Published:Updated:

''அன்போட பேசினார், நாப்கின் தயாரிக்கக் கத்துக்கிட்டார்!''- பிராவோ பற்றி முருகானந்தம்

கு.ஆனந்தராஜ்

`நீங்க யாரு?'னு கேட்டேன். கிரிக்கெட் வீரர்னு சொன்னார். அவர் வந்துசென்ற பிறகு கூகுளில் தேடி, பிராவோவின் புகழ் குறித்து தெரிஞ்சுகிட்டேன்....

டுவைன் பிராவோ உடன் முருகானந்தம்
டுவைன் பிராவோ உடன் முருகானந்தம்

புகழ்பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ, நேற்று கோயம்புத்தூருக்கு வருகைதந்தார். அவர், `நாப்கின்' முருகானந்தத்தைச் சந்தித்து, நாப்கின் தயாரிப்பு பற்றி கேட்டு கற்றுக்கொண்டிருக்கிறார். இந்த சந்திப்பு குறித்து முருகானந்தத்திடம் பேசினோம்.

டுவைன் பிராவோ உடன் முருகானந்தம்
டுவைன் பிராவோ உடன் முருகானந்தம்

``சென்னை வந்திருந்தபோது மற்றும் பல்வேறு தருணங்கள்ல என்னைப் பத்தி தெரிஞ்சு வெச்சிருக்கார் பிராவோ. அவர், என்னை சந்திக்க விருப்பப்பட்டிருக்கார். எனக்கு கிரிக்கெட் விளையாட்டுகளைப் பார்க்கும் பழக்கமில்லை. அதனால டுவைன் பிராவோ யார்னு எனக்குத் தெரியாது. கிரிக்கெட் வீரர் ஒருத்தர் சந்திக்க வரவிருக்கார்னுதான் நினைச்சேன். கரீபியன் தீவிலுள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டிலிருந்து வந்திருந்த பிராவோ, நேற்று காலையில 10.30 மணிக்கு என் அலுவலகம் வந்தார்.

கிரிக்கெட் வீரர்கள் யாரும் நாப்கின் மற்றும் மாதவிடாய் குறித்துப் பேசியதில்லை. ஆனா, உங்க முயற்சி பலருக்கும் முன்னுதாரணமா இருக்கும்'னு பிராவோவை வாழ்த்தினேன்.
முருகானந்தம்

அவரை வரவேற்றேன். பிறகு, `நீங்க யாரு?'னு கேட்டேன். கிரிக்கெட் வீரர்னு சொன்னார். அவர் வந்துசென்ற பிறகு கூகுளில் தேடி, பிராவோவின் புகழ் குறித்து தெரிஞ்சுகிட்டேன். இதுக்கிடையே, அவருடனான உரையாடல் மகிழ்ச்சியாக அமைஞ்சது. `எங்க நாட்டில் ஏழைப் பெண் குழந்தைகள் பலரும் நாப்கின் வாங்க முடியாமல், பள்ளிக்குச் செல்வதைக் குறைச்சுகிட்டாங்க. அதனால் வருத்தப்பட்டேன்.

பிராவோ
பிராவோ

எனவே, எங்க ஊர் பெண்களுக்கு மலிவு விலையில் நாப்கின் தயாரிச்சுக் கொடுக்கவும், விழிப்புணர்வு கொடுக்கவும் திட்டமிட்டிருக்கேன். அதற்கு உங்க ஆலோசனை தேவை'னு சொன்னார்.

பிராவோவின் முயற்சி எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துச்சு. தொடர்ந்து அன்போடு பேசினார். நாப்கின் தயாரிக்க பயிற்சி எடுத்துகிட்டார். நாப்கின் செய்ய கத்துகிட்டார். நாப்கின் பயன்பாடு மற்றும் தயாரிப்பு பற்றி நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுகிட்டார். `கிரிக்கெட் வீரர்கள் யாரும் நாப்கின் மற்றும் மாதவிடாய் குறித்துப் பேசியதில்லை. ஆனா, உங்க முயற்சி பலருக்கும் முன்னுதாரணமா இருக்கும்'னு அவரை வாழ்த்தினேன். சந்தோஷப்பட்டார்!

பிராவோ
பிராவோ

மதியம் 1.30 மணிக்கு மேல் கிளம்பிச்சென்றார். விரைவில் அவருக்கு  நாப்கின் தயாரிக்கும் இயந்திரம் ஒன்றை அனுப்பயிருக்கேன். அவருடைய நாட்டில் பயிற்சி மையம் ஒன்றைத் தொடங்கவிருக்கிறார். தேவைப்பட்டால், மீண்டும் கோயம்புத்தூர் வருவதாகவும் சொல்லிவிட்டுப்போனார்" என்கிறார் முருகானந்தம். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்-ரவுண்டராகக் கலக்கிய டுவைன் பிராவோ, ஐபிஎல் போட்டிகளிலும் தூள் கிளப்பினார். கடந்த ஆண்டு, சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.