Published:Updated:

`நோட்டீஸ் கொடுத்தும் முடிவுக்கு வரவில்லை!’ -அரசின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத மருத்துவர்கள்

அரசு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் வேறு வழியில்லாமல் தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது.

மருத்துவர்கள் போராட்டம்
மருத்துவர்கள் போராட்டம்

அரசு மருத்துவர்களுக்கு மற்ற மாநிலங்களில் வழங்கப்படும் சம்பளத்துக்கு நிகரான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய அரசு மருத்துவர்களின் போராட்டம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள், `அவசரப் பிரிவு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளுக்கு இடையூறு இல்லாத வகையில்தான் போராட்டம் நடைபெறுகிறது' எனத் தெரிவித்தனர்.

மருத்துவர்கள் போராட்டம்
மருத்துவர்கள் போராட்டம்

எனினும் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் வேறு வழியில்லாமல் தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் நிலையும் ஏற்பட்டது. நாளுக்குநாள் அதிகரித்த மருத்துவர்களின் போராட்டம் அரசின் கடுமையான எச்சரிக்கையைத் தாண்டியும் நீடித்து வருகிறது.

இதனிடையே, அங்கீகரிக்கப்பட்ட அமைப்பான அரசு மருத்துவா் சங்கத்தைச் சோ்ந்தவா்களும் இருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தனா். அவா்களுடன் அமைச்சா் விஜயபாஸ்கா், சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ் ஆகியோர் நடத்திய பேச்சுவாா்த்தை காரணமாக போராட்டத்தைக் கைவிடுவதாக அவா்கள் அறிவித்தனா். ஆனால், ஃபோக்டா அமைப்பைச் சோ்ந்த மருத்துவா்கள், போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

விஜயபாஸ்கா்
விஜயபாஸ்கா்

இந்தநிலையில், சென்னையில் செய்தியாளா்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா், ``மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலித்து நல்ல முடிவெடுக்கும். மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு உடனடியாக மருத்துவா்கள் பணிக்குத் திரும்ப வேண்டும். அவ்வாறு போராட்டத்தைக் கைவிடாத மருத்துவா்கள் மீது பிரேக் இன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டு புதிய மருத்துவா்கள் நியமிக்கப்படுவார்கள்” என்றார் உறுதியான குரலில்.

அமைச்சர் எச்சரித்த பிரேக் இன் வழங்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் பணியில் இருந்த காலம் கருத்தில் கொள்ளப்படமாட்டாது. ஆயினும், அரசின் எச்சரிக்கையை மீறி போராட்டம் நடைபெற்று வருகிறது.

மருத்துவர்கள் போராட்டம்
மருத்துவர்கள் போராட்டம்

இந்த நிலையில், 7-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுக்கு பிரேக் இன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் மருத்துவக் கல்லூரி டீன் உள்ளிட்டோர் மூலம் பிரேக் இன் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவக்கல்லுரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மருத்துவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் இன்று மாலைக்குள் பணிக்கு வராமல் இருந்தால், காலிப் பணியிடங்களாக அறிவித்து மாற்று மருத்துவர்களை நியமிக்க அரசு தயங்காது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

`நோட்டீஸ் கொடுத்தும் முடிவுக்கு வரவில்லை!’ -அரசின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத மருத்துவர்கள்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்ற மருத்துவர்களையும் தற்காலிக மருத்துவர்களையும் உள்ளே அனுமதிக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``அரசு மருத்துவர்களின் போராட்டத்தை அரசு வேடிக்கை பார்க்காது. போராட்டம் தொடர்ந்தால் மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்’’ என்றார்.