Published:Updated:

கொரோனா அச்சம்: துரத்திய காம்பவுண்டு வாசிகள்; காட்டில் தஞ்சமடைந்த தேனி பெண்!

corona
corona

கொரோனா அச்சம் காரணமாக, குடியிருக்கும் காம்பவுண்டு வாசிகள் சேர்ந்து வீட்டை விட்டு துரத்திய துயரச் சம்பவம் தேனியில் நடந்துள்ளது.

தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண், சமீபத்தில் தன் மகளைக் காண சென்னை சென்றுள்ளார். அங்கே இருந்தவர், இரண்டு தினங்களுக்கு முன்னர், சொந்த ஊரான தேனிக்கு வந்துள்ளார். சென்னையிலிருந்து வந்துள்ளார் என்ற தகவல் தெரியவே, அவரது வீடு இருக்கும் கம்பவுண்டு வாசிகள் ஒன்று சேர்ந்து, அவரைத் துரத்தியுள்ளனர். `மருத்துவமனைக்குச் செல்.. உன்னால் எங்களுக்கும் கொரோனா வந்துவிடுமோ என பயமாக இருக்கிறது’ எனக் கூறி விரட்டியுள்ளனர்.

இதனால் மன உலைச்சலுக்கு ஆளான அப்பெண், நேராக தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனைக்குச் சென்று தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார். பரிசோதனை முடிவுகள் வர ஒரு நாள் ஆகும் எனக் கூறவே, வீட்டுக்குச் செல்ல முடியாத நிலையில், அல்லிநகரம் அருகே உள்ள வீரப்ப அய்யனார் கோயில் மலைக்குச் சென்றுள்ளார் அப்பெண். இரவு முழுவதும் உணவு, தண்ணீர் இல்லாமல் இருட்டில் தவித்துள்ளார்.

 `ஒரு மாத சம்பளம்; பயணிகளுக்கு இலவச மாஸ்க்!’ - அசத்தும் தேனி அரசுப் பேருந்து நடத்துநர்
corona
corona

மறுநாள், அப்பெண்ணுக்கு கொரோனா உறுதியான நிலையில், அவரை மருத்துவமனை அழைத்துச் செல்ல சுகாதாரத் துறையினர், அவரது வீட்டுக்கு வந்துள்ளனர். ஆனால், `அவர் இங்கு இல்லை. வீரப்ப அய்யனார் கோயில் மலைப் பக்கம் இருக்கிறார். அங்கே போய் கூட்டிச் செல்லுங்கள்’ என காம்பவுண்டு வாசிகள் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுகாதாரத்துறையினர், உடனடியாக மலைப்பகுதிக்குச் சென்று, அப்பெண்ணை தேடிக் கண்டுபிடித்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

`கடைசியில் அவன காப்பாத்த முடியலையே..!' - கிணற்றில் விழுந்த சிறுவனால் கலங்கிய தேனி கிராமம்

இது தொடர்பாக பேசிய சுகாதாரத்துறையினர், ``பொதுவாக, சென்னையிலிருந்து வருபவர்களை, அவர்களது வீட்டில் 14 நாள்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அப்படி அவர் தனிமையில் இருக்க விரும்பிய நிலையில், அவரை துரத்தியடித்தது ஏற்றுக்கொள்ள முடியாது. இதைப் பார்த்து மற்றவர்களும் செய்வார்கள். இது போன்ற விஷயங்களில் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு