Published:Updated:

`உடம்பப் பார்த்துக்கோங்க' - 1 ரூபாய் இட்லி கமலாத்தாள் பாட்டியிடம் நலம் விசாரித்த ஸ்டாலின்

கமலாத்தாள் பாட்டி
கமலாத்தாள் பாட்டி

கோவையில் 1 ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டியைத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

கோவைக்கு எண்ணற்ற சிறப்பம்சங்கள் இருக்கின்றன. அதில் ஒரு முக்கிய சிறப்பம்சம்தான் கமலாத்தாள் பாட்டி. அவருக்கு வயது 85. ஜி.எஸ்.டி, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களைக் கட்டி உணவுப் பொருள்களின் விலையை ஏற்றிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், வடிவேலாம்பாளையத்தைச் சேர்ந்த கமலாத்தாள் பாட்டி 1 ரூபாய்க்கு இட்லி விற்று, தமிழக மக்களின் மனதில் தனி இடம் பிடித்தார்.

கமலாத்தாள் பாட்டி
கமலாத்தாள் பாட்டி

காலம் முழுவதும் ஒரு ரூபாய்க்குதான் இட்லி விற்பேன் என்று சொன்ன கமலாத்தாள் பாட்டிக்கு இது சோதனை காலம். நாடே ஊரடங்கால் முடங்கிப் போய் கிடக்கிறது. வெளியூரில் இருந்து வந்தவர்கள் மற்றும் உள்ளூரில் இருப்பவர்கள் எனத் தினமும் 400 பேருக்கு மேல் உணவளித்து பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறார் கமலாத்தாள்.

ஊரடங்கால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. ரூ.100-க்கு விற்றுவந்த பொட்டுக்கடலை மற்றும் உளுந்து இப்போது ரூ.150-க்கு விற்கப்படுகிறது. அதேபோல, ரூ.150-க்கு விற்கப்பட்ட மிளகாய் இப்போது ரூ. 200-க்கு விற்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கமலாத்தாள் பாட்டி ஒரு ரூபாய்க்குதான் இட்லியை விற்று வருகிறார். ஊரடங்கு உத்தரவால் கமலாத்தாள் பாட்டியும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து, அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கமலாத்தாள் பாட்டியுடன் வீடியோ காலில் பேசியள்ளார். கமலாத்தாள் பாட்டிக்கு உதவி செய்த தி.மு.க-வினர், அவரை ஸ்டாலினுடன் பேச வைத்தனர். ``உங்க ஊரு, வயசு என்ன?” என்று ஸ்டாலின் கேட்க, ``என் வயசு 85 சாமி, ஊரு வடிவேலாம்பாளையம்” என்று பதிலளித்தார் கமலாத்தாள்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ``உங்ககூட யாரு இருக்காங்க, என்ன உதவி வேணும்?” என்று கேட்டார். அதற்கு கமலாத்தாள், ``கூட பசங்க இருக்காங்க. கேஸ் வாங்க பணம், அரிசு, பருப்பு கொடுத்தாங்க” என்று கூற, ``சரி வேற ஏதாவது உதவி வேணும்னாலும் சொல்லுங்க. ஜாக்கிரதையா இருங்க. உடம்பப் பார்த்துக்கோங்க” என்று நலம் விசாரித்தார் ஸ்டாலின். இதுகுறித்து கமலாத்தாள் பாட்டியிடம் கேட்டோம்.

கமலாத்தாள் பாட்டி
கமலாத்தாள் பாட்டி

``கொரோனா காலம் கஷ்டமாதான் இருக்கு. பேரனுக்கும் வேலை இல்ல. விலைவாசியும் அதிகமாகிடுச்சு. ஆனா, பல பேரு எங்கயும் போக முடியாம இங்க இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் நான்தான் சமைக்கறேன். எனக்கு கஷ்டமா இருந்தாலும், விலை ஏத்த மனசு வரல. எப்படியாச்சும் சமாளிச்சு, ஒரு ரூபாய்க்குதான் இட்லி விற்பேன். நிறைய பேரு அவங்கனால முடிஞ்ச உதவி செய்யறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று முடித்தார்

அடுத்த கட்டுரைக்கு