Published:Updated:

காவிரிக் கரையிலும் தண்ணீர்ப் பஞ்சம்..! - தவிக்கும் திருச்சி மக்கள்

சி.ய.ஆனந்தகுமார்
என்.ஜி.மணிகண்டன்

அகண்ட காவிரி பாய்ந்தோடும் காவிரிக் கரையிலும் வரலாறு காணாத தண்ணீர்ப் பஞ்சத்தால் குடிநீருக்கே மக்கள் தவிப்பதுதான் வேதனையாக உள்ளது!

காலிக்குடங்களுடன் சாலை மறியல் செய்யும் பெண்கள்
காலிக்குடங்களுடன் சாலை மறியல் செய்யும் பெண்கள்

வறட்சியின் காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தண்ணீர்ப் பஞ்சம் அதிகரித்துள்ளது. ஆனாலும் தமிழக அமைச்சர், “தமிழகத்தில் தண்ணீர்ப் பஞ்சம் இல்லை, தண்ணீர்ப் பற்றாக்குறை தான் நிலவுகிறது” எனக்கூறி சமாளிக்கிறார். அதைப் போலவே திருச்சி மாநகராட்சி மற்றும் திருச்சி மாவட்டத்தில் தண்ணீர்ப் பஞ்சம் துளியும் இல்லை என அதிகாரிகள் மறுத்து வருகிறார்கள். நிலைமை இப்படி இருக்க கடந்த 10 நாள்களாக தங்கள் பகுதிகளில் தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் நேப்பியர் பாலம் முன்பு பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தண்ணீருக்காக சாலைமறியல்
தண்ணீருக்காக சாலைமறியல்

திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை மணப்பாறை, துறையூர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் வழக்கமாகக் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவும். இப்பகுதிகளில் நிலத்தடி நீர் மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளதால் இப்படியான சூழல். ஆனால், திருச்சி மாநகரில் இதுநாள் வரை குடிநீர்ப் பிரச்னை குறைவாகவே இருந்து வந்தது.

ஆனால், கடந்த சில நாள்களாக மாவட்டத்தில் பல இடங்களிலும், மாநகரில் திருச்சி துவாக்குடி மலைக்கோயில், திருச்சி ஸ்ரீரங்கம், விமான நிலையம், பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால், குடிநீர்ப் பிரச்னை தலை காட்டத் தொடங்கியுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் அருகே ஜெ.ஜெ நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளன. திருச்சி கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ள இந்தக் குடியிருப்புகளில் சுமார் 432 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் கடந்த ஒரு வாரமாகக் குடிநீர் சப்ளை இல்லை என்றும், இதனால் பொதுமக்கள் அவதிப்படுவதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிபொதுமக்கள் மற்றும் பெண்கள்காலிகுடங்களுடன் கொள்ளிடம் ஆற்றில் உள்ள நேப்பியர் பாலம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தண்ணீருக்காக சாலைமறியல்
தண்ணீருக்காக சாலைமறியல்

தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே உடன்பாடு ஏற்படாத நிலையில், அங்கு விரைந்து வந்த மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜேஷ்கண்ணா, அப்பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்தார். இதை ஏற்று சாலை மறியலில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மறியலைக் கைவிட்டனர். இது இப்படியிருக்க, திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், தீராம்பாளையம் ஊராட்சியில் 3500க்கும் மேற்பட்டோர் வசித்து வருவதாகவும், பஞ்சாயத்தில் 15க்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் இருந்தும், ஒன்றில்கூட உரிய நீர் நிரப்பி பொதுமக்கள் குடிக்கத் தண்ணீர் கொடுப்பதில்லை. குடிதண்ணீர் வேண்டி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் மனு அளித்தும் பயனில்லை. உரிய தண்ணீர் ஊற்று இருக்கும் இடத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து தண்ணீர் எடுக்க உயர்நீர்தேக்க தொட்டிக்கு நிரப்பாமல், தண்ணீர் இல்லாத பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து அரசின் நிதியையும், மக்கள் வரிப்பணத்தையும் விரயம் செய்து பல மோசடிகள் நடைபெற்றுள்ளன. ஆகவே, கிராம பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது எனக் குற்றஞ்சாட்டி, பொதுமக்கள் காலிக் குடங்களுடன் தீராம்பாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தை கடந்த சில வாரங்களுக்கு முன்பு முற்றுகையிட்டனர்.

இதேபோல், திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த நெய்குப்பை ஊராட்சியில் உள்ள பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் கடந்த 6 மாதமாகக் குடிநீர் முறையாக வழங்கவில்லை என்றும், தண்ணீர் வழங்குவதில் பாகுபாடு காட்டுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

காவிரி பாய்ந்தோடும் கொள்ளிடம் மற்றும் காவிரிக் கரைகளில் தண்ணீர்ப் பஞ்சம் தொடங்கியுள்ளதுதான் மக்களை வேதனையடைய வைத்துள்ளது.