Published:Updated:

மாற்றுத்திறனாளிகளின் 19 அம்சக் கோரிக்கை; விசிலடித்து நூதன போராட்டம்- சைகை மூலம் உறுதியளித்த ஆட்சியர்

விசிலடித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் விசிலடித்து நூதன முறையில் கோரிக்கைகளைத் தெரிவித்தனர்.

மாற்றுத்திறனாளிகளின் 19 அம்சக் கோரிக்கை; விசிலடித்து நூதன போராட்டம்- சைகை மூலம் உறுதியளித்த ஆட்சியர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் விசிலடித்து நூதன முறையில் கோரிக்கைகளைத் தெரிவித்தனர்.

Published:Updated:
விசிலடித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

``அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் ஒரு சதவிகிதத்தின்படி வேலை வழங்க வேண்டும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள எங்களுக்குத் தொகுப்பு வீடு, ஓட்டுநர் உரிமம் வழங்க முகாம், மாதாந்தர உதவித்தொகை ரூ.3,000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும், வாரிசு அடிப்படையில் காது கேளாத மாற்றத்தினாளிகளுக்கு பணி நியமனம் வழங்க தடுமாற்றம் ஏன்... தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் எங்கே... அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் சைகை மொழி ஆசிரியர்கள் எங்கே... அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் அனுபவம் வாய்ந்த சைகை மொழிபெயர்ப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும். ஆவின் நிறுவனத்தில் கடைவைக்க அனுமதி வழங்க வேண்டும். கோகோ கோலா நிறுவனங்களில் ஒப்பந்தக் காதுகேளாத தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” உள்ளிட்ட 19 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட ஆட்சியரின் கவனத்தை ஈர்க்கும்விதமாக விசிலடித்து, சைகை மூலம் கோஷம் எழுப்பினர்.

சைகை மூலம் பேச்சுவார்த்தை நடத்திய ஆட்சியர்
சைகை மூலம் பேச்சுவார்த்தை நடத்திய ஆட்சியர்

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்தார். அப்போது அவர்கள் சைகை மூலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைகள் குறித்துத் தெரிவித்தனர். அவர்கள் சொல்லவருவதைப் புரிந்துகொள்ள முடியாததால், சென்னை மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திலிருந்து சைகை மொழி தெரிந்த பெண் அலுவலரை வீடியோ கால் மூலம் பேசவைத்து அவர்களுடைய கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

அவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவிக்கும்படி பெண் அலுவலரிடம் கூறி அதை அவர்களுக்குப் புரியவைக்கும்படி கூறினார். அதன்படி போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததை சைகை மொழியில் எடுத்துரைத்தார். அதைக் கேட்டவர்கள் மகிழ்ச்சியடைந்து, மாவட்ட ஆட்சியருக்குத் தங்கள் சைகை மொழியில் கைகளை உயர்த்தி, நன்றி தெரிவித்து, போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர், ``அவர்கள் வைத்திருக்கும் 19 கோரிக்கைகளையும் அரசிடம் எடுத்துக் கூறி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாதம்தோறும் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்தில், இவர்களையும் கலந்துகொள்ளச் செய்து, அவர்களின் குறைகளையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!