Published:Updated:

`நெஞ்சைப் பதற வைக்கிறது..!' -விழுப்புரம் சம்பவம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

உடல் மற்றும் முகம் முழுவதும் தீக்காயங்களால் கருகிய நிலையில் சிறுமி ஜெயஸ்ரீ பேசும் உருக்கமான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அடுத்திருக்கும் சிறுமதுரை காலனியைச் சேர்ந்தவர் ஜெயபால் (42), ராஜி தம்பதி. இவர்களுக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். விவசாயக் கூலி வேலை செய்துவரும் ஜெயபால் தனது வீட்டிலேயே சிறிய பெட்டிக்கடை ஒன்றையும் வைத்து நடத்திவருகிறார். சிறுமி ஜெயஸ்ரீயின் தந்தை ஜெயபாலுக்கும் அ.தி.மு.க கவுன்சிலர் முருகன் மற்றும் கிளைச் செயலாளர் கலியபெருமாள் என்பவர்களுக்கும் முன்பகை இருந்து வந்துள்ளது.

சிறுமி ஜெயஸ்ரீயின் வீடு
சிறுமி ஜெயஸ்ரீயின் வீடு

8 ஆண்டுகளுக்கு முன்பு குமார், கலியபெருமாள் உள்ளிட்ட 6 பேர் ஜெயபால் தம்பி குமாரின் கையை வெட்டிவிட்டதாகவும் அது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி வாய்த் தகராறு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 9-ம் தேதி சனிக்கிழமை இரவு, ஜெயபால் பெட்டிக்கடையில் வியாபாரம் செய்துகொண்டிருந்த அவரின் மகனை ஊரைச் சேர்ந்த சிலர் அடித்துவிட்டனர்.

அதற்காக மறுநாள் காலையில் அந்தச் சம்பவம் தொடர்பாக புகார் கொடுப்பதற்காக ஜெயபாலும் அவரின் மகனும் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்துக்குச் சென்றுவிட அப்போது முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரும் பெட்டிக் கடைக்குள் நுழைந்து, அங்கிருந்த ஜெயபால் மகள் சிறுமி ஜெயஸ்ரீயின் வாயில் துணியை வைத்து அழுத்தி, கை, கால்களைக் கட்டியதுடன் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியிருக்கின்றனர். அப்போது அங்கிருந்த பெட்ரோலை எடுத்து அவரின் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு, வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டுச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். உடல் மற்றும் முகம் முழுவதும் தீக்காயங்களால் கருகிய நிலையில் சிறுமி ஜெயஸ்ரீ பேசும் உருக்கமான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியிருக்கிறது.

கைது செய்யப்பட்ட கலியபெருமாள்
கைது செய்யப்பட்ட கலியபெருமாள்

சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரையும் கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பதறவைக்கும் இந்தச் சம்பவத்தை அடுத்து அ.தி.மு.க கிளைக் கழக பொதுச்செயலாளர் கலியபெருமாளும் முருகனும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் செயல்பட்டதாகக் கூறி இருவரையும் நீக்கி ஓ.பி.எஸ், இ.பி.எஸ் உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில் ``விழுப்புரம் - சிறுமதுரையில் சிறுமி ஜெயஸ்ரீ மிருகத்தனமாகக் கொல்லப்பட்ட செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது. இக்கொடூரச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். சிறுமியின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இச்செயலில் ஈடுபட்டுவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்'' எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு