Published:Updated:

உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் பட்டியலில் திடீர் திருத்தம்?! - அதிர்ச்சியில் ஈச்சங்குப்பம் மக்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

ஈச்சங்குப்பம் ஊராட்சி வாக்காளர்கள் பட்டியலில் திடீரெனத் திருத்தம் செய்யப்பட்டு முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, ஈச்சங்குப்பம் கிராம மக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. வாக்குப்பதிவு 6, 9 தேதிகளில் நடைபெறவிருப்பதால் இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் வாக்குச் சேகரிப்பில் தீவிரம் காட்டிவருகின்றனர். இந்தநிலையில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஈச்சங்குப்பம் ஊராட்சியைச் சேர்ந்த மக்கள் சிலர், தங்கள் ஊராட்சி வாக்காளர்கள் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல்; களத்தில் மிரட்டப்படுகிறார்களா எதிர்க்கட்சி வேட்பாளர்கள்?

இது தொடர்பாக முற்றுகையில் ஈடுபட்ட மக்களிடம் பேசினோம். ``எங்கள் ஊராட்சியின் பெயர் ஈச்சங்குப்பம். மொத்தம் 1,182 வாக்காளர்கள் இருப்பதாக இறுதி செய்யப்பட்டு 30.08.2021 அன்று வெளியிடப்பட்ட புதிய வரைவு வாக்காளர் பட்டியலின்படியே வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. ஊராட்சித் தலைவர் பதவிக்கு ஜகுபாய் முனுசாமி (60), ஒன்றிய கவுன்சிலராக செல்வி மணி (59) (முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள்) என்பவர்கள் போட்டியிடுகின்றனர். அதேபோல திமுக-வில் கிளைச் செயலாளராக இருக்கும் அரிகிருஷ்ணன் என்பவரும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இவர் ஓட்டுக் கேட்க வரும்போதே, ``நான்தான் ஜெயிக்கப்போறேன். எனக்கே ஓட்டுப் போடுங்க" என்று சொல்வார். திடீரென வாக்காளர்கள் பட்டியலில் திருத்தம் நடப்பதாகச் சில தினங்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது. அதன்படியே, 25.09.2021 அன்று வாக்காளர்கள் பட்டியலில் சில திருத்தங்களைச் செய்துள்ளனர். அரிகிருஷ்ணன் என்பவர், தனக்குச் சாதகமாக இல்லாத வாக்காளர்களைப் பஞ்சாயத்து கிளார்க் (செயலாளர்) உதவியோடு பட்டியலிலிருந்து நீக்கியிருக்கிறார். இந்தத் தகவல் தெரியவரவே விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (BDO) சென்று கேட்டோம். ``இன்னும் பட்டியலை வெளியிடவில்லை. அதை இப்போது தர முடியாது. ஆனால், 50 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 45 வாக்காளர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். மூன்று திருத்தங்கள் நடந்துள்ளன" என்று கூறினார். நாங்கள் மேற்கொண்டு வெளியே வந்து விசாரித்தோம். அப்போதுதான் பகீரென இருந்தது. எப்படியாவது இந்தத் தேர்தலில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக, அவர்களுக்குச் சாதகமாக இருக்காத 50 வாக்காளர்களைப் பட்டியலிலிருந்து முறைகேடாக நீக்கி திருத்தம் செய்துள்ளனர்.

அந்த 50 பேரில், 15 நபர்கள் வெளியூர்களுக்குப் பிழைப்பு தேடிச் சென்றவர்கள். அவர்களுக்கு நில பலமெல்லாம் இந்த ஊர்லதான் இருக்கு. தேர்தல் நாள்களில் சரியாக இங்கு வந்து ஓட்டுப் போட்டுவிடுவார்கள். போன சட்டமன்றத் தேர்தலில்கூட அவங்க ஓட்டுப் போட்டிருக்காங்க. இது ஒருபக்கம் இருந்தாலும், மீதமுள்ள 35 பேர் ஊர்லயே இருக்கறவங்கதான். அவர்களுக்கு எல்லா அடையாள அட்டையும் இருக்கு. ஆனா அவங்க பேரையும் நீக்கியிருக்காங்க. புதிதாக இணைத்துள்ள 45 வாக்காளர்களில் 18 வாக்காளர்கள் 18 வயதே நிரம்பாத சின்னப் பசங்க. போலியான ஆவணங்களைக் கொடுத்து வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனர். மீதமுள்ள 27 நபர்கள் கல்யாணம் பண்ணிக்கிட்டு வெளியூர்க்குப் போனவங்க. இந்த 27 பேரைப் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்று ஏற்கெனவே நடந்த உயர் நீதிமன்ற வழக்கின் முடிவில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அவர்களையும் இவங்க முறைகேடாகச் சேர்த்திருக்காங்க. புதிதாக 18 வயது நிரம்பிய நபர்களை வேட்பாளர்களாகச் சேர்ப்பதை நாங்கள் தவறு என்று சொல்லவில்லை. ஏன், பொய்யான முறையில் வாக்காளர்களை நீக்க, சேர்க்க வேண்டும். எங்களுக்கு 30.08.2021-ன்படி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படியே தேர்தல் நடைபெற வேண்டும். முறைகேடு செய்யப்பட்ட பட்டியல்படி தேர்தலை நடத்தக் கூடாது" என்றனர்.

ஜகுபாய், செல்வி
ஜகுபாய், செல்வி

இது தொடர்பாக விளக்கம் கேட்க, அரிகிருஷ்ணன் என்பவரிடம் பேசினோம். ``அவர்கள் கூறுவது அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டு. கிளார்க்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அவர் அரசு வேலையைப் பார்க்கிறார். நான் விவசாயம் பார்த்துக்கொண்டு கட்சி வேலையை கவனிக்கிறேன். இதற்குக் காரணமே மணி என்பவர்தான். இப்போது கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடுகிறார். தேர்தல் நேரத்தில் எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே இப்படிப் பண்ணுறாங்க. எம்.பி தேர்தலில்போது உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு 170 பேரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியதே அவர்தான். இன்று என்மீது குற்றம் கூறுகின்றனர். இவை பொய்யான குற்றச்சாட்டு" என்றார்.

உள்ளாட்சித் தேர்தல்: `கள்ள ஓட்டுப் போடுவதிலே வல்லவர்கள் திமுகவினர்!’ - எடப்பாடி பழனிசாமி தாக்கு

இது தொடர்பாக விளக்கம் கேட்க விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) நாராயணனிடம் பேசினோம். ``வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் பட்டியலின் பணி நடந்துவருகிறது. இறுதிப் பட்டியல் இன்னும் வெளியிடவில்லை. மாவட்ட ஆட்சியர் அதை ஆய்வு செய்யும்படி கூறியிருக்கிறார்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு