`யாரையும் நெருங்கவிடல, சுத்திச் சுத்தி வந்தது!'- எஜமானி சடலத்துடன் பாசப்போராட்டம் நடத்திய நாய்
கடன் தொல்லையில் கணவன் மாயமானதால் விரக்தியடைந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். அந்தப் பெண் வளர்த்த நாய், சடலத்தை எடுக்கவிடாமல் பாசப் போராட்டம் நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த வெங்களாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர் (40). இவரின் மனைவி ராதா (34). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். குடிநீர் கேன் விநியோகம் செய்யும் தொழில் செய்துவந்த தனசேகர் பலரிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

கடனை உரிய காலத்துக்குள் திருப்பிச் செலுத்த முடியாததால் கடன் கொடுத்தவர்கள் தனசேகரிடம் தகராறு செய்துவந்துள்ளனர். இதையடுத்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடும்பத்தினரை பரிதவிக்கவிட்டுத் தனசேகர் தலைமறைவாகிவிட்டார். இதுநாள் வரை அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில், கடன் கொடுத்தவர்கள் வீட்டுக்கே சென்று ராதாவைத் தொந்தரவு செய்தனர். சம்பவத்தன்று ஆபாசமாகப் பேசி மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மன வேதனையடைந்த ராதா வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தூக்கிலிருந்து சடலத்தை கீழே இறக்கிவைத்த உறவினர்கள், திருப்பத்தூர் தாலுகா போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் சடலத்தை மீட்க வந்தபோது, ராதா பாசத்துடன் வளர்த்த நாய் கண்ணீர் வடித்தபடி சடலத்தின் மீது தலை வைத்துப் படுத்திருந்தது. இதைப் பார்த்தவர்கள் கண் கலங்கினர்.
சடலத்தைத் தூக்க முயன்ற போலீஸாரைப் பார்த்து நாய் குரைத்தது. அருகில் சென்றவர்களையெல்லாம் விரட்டியது. பின்னர், ஒரு வழியாக அந்த நாயை அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீஸார், ராதாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய், தந்தையைப் பறிகொடுத்த இரண்டு குழந்தைகளுக்கும் அந்த நாய் காவலாளியாக மாறியிருக்கிறது. மனிதநேயம் மரித்துப் போன இந்தக் காலத்தில் உணவளித்த எஜமானிக்காக வளர்ப்பு நாய் பாசப் போராட்டம் நடத்தியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.