Published:Updated:

`கேரள எல்லை... சிற்றாற்றில் செத்து மிதந்த வாத்துகள்' - பறவைக் காய்ச்சல் பீதியில் தென்காசி

செத்து மிதக்கும் வாத்துகள்
செத்து மிதக்கும் வாத்துகள்

குற்றாலம் அருவியிலிருந்து வெளியே வரும் தண்ணீர், சிற்றாறு மூலம் பல்வேறு கிராமங்களைக் கடந்து, தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. சிற்றாற்றுப் பாசனம் உள்ள பகுதிகளில் வாத்து வளர்க்கும் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது, குறிப்பன்குளம் கிராமம். இந்தக் கிராமத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் சிற்றாறு பாய்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை மூலம் குற்றாலம் அருவியில் வரும் தண்ணீர் இந்த ஆற்றில் வருகிறது.

கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு; உறுதிசெய்த அரசு! - தீவிர கண்காணிப்பில் பெற்றோர்

சிற்றாற்றுப் பாசனத்தை நம்பி பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. சுற்றுவட்டாரப் பகுதிகளின் குளத்துக்கும் இந்த ஆற்றின் கால்வாய்கள் மூலம் நீர் செல்வதால், பல கிராமங்களின் குடிநீருக்கும் விவசாயத்துக்கும் இந்த ஆறு பயனளிக்கிறது.

சிற்றாற்றில் இன்று வாத்துகள் செத்து மிதப்பதாக மக்களுக்குத் தகவல் பரவியது. அதனால் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது, அழுகியநிலையில் 30-க்கும் அதிகமான வாத்துகள் மிதந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். 

உயிரிழந்த வாத்துகள்
உயிரிழந்த வாத்துகள்

பக்கத்தில் இருக்கும் கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. இந்தச் சூழலில், கேரள எல்லைப்புறப் பகுதியில் தண்ணீரில் வாத்துகள் இறந்துகிடப்பதால் நோய் பரவுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

வாத்துகள் இறந்துகிடப்பதற்கான காரணம் என்ன என்பதை கால்நடைத்துறையினர் ஆய்வுசெய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. நோய் தாக்கியதால் அவை இறந்தனவா அல்லது மீன் பிடிப்பதற்காக யாராவது ஆற்றில் ஏதாவது ரசாயனத்தைக் கலந்ததில் வாத்துகள் செத்து மடிந்தனவா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். 

ஆற்றில் மிதக்கும் வாத்துகள்
ஆற்றில் மிதக்கும் வாத்துகள்

தற்போது வெயில் வாட்டிவதைக்கும் நிலையில், சிற்றாறு ஆற்றுத் தண்ணீரையே கால்நடைகள் குடிக்கின்றன. விவசாயத்துக்கும் அந்தத் தண்ணீரே பயன்படுத்தப்படுகிறது. அதனால் தண்ணீரையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பது அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு