Published:Updated:

கொரோனாவால் செயலிழந்த குழந்தையின் கால்கள்; ஊசியால் மீட்ட மருத்துவர்கள்; என்ன நடந்தது?

Egmore Child hospital
Egmore Child hospital

எதிர்பாராத விதமாக குழந்தையின் கால்கள் அசைவில்லாமல் செயலிழந்துள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதனையடுத்து குழந்தை மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

நாமக்கல்லைச் சேர்ந்த ஞானசேகரன் - சுதா தம்பதியின் மகள் சரிஹாசினி. இரண்டரை வயதாகும் சரிஹாசினிக்கு கடந்த மாதம் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கோவையிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. குழந்தையைத் தொடர்ந்து பெற்றோருக்கும் தொற்று உறுதியானது.

அதற்குப் பிறகு எதிர்பாராத விதமாக குழந்தையின் கால்கள் அசைவில்லாமல் செயலிழந்துள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதனையடுத்து குழந்தை மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு ஏற்பட்டுள்ள நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் குழந்தையின் கால்கள் செயல்பட, ஒரு வாரத்தில் சரிஹாசினி நடக்க ஆரம்பித்துவிட்டார்.

கோவிட் தொற்றுக்குப் பிறகு கால்கள் செயலிழக்க காரணம் என்ன, செயலிழந்த கால்கள் எப்படி மீண்டும் செயல்படத் தொடங்கின என குழந்தைக்குச் சிகிச்சை அளித்த குழந்தை நல மருத்துவரும், தமிழ்நாடு பச்சிளங்குழந்தைகள் மற்றும் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுகளின் பொறுப்பு அதிகாரியுமான சீனிவாசனிடம் கேட்டோம்.

மருத்துவர் சீனிவாசன்
மருத்துவர் சீனிவாசன்

`Guillain-Barre syndrome' என்றால் என்ன?

``சரிஹாசினிக்கு `குலியன் பாரி சிண்ட்ரோம்' (Guillain-Barre syndrome) என்ற அரிதான நோய் பாதித்திருந்தது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படக்கூடியது. காம்பெலோபாக்டர் (Campylobacter), மைக்கோ பிளாஸ்மா (myco plasma), Epstein-Barr(EP) வைரஸ், சைடோமெகலோ வைரஸ் (cytomegalovirus) போன்ற நுண்ணுயிரிகள் தாக்கிய பத்து நாள்களுக்குள் கால் செயலிழப்பை ஏற்படுத்தும் அரிதான நரம்பியல் நோய். தற்போது கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வீரியம் காரணமாக இரண்டாவது நாளே குழந்தையின் கால்கள் செயலிழந்துள்ளன."

இந்த நோய் பாதிப்பு யாருக்கு ஏற்படும்?

``நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாலோ அல்லது வேறெந்த குறிப்பிட்ட பிரச்சனைகளாலோ குலியன் பாரி சிண்ட்ரோம் ஏற்படுவதில்லை. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் குழந்தைகளுக்குகூட ஏற்படும். நோய் எதிர்ப்பு மண்டலத்தில் குறிப்பிட்ட வைரஸ் அல்லது பாக்டீரியா ஏற்படுத்தும் தாக்கத்தின் மூலமாகவே இந்த நோய் ஏற்படுகிறது. அதனால் எந்தெந்த குழந்தைகளுக்கு ஏற்படும், யாருக்கு வராது என்று உறுதியாகக் கூற முடியாது. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் இந்நோயால் பாதிக்கப்படலாம்."

இதற்காக குழந்தைக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது?

``இதுவரை மற்ற பாக்டீரியா, வைரஸ் தொற்றுகளில் மட்டுமே பார்த்த குலியன் பாரி நோய், கோவிட் வைரஸ் பாதிப்பால் ஏற்படுவது இதுவே முதன்முறை. குழந்தைக்கு நோய் கண்டறியப்பட்டதும் தாமதிக்காமல் சென்னை, எழும்பூர் குழந்தைகள்நல மருத்துவமனைக்கு வந்ததால் 25,000 ரூபாய் மதிப்புள்ள இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) ஊசியைச் செலுத்தி குழந்தையைக் காப்பாற்றினோம். அந்த ஊசியின் காரணமாக ஒரு வாரத்திலேயே குழந்தை காலூன்றி நடக்கத் தொடங்கிவிட்டாள்."

Baby - Representative Image
Baby - Representative Image
Photo by Kristina Paukshtite from Pexels
Covid Questions: `குலியன் பாரி சிண்ட்ரோம்' பாதிப்பு இருந்தது; நான் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

அதிக குழந்தைகள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதா?

``இது ஓர் அரிதான நோய்தான். கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. பெரியவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டதாலும், தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாலும், மூன்றாவது அலை வந்தால், அதில் குழந்தைகள் பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டாலும் குழந்தைகளின் எதிர்ப்புசக்தி அதிகமாக இருக்கும். குழந்தைகளின் நுரையீரல் எளிதாக பாதிக்கப்படாது. அவ்வாறு பாதித்தாலும் விரைவில் குணமாகிவிடுவார்கள். எனவே குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்றோ குலியன் பாரி போன்ற அரிதான பிரச்னைகள் ஏற்படும் என்றோ அஞ்சவேண்டாம்".

அடுத்த கட்டுரைக்கு