Published:Updated:

`மனசாட்சியை தொட்டுப்பார்த்தால் இப்படி பேசியிருக்கமாட்டார்!’ -சுஜித் விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி

`சுஜித்தை உயிரோடு மீட்க வேண்டும் என்ற அடிப்படையில் இரவுபகல் பாராமல் நாங்கள் உழைத்தோம். இப்படிப்பட்ட சம்பவம் கடந்த காலத்திலும் நடைபெற்றது'

எடப்பாடி
எடப்பாடி

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடுக்காட்டுப்பட்டிக்கு வந்தார். அவருடன் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களும் வந்திருந்தனர். சுஜித்தின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் முன்னதாக சுஜித் படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த தகவல் கிடைத்ததும் உடனடியாகச் சம்பவ இடத்துக்குச் செல்ல அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அறிவுறுத்தினேன். எப்படியாவது சுஜித்தை உயிரோடு மீட்க வேண்டும் என எண்ணியே செயல்பட்டோம். ஆனால், முயற்சிகள் பலனளிக்கவில்லை. அரசைப் பொறுத்தவரை எல்லா உதவிகளையும் செய்தோம். ஓபிஎஸ் நேரில்வந்து பார்த்து மீட்புப் பணிகள் குறித்து என்னிடம் ஆலோசித்தார்.

சுஜித்
சுஜித்

சுஜித்தை உயிரோடு மீட்க வேண்டும் என்ற அடிப்படையில் இரவுபகல் பாராமல் நாங்கள் உழைத்தோம். இப்படிப்பட்ட சம்பவம் கடந்த காலத்திலும் நடைபெற்றது. அப்போது எல்லாம் இவ்வளவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவில்லை. ஆனால் ஸ்டாலினோ, மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டதன் காரணமாகத் தான் சிறுவன் உயிரிழந்தான் என்ற தவறான கருத்தைக் கூறியிருக்கிறார். எந்த அளவுக்கு அரசு இயந்திரம் இந்த விவகாரத்தில் உழைத்தது என்பதை ஊடகங்களில் காண்பிக்கப்பட்டது. இங்கேயே அமைச்சர் எத்தனை நாள் உட்கார்ந்திருந்தார் என்பதை அனைவரும் பார்த்தனர். ஆனால் ராணுவத்தைப் பயன்படுத்தி இருக்கலாம் எனக் கூறியிருக்கிறார் ஸ்டாலின்.

`குழந்தை இல்லாத வலி, எனக்குத் தெரியும்!'- சுஜித் தாயாருக்கு ஆதரவாக இருந்த கேரளப் பெண்

இதேபோல்தான் முக்கொம்பு அணை உடைந்தபோதும் ராணுவத்தைப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறினார். ஆனால் ராணுவமே தமிழகப் பொதுப்பணித் துறையைப் பாராட்டிச் சென்றது. இப்போதும் NDRF, NLC, ONGC என முக்கிய துறை, நிறுவனங்களை வரவழைத்துச் செயல்பட்டோம். தி.மு.க ஆட்சியில் தேனி அருகே இதேபோன்று ஒரு சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்டான். அப்போதும் அந்தச் சிறுவனை அவர்கள் இறந்த நிலையில்தான் மீட்டார்கள். இதைக் குற்றச்சாட்டாகச் சொல்லவில்லை. இவ்வளவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறுவனை உயிரோடு மீட்கப் போராடினோம். ஆனால், அவர்கள் ஆட்சியில் எந்த விதத் தொழில்நுட்பமும் இல்லாமல், 6 வயதுச் சிறுவனைக் காப்பாற்ற முடியவில்லை.

எடப்பாடி
எடப்பாடி

அப்போது ஏன் ஸ்டாலின் ராணுவத்தை அழைக்கவில்லை. வேண்டுமென்றே அரசு மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என ஸ்டாலின் பேசியிருக்கிறார். தொடர்ந்து இதையேதான் அவர் செய்து வருகிறார். இந்த விவகாரத்தில் அரசின் பணியைப் பாராட்டிய வைகோவுக்கு நன்றி சொல்கிறேன். இதுபோன்ற மனிதாபிமான செயல்களில் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்" என்றவரிடம், `எந்தெந்த இடத்தில் பாறைகள், மணல் இருக்கும் என்பது கனிம வளத்துறைக்குத்தான் தெரியும். அது தெரியாமல் குடிநீர் வடிகால் வாரியத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்று குற்றச்சாட்டு முன்வைத்துள்ளாரே ஸ்டாலின் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ``எல்லாம் தெரிந்த விஞ்ஞானியாக இருக்கிறாரே அப்புறம் ஏன் 2009ல் 6 வயதுச் சிறுவனை இதை எல்லாம் பயன்படுத்தி மீட்கவில்லை.

`அந்த தம்பி இறந்துட்டான்னு அம்மா சொன்னாங்க!'- சுஜித் விழுந்த குழியைப் பார்த்து கலங்கிய குழந்தைகள்

இறந்துதானே அவரை மீட்டார்கள். இப்போது 2 வயதுச் சிறுவன். அப்போது விழுந்தது 6 வயதுச் சிறுவன். தேனி நிகழ்வின் போது ஸ்டாலின் அங்கு சென்றிருந்தாரா.. அமைச்சர்கள், அதிகாரிகள் சென்றார்களா.. இல்லையே. அரசியல் காழ்புணர்ச்சியோடு பேசுகிறார். மனசாட்சியைத் தொட்டுப்பார்த்து பேசினால் அவர் இப்படி பேசியிருக்கமாட்டார். அவர் சொல்வது அனைத்தும் பொய். முடிந்தளவுக்கு உயிரோடு மீட்க வேண்டும் என்றே பணிபுரிந்தோம். ஆனால், அது முடியாமல் போனது வருத்தத்தை அளிக்கிறது. பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணற்றை மூடுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்" எனக் கூறினார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இதற்கிடையே, சிறுவன் சுஜித் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் மலர்வளையத்துடன் முதல்வர் வருகையை எதிர்பார்த்து அதிகாரிகள் காத்திருந்தனர். ஆனால் முதல்வர் அங்கு வரவில்லை என்பதால் கடைசியில் அதிகாரிகளே சிறுவன் சுஜித் படம் இருந்த இடத்தில் மலர்வளையத்தை வைத்துவிட்டு கிளம்பிவிட்டனர். முதல்வர் சென்ற பிறகு பேசிய சுஜித்தின் தந்தை, ``சுஜித்தை மீட்க அரசும், அதிகாரிகளும் இடைவிடாமல் செயல்பட்டனர். அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நிதியுதவி அறிவித்தார்கள் அதற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சுஜித்தின் தாய் 12 வரை படித்துள்ளார். அவரின் படிப்புக்கு ஏற்ற அரசு வேலைக்கு ஏற்பாடு செய்தால் உதவியாக இருக்கும் என முதல்வரிடம் கோரிக்கை விடுத்தேன். அதைப் பரிசீலிப்பதாக உறுதிகொடுத்துள்ளார்" எனக் கூறினார்.

சுஜித் வீடு அருகே இருந்த மற்றொரு ஆழ்துளைக் கிணறு! - களத்தில் இறங்கி மூடிய அதிகாரிகள்