தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் குன்னுார், பர்லியார், கல்லாறு ஆகிய பகுதிகளில் பழப் பண்ணைகள் உள்ளன. இந்தப் பண்ணைகளில் அரிய வகை பழங்கள் தரும் பெர்சிமன், துரியன், மங்குஸ்தான் போன்ற பழ மரங்களை பராமரித்துவருகின்றனர். மருத்துவ குணம் நிறைந்த துரியன், மங்குஸ்தான் ஆகிய பழ மரங்களை சீஸன்களில் குறிப்பிட்ட காலத்துக்குக் குத்தகைக்குவிடுவது வழக்கம். இந்த இரண்டு பழங்களுக்கும் கிராக்கி அதிகம் என்பதால், இந்த மரங்களை ஏலம் எடுக்க கடுமையான போட்டி நிலவும்.

இந்த ஆண்டு சீஸனுக்கான ஏலம் குன்னூரில் நடைபெற்றது. நீலகிரி தோட்டக்கலைத்துறையின் உதவி இயக்குநர் முன்னிலையில் தனியாருக்கு ஏலம்விடப்பட்டது. கல்லாறு பண்ணையிலுள்ள பழ மரங்கள் ரூ. 6.7 லட்சத்துக்கும், பர்லியார் பண்ணையிலுள்ள பழ மரங்கள் 4 லட்சம் ரூபாய்க்கும் ஏலம்விடப்பட்டன. இந்த ஏலத்தின் மூலம் தோட்டக்கலைத்துறைக்கு10,70,000 ரூபாய் வருமானம் கிடைத்தது.
கடந்த ஆண்டைப் போன்ற ஏல முறையைப் பின்பற்றவில்லை என்றும், ஆரம்ப விலையை அதிகப்படுத்தியதாகவும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இரு கோஷ்டியினரும் நடுரோட்டில் இறங்கி உருண்டு அடிதடியில் ஈடுபட்டனர். இதனால் குன்னூரில் போக்குவரத்தே ஸ்தம்பித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தச் சர்ச்சை குறித்து பேசிய வணிகர்கள், ``அதிக பழ மரங்களைக் கொண்டிருக்கும் பர்லியார் பழப் பண்ணையைவிட, குறைந்த பழ மரங்களைக்கொண்ட கல்லார் பண்ணை அதிக விலைக்கு ஏலம் போயிருக்கிறது. கடந்த ஆட்சியில் ஆளுங்கட்சியினரின் தலையீட்டால் அதிகாரிகள் மற்றும் வணிகர்கள் சிலர் சிண்டிகேட் அமைத்து தங்களுக்குள்ளேயே ஏலம் நடத்தி மோசடி செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வணிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். ஒரு தரப்புக்கு மட்டுமே சாதகமாகச் செயல்படும் அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கின்றனர்.

இந்த விவகாரம் குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். ``எல்லா ஏலத்திலும் பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறையே தற்போதும் பின்பற்றப்பட்டது. ஏலம் கிடைக்காத விரக்தியில் சண்டையிட்டுக்கொண்டனர்" என்றனர்.