Published:Updated:

தூத்துக்குடி: மின் இணைப்புக்கு கழிப்பறை அவசியமா? - இருளில் தவிக்கும் வயதான தம்பதியர்

இளையரசனேந்தல்
இளையரசனேந்தல்

தூத்துக்குடியில், வசிக்கும் வீட்டில் கழிப்பிடம் அமைக்கப்படவில்லை என்பதற்காக மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பு தர மறுத்ததால், வயதான தம்பதியர் இருளில் வசித்துவருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய இரு மகன்களும் தனியே வசித்துவருவதால், இவர் தன் மனைவி கஸ்தூரியுடன் வசித்துவருகிறார். கடந்த 23 ஆண்டுகளாக அந்த கிராமத்தில் சிறிய அளவில் தீப்பெட்டி கம்பெனி நடத்திவந்தார். கடந்த 2015-ம் ஆண்டு போதிய வருமானம் இல்லாததால் தீப்பெட்டி கம்பெனியை மூடிவிட்டார். இதை முறைப்படி அரசு அதிகாரிகளுக்குத் தெரிவித்ததுடன், தனது கம்பெனிக்காகப் பெற்றிருந்த மின் இணைப்பு குறித்து கலிங்கப்பட்டியிலுள்ள மின்வாரிய அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்து, துண்டித்துவிட்டார்.

மனைவி கஸ்தூரியுடன் சீனிவாசன்
மனைவி கஸ்தூரியுடன் சீனிவாசன்

இந்நிலையில், சீனிவாசன் தன் மனைவி கஸ்தூரியுடன், முன்னர் தீப்பெட்டி கம்பெனி வைத்திருந்த இடத்திலிருந்த அறையைத் தன்னிடமிருந்த சேமிப்புப் பணத்தின் மூலமாக வீடாக மாற்றி, தற்போது வசித்துவருகிறார். அறையை வீடாக மாற்றியதற்கு முறைப்படி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் மனு அளித்து, வீட்டுத் தீர்வை ரசீதும் பெற்றிருக்கிறார். வீட்டு மின் இணைப்புக்காக விண்ணப்பித்த நிலையில், ஆய்வுக்கு வந்த அதிகாரிகள், `வீட்டில் கழிவறை இல்லை. கழிவறை இருந்தால்தான் மின் இணைப்பு தரப்படும்’ எனக் கூறிவிட்டுச் சென்றனர். அதனால் இவர்கள் மூன்று மாதங்களுக்கும் மேலாக இருளில் வசித்துவருகிறார்கள்.

இது குறித்து சீனிவாசனிடம் பேசினோம். ``என்னோட ரெண்டு மகன்களும் திருமணமாகி தனியே வாழுறாங்க. இந்த கிராமத்துல நானும் என் மனைவியும்தான் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். தொடர் நஷ்டம் ஏற்பட்டதுனால தீப்பெட்டி கம்பெனியை மூடிட்டேன். அந்த வணிக மின் இணைப்பைத் திரும்ப ஒப்படைத்து, துண்டித்துவிட்டேன். மகன்கள் கைவிட்ட நிலையில் அதே இடத்தில் குடோனை வீடாக மாற்றி வாழ்ந்துக்கிட்டு வர்றோம். வீட்டுவரி ரசீது முதல் மின்வாரிய அதிகாரிகள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிச்சுட்டேன். வீட்டுக்கு ஆய்வுக்கு வந்த அதிகாரிகள், ‘கக்கூஸ் இல்லையா... அப்போ கரன்ட் கிடையாது.

சீனிவாசனின் வீடு
சீனிவாசனின் வீடு

முதல்ல கக்கூஸை கட்டுங்க. கரன்ட் வேணும்னா வணிக இணைப்புல கரன்ட் கனெக்‌ஷன் தர்றோம்’னு சொல்லிட்டு போயிட்டாங்க. மூணு மாசமா இருட்டுலதான் இருக்கோம். ராத்திரி 8 மணிக்கு சாப்பிடுற உணவை மாலை 4 மணிக்கே தயார் செஞ்சுவெச்சுடுவோம். 8 மணிக்கு மெழுகுவத்தி பொருத்திவெச்சுதான் சாப்பிடுறோம். ரெண்டு மகன்களும் மாசத்துக்கு ஆளுக்கு ஆயிரம் ரூபா கொடுக்குறாங்க.

100 நாள் வேலைக்குப் போகறதுனால கிடைக்குற வருமானத்தைவெச்சும், ரேஷன்ல போடுற அரிசி, பருப்பு, சர்க்கரையைவெச்சும் ரெண்டு பேரும் காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கோம். சாப்பாட்டுக்கே வழியில்லை. கழிப்பறை எப்படிய்யா கட்டுறது?” என்றார் வேதனையுடன். இளையரசனேந்தல் கிராமம் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தாலும், மின்சார வாரிய அலுவலகம் தென்காசி மாவட்டத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக கலிங்கப்பட்டி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாபியிடம் பேசினோம்,

வீட்டில் சீனிவாசன், கஸ்தூரி
வீட்டில் சீனிவாசன், கஸ்தூரி

``வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க குடியிருப்புக்கான அமைப்பு, சமையலறை இருந்தாலே மின் இணைப்பு வழங்கலாம். கழிவறைக்கும் மின் இணைப்புக்கும் சம்பந்தமில்லை. நான் இந்த அலுவலகத்துக்கு வேலைக்கு வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. இதற்கு முன்பு பணியிலிருந்த அதிகாரிகள் எதனால் இணைப்பு தரவில்லை, என்ன காரணம் சொன்னார்கள் என்பதைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. உடனே ஆய்வு செய்து மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கிறேன’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு