Published:Updated:

பெண் வயிற்றில் சத்தமின்றி வளர்ந்த 22 கிலோ கட்டி; நீக்கிய அரசு மருத்துவர்கள்; கட்டிக்கு காரணம் என்ன?

வயிற்றில் கட்டி
வயிற்றில் கட்டி

கேஸ் பிரச்னை, செரிமான பிரச்னை, வயிறு உப்புசம் என்று அவராகவே பலவித காரணங்களை நினைத்துக்கொண்டு நாள்களைக் கடத்தியிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒருவருடத்துக்கு மேலாகத் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டுவந்த பெண்ணின் வயிற்றில் 22 கிலோ எடையுள்ள புற்றுநோய்க் கட்டி இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூரைச் சேர்ந்தவர் தனவந்தி. 45 வயதான இவர் அந்தப் பகுதியில் கூலித்தொழிலாளியாக பணியாற்றுகிறார். கடந்த ஒரு வருடமாக வயிற்று வலி தனவந்தியை படுத்தியெடுக்க ஆரம்பித்திருக்கிறது. ஏதாவது சிறிய பிரச்னையாக இருக்கும் என்று அதைக் கடந்திருக்கிறார். பலநாள்கள் ஆகியும் வயிற்று வலி தீரவில்லை. பசியின்மையும் அதிகரித்திருக்கிறது. ஆனாலும் கொரோனா சூழலால் மருத்துவமனைக்குச் செல்வதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்திருக்கிறார்.

வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட கட்டி
வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட கட்டி
ஒரு வருடமாக மனச்சோர்வு; தலைமுடியைப் பிய்த்து சாப்பிட்ட மாணவி; வயிற்றில் உருவான 1.5 கிலோ கட்டி!

நாளுக்குநாள் வயிறு பெரிதாகிக்கொண்டே போயிருக்கிறது. இதனையடுத்து, அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் கட்டி இருப்பதாகக் கூறியிருக்கின்றனர். இந்நிலையில், தனவந்தி, சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை நடந்தது. இறுதியில் அவரது வயிற்றில் வளர்ந்திருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்த மருத்துவர்கள் அதிர்ந்துபோனார்கள். அந்தக் கட்டி 22 கிலோ எடையிலிருந்ததும், அது புற்றுநோய்க் கட்டி என்று கண்டறியப்பட்டதும்தான் அதிர்ச்சிக்கான காரணம்.

இப்படி இவ்வளவு பெரிய கட்டி வளர்ந்தது? இதுகுறித்து எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் விஜயாவிடம் பேசினோம், ``ஒரு வருஷத்துக்கும் மேலாகவே தனவந்தி வயிற்று வலியால் அவதிப்பட்டிருக்கார். ஆரம்பத்தில் வாயுப் பிரச்னை, செரிமான பிரச்னை, வயிற்று உப்புசம் என அவராகவே பலவித காரணங்களை நினைத்துக்கொண்டு நாள்களைக் கடத்தியிருக்கிறார். இடையில் கொரோனாவும் வந்துவிட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கும் செல்லவில்லை. ஒருகட்டத்தில் வயிற்றுவலி அதிகரித்ததால் ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார். அப்போதுதான் வயிற்றில் ஏதோ கட்டி இருப்பது தெரியவந்திருக்கிறது. அதனையடுத்து இங்கு வந்தார்.

இங்கும் பரிசோதனை செய்து சினைப்பையில் கட்டி இருப்பதை உறுதிசெய்தோம். பிறகு ஆபரேஷன் நடந்தது. ஆனால், 22 கிலோ கட்டி இருக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆபரேஷன் செய்து வெளியில் எடுத்தபிறகுதான் தெரிந்தது. 65 கிலோ எடையிலிருந்தவர் கட்டியை நீக்கியபிறகு 43 கிலோவாக குறைந்தார். அதுதான் அவருடைய இயல்பான எடை. வெளியில் எடுக்கப்பட்ட கட்டியைப் பரிசோதித்ததில் புற்றுநோய்க் கட்டி என்று தெரியவந்தது.

டாக்டர் விஜயா, எழும்பூர் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை
டாக்டர் விஜயா, எழும்பூர் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை

தொடர்ந்து அந்த நோயாளிக்கு புற்றுநோய்க்கான மருந்தினை நரம்பு வழியாகச் செலுத்தவிருக்கிறோம். மாதம் ஒருமுறை என ஆறு மாத காலத்திற்கு மருந்து செலுத்த வேண்டும். இப்போது அவர் நன்றாக இருக்கிறார்" என்றவரிடம் ``ஒருவர் உடலில் 22 கிலோ கட்டி இருப்பது சாத்தியமா? இவ்வளவு பெரிதாக வளரும்வரை எப்படித் தெரியாமல் இருந்தது?' என்று நாம் கேள்வி எழுப்பினோம்.

``சினைப்பையில் உருவாகும் கட்டி அவ்வளவு எளிதாக வெளியில் தெரியாது. கர்ப்பப்பையில் உருவாகும் கட்டிகள், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் கட்டிகள் என்றால் வெள்ளைப்படுதல் மூலமும் அதிகமான ரத்தப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் மூலமும் முன்கூட்டியே கணித்து மருத்துவர்களிடம் சென்றுவிடுவார்கள். ஆனால், சினைப்பையில் உருவாகும் கட்டி அப்படியானது இல்லை. பெரிதாகும் வரை சாதாரண வயிற்று பிரச்னை போலவே இருக்கும். அதனால்தான் இவ்வளவு பெரிதாகும்வரை தெரியாமல் இருந்திருக்கிறது. தொடர்ந்து வயிற்றுவலி இருந்தால், அது பெரிய பிரச்னை என்றோ சின்ன பிரச்னை என்றோ நாமாகவே முடிவெடுக்காமல் மருத்துவரை நாடுவது நல்லது.

கொரோனாவால் செயலிழந்த குழந்தையின் கால்கள்; ஊசியால் மீட்ட மருத்துவர்கள்; என்ன நடந்தது?

குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய் பாதிப்பு இருந்திருந்தால் இந்த பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. குழந்தைப்பேறு இல்லாதவர்கள் அதற்காக அதிகமான மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும் இப்படியான பாதிப்பு ஏற்படலாம். மார்பகப் புற்றுநோய் உள்ளவர்களுக்கும் இந்தப் புற்றுநோய் வரலாம்" என்றார் விளக்கமாக.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு