Published:Updated:

நாட்டு வெடிகுண்டைக் கடித்த சிறுவன்! - 4 மணிநேரத்தில் முகத்தை சீரமைத்த அரசு மருத்துவர்கள்

சிகிச்சைக்குப் பிறகு சிறுவனின் முகம்
சிகிச்சைக்குப் பிறகு சிறுவனின் முகம்

நாட்டு வெடிகுண்டை தீபக் என்ற 7 வயதுச் சிறுவன் தின்பண்டம்’ என்று நினைத்து கடித்துள்ளான். நாட்டு வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில், சிறுவனின் வாய்ப் பகுதி சிதைந்தது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்கரியமங்கலம் வனப்பகுதியிலும் அதையொட்டியிருக்கும் விவசாய நிலங்களிலும் சமூக விரோதிகள் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி வன விலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடி வருகிறார்கள். மாங்கொட்டை, பழங்கள், நெய் தடவிய பொருள்களில் வெடி மருந்துகளை நிரப்பி வன விலங்குகள் நடமாடும் பகுதியில் வீசுகிறார்கள். அதை விலங்குகள் கடிக்கும்போது வெடிக்கிறது. தாடை பகுதி சிதைந்து விலங்குகள் துடிதுடித்து செத்து மடிகின்றன.

கடந்த 5-ம் தேதி, இப்படி வீசப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை தீபக் என்ற 7 வயதுச் சிறுவன் ‘தின்பண்டம்’ என்று நினைத்து கடித்துள்ளான். நாட்டு வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில், சிறுவனின் வாய்ப் பகுதி சிதைந்தது.

சிகிச்சைக்கு முன்..
சிகிச்சைக்கு முன்..

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் கடந்த 6-ம் தேதி, சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான். அங்கு, குழந்தைகளுக்கான மருத்துவத் துறைத் தலைவர் வேல்முருகன் தலைமையில் அறுவைசிகிச்சை நிபுணர்கள் செந்தில்நாதன், விவேக் சண்முகம், ஜீவரதி, மயக்க மருந்து நிபுணர் தனலட்சுமி, எலும்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் சுரேஷ்பாபு ஆகியோர் அறுவைசிகிச்சையின் மூலம் சிறுவன் முகத்தை மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டு வந்து சாதனை படைத்துள்ளனர். 90 சதவிகிதம் சிறுவனின் முகம் பழைய நிலைக்குத் திரும்பியிருக்கிறது.

`குடியிருப்புப் பகுதியில் வெடித்த நாட்டு வெடிகுண்டு!' -புதுச்சேரி தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்

கேரள மாநிலத்தில், கடந்த மே மாதம் வெடிமருந்து நிரப்பப்பட்ட அன்னாசிப் பழத்தை சாப்பிட்ட கருவுற்ற யானை ஆற்றுத் தண்ணீரில் நின்றபடியே உயிரிழந்த சம்பவம், நாட்டையே உலுக்கியது. யானைக்கு நேர்ந்த அதே கொடூரம் இந்தச் சிறுவனுக்கும் நடந்திருப்பதால், `சிறுவன் மீண்டும் உயிர் பிழைக்க வாய்ப்புகளே இல்லை’ என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், எழும்பூர் அரசு மருத்துவர்களின் சாதனை அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது. மகன் மீண்டு வந்த சந்தோஷத்தில், ஆனந்தக் கண்ணீருடன் மருத்துவர்களுக்குப் பெற்றோர் நன்றி கூறினர்.

சிகிச்சைக்குப் பிறகு சிறுவனின் முகம்
சிகிச்சைக்குப் பிறகு சிறுவனின் முகம்

நம்மிடம் பேசிய குழந்தைகளுக்கான மருத்துவத் துறைத் தலைவர் வேல்முருகன், ``நாட்டு வெடிகுண்டு வெடித்ததில், சிறுவனுக்கு வாய்ப் பகுதி கிழிந்ததுடன் வலது கட்டை விரலும் கடுமையாக சேதமடைந்திருந்தது. இதனால், அதிக ரத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. மூன்று மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் இங்கு அனுமதிக்கப்பட்டான். சிறுவனுக்கு மூளையில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதைக் கண்டறிந்த பிறகு உடனடியாக முக புனரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டோம். சுமார் நான்கு மணிநேரத்தில், சிறுவனின் தசைகளைச் சரிசெய்து கட்டை விரலில் ஏற்பட்டிருந்த எலும்பு முறிவையும் சரி செய்தோம்.

அறுவைசிகிச்சைக்குப் பின்னர் முகத்தோற்றம் இயல்பு நிலைக்கு வந்திருக்கிறது. சிறு வீக்கம் இருக்கிறது. சில தினங்களில் அதுவும் சரியாகிவிடும். ஜூஸ், ஐஸ் கிரீம் சாப்பிடுகிறான். இன்னும் ஒரு வாரத்தில் டிஸ்சார்ஜ் செய்துவிடுவோம். அதேநேரம், ஊரடங்கு அமலுக்கு வந்த மார்ச் மாதம் 23-ம் தேதியிலிருந்து இதுநாள் வரை 450 முக்கிய அறுவைசிகிச்சைகளை செய்துள்ளோம்’’ என்றார் உற்சாகத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு