கள். மிஸ்டர் வேலுமணி... மிஸ்டர் ஊழல்மணி... மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி அவர்களே... நான் ரெடி’.. நீங்க ரெடியா..? ஆதாரங்களுடன் சொன்னாலும், நான் உங்களை அரசியலைவிட்டுச் செல்லுங்கள் என்று சொல்ல மாட்டேன். அப்படியெல்லாம் உங்களை விட மாட்டோம்.

வேலுமணி
வேலுமணி

சட்டத்தின் முன் நிறுத்தி, அதற்கு உரிய தண்டனையை வாங்கித் தரும் செயலைத்தான் இந்த ஸ்டாலின் செய்யப்போகிறான். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக, ஓ.பி.எஸ் மற்றும் அவர்களது கூட்டணிக் கட்சிகளே ஏற்கவில்லை. அவரை எப்படி மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்?

நம் கூட்டத்துக்குப் போட்டியாக, இங்கு நாளை அ.தி.மு.க போட்டிக் கூட்டம் நடத்துகிறது. நடிகை மற்றும் பால்வளத்துறை அமைச்சரை அழைத்துவருகின்றனர். மாண்புமிகு ராஜேந்திர பாலாஜி வருகிறார். ஊழலுக்குத் தகுந்ததுபோல் உள்ளாட்சித்துறை அமைச்சர் இருப்பதுபோல, அவர் (ராஜேந்திர பாலாஜி) பால் போன்ற வடிவத்தில் அழகாக இருப்பார். இங்கே வருகிற வழியில் நிறைய பலூன்களை கட்டியிருக்கிறார்கள். அதைப் பார்த்தவுடன் எனக்கு ராஜேந்திர பாலாஜி ஞாபகம் வந்துவிட்டது.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

அம்மா மினி கிளினிக் திறப்பு நிகழ்ச்சிக்கு சென்ற ராஜேந்திர பாலாஜி, அங்கு கட்டப்பட்டிருந்த பலூன்களை, கத்திரியால் டப்பு... டப்பு என்று உடைத்தார். எவ்வளவு கேவலம் இது... அதனால், இரவோடு இரவாக பலூன்களை எடுத்துவிடுங்கள். இல்லாவிட்டால் ராஜேந்திர பாலாஜி அதை உடைத்துவிடுவார் என்று கூறியிருக்கிறேன். கூட்டத்தை நடத்திக்கொள்ளுங்கள். ஆனால், நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கோ, மக்கள் கேட்கும் கேள்விகளுக்கோ பதில் சொல்ல யோக்கியதை இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பினார்.

இந்தநிலையில், கடந்த ஆண்டு ஜூனியர் விகடன் இதழில், `பினாயில் முதல் மோட்டர் பம்ப் வரை... ஊழலோ ஊழல்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், கோவை ஊராட்சிகளில் நடந்த ஊழல்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கிடைத்த ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தோம். அந்தத் தகவலை மேற்கோள்காட்டி பேசிய ஸ்டாலின், கோவையைச் சேர்ந்த டேனியல் ஜேசுதாஸ் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் சில ஆதாரங்களைப் பெற்றிருக்கிறார். சாக்கடைக்குப் பயன்படுத்தும் டிச்சு கொத்து ஒன்றின் விலை ரூ.130. அதற்கு வேலுமணி ரூ.1,010-க்கு விலை போட்டிருக்கிறார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
பினாயில் முதல் மோட்டார் பம்ப் வரை... ஊழலோ ஊழல்!

ரூ.170 மதிப்பிலான சுண்ணாம்பு பவுடருக்கு, ரூ.842 விலை போட்டிருக்கிறார்கள். சராசரியாக ஒரு ஊராட்சியில் மட்டும் ஒரு கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கும். அந்த வகையில் பார்த்தால் தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஊராட்சிகள் இருக்கின்றன. இவற்றில் 12,000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருக்கிறது. ஊழல் மணியான வேலுமணிக்கு உரிய பாடத்தைக் கற்பிக்க வேண்டும்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு