Published:Updated:

`எனக்கு ராமு இன்னொரு பிள்ளை மாதிரி!’ - நாய்க்கு மாஸ்க் மாட்டி கரிசனம் காட்டும் மனிதர்

மாஸ்க் மாட்டப்பட்ட ராமுவோடு அசோகன்
மாஸ்க் மாட்டப்பட்ட ராமுவோடு அசோகன்

கால்நடை மருத்துவரிடம் தடுப்பு ஊசி போடுவதற்காகத் தனது நாய்க்கு மாஸ்க் அணிந்து இருசக்கர வாகனத்தில் ஏற்றி அழைத்து வந்தார். மனிதர்களே முகக்கவசத்தைக் கழற்றி எறியும் நேரத்தில், தனது மூக்கில் அசௌகர்யமாக அணியப்பட்ட அந்த மாஸ்க்கை உதறி எறியாமல், அந்த நாய் அப்படி அணிந்திருந்தது.

கொரோனா வைரஸின் தீவிரம் தெரியாமல் பலரும் வெளியில் சுற்றுவது, சானிடக்சரைக் கொண்டு கை கழுவ மறுப்பது, மாஸ்க் அணிய மறுப்பது என்று செயல்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

மாஸ்க் மாட்டப்பட்ட ராமுவோடு அசோகன்
மாஸ்க் மாட்டப்பட்ட ராமுவோடு அசோகன்

இந்த நிலையில், கரூரைச் சேர்ந்த ஒருவர், தான் மட்டும் மாஸ்க் அணியாமல், தான் செல்லமாக வளர்க்கும் நாய்க்கும் மாஸ்க் அணிவித்து அழைத்துச் செல்வது, பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

பொள்ளாச்சி டு அரியலூர்.. கைக்குழந்தையுடன் தவித்த 7 பேர்!- தக்க நேரத்தில் உதவிய ஊராட்சிமன்ற தலைவி

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலக மக்களைப் பீதியில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறது. அதற்கு மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், மக்கள் வீடுகளில் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிப்பது ஒன்றுதான் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் ஒரே வழி என்று சொல்லப்படுகிறது. இதனால், இந்தியாவில் வரும் மே 3-ம் தேதி வரை தொடர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் எல்லா மாவட்ட எல்லைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

அசோகனோடு வாக்கிங் செல்லும் ராமு
அசோகனோடு வாக்கிங் செல்லும் ராமு

மக்கள், அத்தியாவசியப் பொருள்களை வாங்க மட்டுமே வெளியில் அனுமதிக்கப்படுகிறார்கள். மக்கள் உள்ளே கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்க ஏதுவாக, வெளியில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறையினர், காவல்துறையினர், தூய்மை செய்யும் பணியாளர்கள் என்று பல தரப்பினரும் பணி செய்கிறார்கள்.

வெளியில் வரும் மக்களை அடிக்கடிக் கைகழுவச் சொல்லி வலியுறுத்துவது, மாஸ்க் அணியச் சொல்வது என்று மருத்துவர்கள் அறிவுரை சொன்னாலும், பலரும் மாஸ்க் அணிந்து வருவதை அசௌகர்யமாக நினைத்து, வெறுமனே வருவது வாடிக்கையாக உள்ளது. ஆனால், கொரோனா வைரஸின் தீவிரத்தை உணர்ந்த பலர், தகுந்த பாதுகாப்புகளோடு வெளியில் வருகிறார்கள்.

ராமு
ராமு

இன்னும் சிலர் ஒருபடி மேலே போய், தங்களுக்கு மட்டுமல்ல, தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்ற முன்னெச்செரிக்கையில் மாஸ்க் அணிவிக்கும் ஆச்சர்ய நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. அப்படி, தான் வளர்க்கும் ராமு என்கிற நாய்க்கு மாஸ்க் அணிந்து வெளியில் கூட்டி வந்து, எதிர்படுபவர்களிடம் எல்லாம் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறார், அசோகன். கரூர் மாவட்டம், பசுபதிபாளையத்தைச் சேர்ந்தவர் அசோகன்.

கால்நடை மருத்துவரிடம் தடுப்பு ஊசி போடுவதற்காகத் தனது செல்ல வளர்ப்பு பிராணியான, ராமு என்கிற நாய்க்கு மாஸ்க் அணிந்து இருசக்கர வாகனத்தில் ஏற்றி அழைத்து வந்தார். மனிதர்களே முகக்கவசத்தை கழற்றி எறியும் நேரத்தில், தனது மூக்கில் அசௌகர்யமாக அணியப்பட்ட அந்த மாஸ்க்கை உதறி எறியாமல், அந்த நாய் அப்படி அணிந்திருந்தது. அதைப் பார்த்து வியந்த நாம், அசோகனிடமே பேசினோம்.

"நான், என் மனைவி, ஒரு மகனு மூணு பேரு வீட்டுல இருக்கிறோம். நான் தனியார் சிமென்ட் ஆலையில் மெயின்டனன்ஸ் பிரிவுல கடந்த 30 வருஷமா வேலை பார்க்கிறேன். எனக்கு செல்லப் பிராணி வளர்க்குறதுல அதீத ஆர்வம். இந்த ராமுவை இரண்டரை வருஷத்துக்கு முன்னாடி வாங்கிட்டு வந்து, பிள்ளை மாதிரி வளர்த்துக்கிட்டு வர்றேன். எங்க மூணு பேர்கிட்டயும் ராமு ரொம்ப பாசமா இருப்பான். அதுவும் நான் எங்கே போனாலும் என்கூடவே வருவான். நான் வேலையைவிட்டு வந்தாதான், அவன் சாப்பிடுவான். அதுவும் என் கையால் சாப்பாடு வைத்தால்தான், அவன் சாப்பிடுவான். அந்த அளவுக்கு அவனுக்கு என்மேல் பிரியம் அதிகம். நானும் அவனை ஒருநிமிஷம் பிரிஞ்சு இருக்க மாட்டேன்.

மாஸ்க் மாட்டப்பட்ட ராமுவோடு அசோகன்
மாஸ்க் மாட்டப்பட்ட ராமுவோடு அசோகன்

எனக்கு அவன் இன்னொரு பிள்ளை மாதிரி. இந்த நிலையில்தான், கொரோனா பாதிப்பு வந்து, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆரம்பத்துல எங்களுக்கு மட்டும்தான் மாஸ்க் வாங்கினோம். ஆனால், ஏதோ நாட்டுல புலி ஒன்றுக்கு கொரோனா தொற்று இருப்பது பற்றிய செய்தியை படிச்சதும், என் ராமுவை நினைச்சு ஒரே கவலையா போயிட்டு. உடனே அதுக்கும் ஒரு மாஸ்க் வாங்கினேன். மூணு மாசத்துக்கு ஒருதடவை தடுப்பு ஊசி போட அழைச்சுட்டு வருவேன். அப்படிதான் இன்னைக்கு வந்திருக்கிறோம். இதைப் பார்த்த பலரும், மாஸ்க் அணிய வேண்டியதின் அவசியத்தை உணர்ந்து, உடனே மாஸ்கை வாங்கி பயன்படுத்துறாங்க. வீட்டுல இருக்கும்போது ராமுவுக்கு மாஸ்க் அணிவிக்கமாட்டேன். வெளியில் வாக்கிங் போகும்போது, அத்தியாவசியப் பொருள்கள் வாங்க போகும்போது, மாஸ்க் அணிவித்து அழைச்சுட்டுப் போவேன். வீட்டுக்குப் போனதும் ராமுவுக்கும் சானிடைஸர் மூலம் உடம்பு முழுக்க க்ளீன் பண்ணுவேன். ராமு மாஸ்க் அணிவதை பார்த்து, குறைந்தப்பட்சம் நூறு பேராவது மாஸ்க் அணிய ஆரம்பிச்சுருப்பாங்க" என்றார், மகிழ்ச்சியாக!

அடுத்த கட்டுரைக்கு