மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, சென்னையைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் அதி கனமழை பெய்தது. இதன் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. அதே சமயத்தில் பிள்ளைப்பாக்கம், நேமம் போன்ற ஏரிகளில் நீர் நிரம்பி அங்கிருந்தும் உபரிநீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்துகொண்டிருக்கிறது. தொடர் நீர்வரத்து காரணமாக, ஏரியின் நீர் கொள்ளளவு அதிகரித்துவருகிறது.
24 அடி மொத்தக் கொள்ளளவுகொண்ட ஏரியின் நீர் மட்டம் 23 அடியை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் ஏரிக்கு நீர்வரத்து 2,000 கனஅடிக்கும் அதிகமாக இருக்கிறது. ஏற்கெனவே, ஏரியின் 19 கண் மதகின் வழியாக 100 கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது. தொடர் நீர்வரத்து காரணமாக இன்று காலை கூடுதலாக 1,000 கனஅடி உபரிநீர் திறக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு வெளியானது.
செம்பரம்பாக்கம் ஏரியைப் பொறுத்தவரை, நீர் திறப்பதற்கு முன்பாக மூன்று முறை எச்சரிக்கை ஒலி எழுப்புவது வழக்கமான நடைமுறை. ஆனால், இன்று காலை ஐந்து கண் மதகில் ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. கூடுதல் உபரிநீர் திறந்தபோது, அதிகாரிகள் எச்சரிக்கை மணியை எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஏரியின் நீர்வரத்தைப் பொறுத்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கக்கூடும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்பட்டிருக்கிறது.
தண்ணீர் அதிக அளவில் திறந்துவிடப்பட்டிருப்பதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. காவல்துறையினர் கரையோரப் பகுதிகளில் தொடர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்துக்கு வரும் கிருஷ்ணா நதிநீரின் அளவு 496 கனஅடியிலிருந்து 394 கனஅடியாகக் குறைந்திருக்கிறது. அதேசமயத்தில், புழல் ஏரிக்கு வரும் நீர்வரத்து 623 கனஅடியிலிருந்து 704 கனஅடியாக உயர்ந்திருக்கிறது. மேலும், சோழவரம் ஏரிக்கு வரும் நீர்வரத்து 657 கனஅடியிலிருந்து 900 கனஅடியாகக் கூடியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.