Published:Updated:

`ரொம்ப பயப்படாதீங்க..!' -கொரோனா காலர் ட்யூன் விவகாரத்தில் துரைமுருகனைக் கலாய்த்த முதல்வர்

துரைமுருகன்
துரைமுருகன்

``கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. 70 வயதுக்கு மேல் ஆகிவிட்டது என்பதால் துரைமுருகன் அச்சம் கொள்கிறார்"

சீனாவில் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது உலக அளவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், உலகம் முழுவதும் மக்கள் அதிக அச்சத்தில் உள்ளனர். இந்த வைரஸைத் தடுக்கப் பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் 60-க்கும் மேற்பட்டவர்களுக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர், தொடர் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டார்.

கொரோனா
கொரோனா

மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொலைபேசி வழியாகவும் அறிவுரைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், தமிழகச் சட்டமன்றத்தில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கொரோனா தொடர்பாக தி.மு.க பொருளாளர் துரைமுருகன் பேசியதும் அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதிலும் சட்டமன்றத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

வைரஸைத் தடுப்பதற்காக கிருமி நாசினிகளை அடிக்க வேண்டும். திரும்பத் திரும்ப எங்களால் இடைத்தேர்தல்களைச் சந்திக்க முடியாது.
துரைமுருகன்

சட்டமன்றத்தில் துரைமுருகன் பேசும்போது, ``கொரோனா வைரஸ் குறித்து அரசுதான் பீதியைக் கிளப்பி வருகிறது. போன் செய்தால் இருமல் சத்தம் கேட்கிறது. சட்டமன்றம் வந்தால் நர்ஸ்கள் அப்படிக் கை கழுவு, இப்படிக் கைகழுவு என பயத்தை ஏற்படுத்துகின்றனர். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முகக்கவசம் அளிக்க வேண்டும். வைரஸைத் தடுப்பதற்காக கிருமி நாசினிகளை அடிக்க வேண்டும். திரும்பத் திரும்ப எங்களால் இடைத்தேர்தல்களைச் சந்திக்க முடியாது" என்று பேசியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. அதற்காகத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 70 வயதுக்கு மேல் ஆகிவிட்டது என்பதால் துரைமுருகன் அச்சம் கொள்கிறார்" என்று பதில் அளித்துள்ளார். இதனால், சட்டமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.

மேலும் சபாநாயகர் தனபால், ``கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவையில் ஏசி குறைத்து வைக்கப்பட்டுள்ளது. கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் முகக்கவசங்கள் அளிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

`சீனாவில் 70% கொரோனா நோயாளிகள் குணமாகி வீடு திரும்புகின்றனர்!' - உலக சுகாதார  நிறுவனம்
அடுத்த கட்டுரைக்கு