Published:Updated:

தஞ்சை: `கொரோனா வார்டில் பிறந்தநாள் கேக்; மறக்க முடியாத நாள்!’ - நெகிழ வைத்த கலெக்டர்

கொரோனா வார்டு
கொரோனா வார்டு

நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த கலெக்டர் கோவிந்தராவ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

பட்டுக்கோட்டையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவருக்கு பிறந்த நாளை என்பதை அறிந்த டாக்டர்கள், கொரோனா சிகிச்சை மையத்திலேயே அந்த இளைஞரை கேக் வெட்டி கொண்டாட வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைவரையும் உற்சாகபடுத்துவதற்காக இதனை செய்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

டாக்டர் உடன் கொரோனா சிகிச்சையிலிருக்கும் இளைஞர்
டாக்டர் உடன் கொரோனா சிகிச்சையிலிருக்கும் இளைஞர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த கலெக்டர் கோவிந்தராவ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்காக பட்டுக்கோட்டையில் உள்ள புதிய குடிசை மாற்று வாரிய கட்டடத்தை கொரோனா சிகிச்சை மையாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருவதுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த 125 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தனியார் ஹோட்டலில் பணியாற்றி வந்த பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மதன் (25) என்ற இளைஞரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் பெற்று வந்துள்ளார். அந்த மையத்தில் சிகிச்சையளித்து வரும் டாக்டர்கள் அவருடைய பதிவேட்டை பார்த்ததில் மதனுக்கு பிறந்த நாள் என்பதை அறிந்துகொண்டனர்.

பிறந்த நாள் கேக் வெட்டும் மதன்
பிறந்த நாள் கேக் வெட்டும் மதன்

மேலும் கொரோனா வார்டிலேயே மதனின் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்ததுடன், இது தொடர்பாக பணியில் இருந்த டாக்டர் நியூட்டன், செவிலியர் ஒருங்கிணைப்பாளர் வசுமதி ஆகியோர், இதனை கலெக்டர் கோவிந்தராவிடம் தெரிவித்தனர். நல்ல விஷயம் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளதால் ஒரு வித மன அழுத்தத்தில் இருப்பார். அந்த இளைஞர் பிறந்தநாளை கொண்டாடுவதன் மூலம் அவரின் மன அழுத்தம் நீங்கும்.

இதே போல் அங்கு சிகிச்சையிலிருக்கும் அனைவருக்கும் இது உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் தரும் என் சார்பில் கேக் வாங்கி அந்த இளைஞருக்கும் மட்டுமல்ல அனைவருக்கும் சர்ப்ரைஸ் ஏற்படுத்தும் விதமாக இதனை செய்யுங்கள் என உற்சாகமளித்தார்.

பிறந்த நாள் கேக்
பிறந்த நாள் கேக்

இதனை தொடர்ந்து டாக்டர் நியூட்டன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாட்டை செய்தார். கேக்கில் ஹாப்பி பர்த்டே மதன் பை கலெக்டர் என எழுதப்பட்டு கேக் வாங்கி வரப்பட்டது. பின்னர் டாக்டர்கள், செவிலியர்கள், துாய்மை பணியாளர்கள் என பலரும் சிகிச்சை மைய வளாகத்திற்கு வந்ததுடன் மதன் மற்றும் சிகிச்சையிலிருந்த அனைவரையும் வர வைத்தனர்.

பின்னர் மதனிடம் கேக் வெட்டுவதற்கான கத்தியைக் கொடுத்து இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மதன் என டாக்டர்கள் வாழ்த்திவிட்டு கேக்கை வெட்ட வைத்தனர். இதில் நெகிழ்ச்சியடைந்த மதன் இதனை நான் எதிர்பார்க்கலை, இந்த நாள் எனக்கு பொன்நாள் என ஆனந்தத்தில் கண்கள் கலங்க கேக்கை வெட்டினார்.

கொரோனா சிகிச்சை மையம்
கொரோனா சிகிச்சை மையம்

அப்போது அங்கிருந்த டாக்டர்கள் உள்ளிட்ட பலரும் கைதட்டி பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடி உற்சாகப் படுத்தினர். இதனை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்த பலரும் தங்களது செல்போனில் போட்டோ, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்த இளைஞருக்கு பிறந்த நாள் கொண்டாடிய டாக்டர்கள் உள்ளிட்ட குழுவினருக்கு வாழ்த்துகள் குவிந்தது.

இது குறித்து கலெக்டர் கோவிந்தராவ் கூறியதாவது; ``கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மனதளவில் பாதிப்பு ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக, அவர்களுக்கு தினமும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டுவதுடன், யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சிகிச்சையில் இருப்பவர்களுடன் அன்பாக நடந்து கொள்வதால் பலர் சீக்கிரமே உடல் நலம் தேறி வீட்டிற்கு திரும்பி செல்கின்றனர்.

கலெக்டர் கோவிந்தராவ்
கலெக்டர் கோவிந்தராவ்

இந்நிலையில் அந்த இளைஞரை மட்டுமல்ல அனைவரையும் உற்கசாகபப்படுத்த வேண்டும் என்பதற்காக டாக்டர்களின் ஏற்பாட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது அங்கிருந்த அனைவரும் தங்களை ஒரே குடும்பமாக எண்ணி உற்சாகம் அடைந்ததுடன், மனசோர்வு விலகி தன்னம்பிக்கையும் பெற்றதாக தெரிவித்தார்.

இது குறித்து மதன் கூறியதாவது, `எத்தனையோ பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறேன். என்னடா பிறந்த நாள் நேரத்தில் சிகிச்சையில் இருக்கிறோமே என்ற கவலை உள்ளுக்குள் இருந்தது. ஆனால், கலெக்டர் சார்பில் கேக் வாங்கி வந்து என்னை கேக் வெட்ட வைத்து கொண்டாட வைத்ததன் மூலம் இந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றிவிட்டனர். டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பல பணிச்சுமையில் இருக்கும் நிலையிலும் என்னை போன்றவரை சிரிக்க வைக்கும் செயலில் ஈடுபட்ட வைப்பது பெருமையை தருகிறது. இந்த அன்பே கொரோனாவை சீக்கிரமே விரட்டியடித்தும் விடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு