Published:Updated:

`ஊரடங்கில் இறந்த தாய்; உதவிய எம்.எல்.ஏ!’ - ஆண் மகன் இல்லாததால் இறுதிச் சடங்கு செய்த மூத்த மகள்

மூத்த மகள் ராஜேஸ்வரி
மூத்த மகள் ராஜேஸ்வரி

சென்னை ராஜமங்கலத்தில் ஊரடங்கின்போது உடல் நலக்குறைவால்உயிரிழந்த தாய்க்கு அவரின் மூத்த மகள் இறுதிச் சடங்குகள் செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சமயத்தில் சென்னை வில்லிவாக்கம் தொகுதி, 94 வது வட்டம், ராஜமங்களம் 5 வது தெருவில் குடியிருந்தவர் சாந்தம்மா (65). இவருக்கு 4 பெண் குழந்தைகள்.

சாந்தம்மா, அவரின் மகள் ராஜேஸ்வரி
சாந்தம்மா, அவரின் மகள் ராஜேஸ்வரி

சாந்தம்மாவின் கணவர் ஏழுமலை சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். 3 பெண் குழந்தைகளுக்குத் திருமணமாகிவிட்டது. சாந்தம்மாளின் மூத்த மகள் ராஜேஸ்வரிக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது கணவரைப் பிரிந்து ராஜேஸ்வரி தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்துவருகிறார்.

கடந்த 2-ம் தேதி இரவு உடல்நலக்குறைவு காரணமாகச் சாந்தம்மா, உயிரிழந்தார். வீட்டில் ஆண் துணை இல்லாததால் ராஜேஸ்வரியும் அவரின் தங்கையும் தவித்தனர். மேலும் ஊரடங்கு காரணமாக உறவினர்கள் யாரும் வர முடியவில்லை. இந்தச் சமயத்தில் என்ன செய்வது என்று தவித்த ராஜேஸ்வரியிடம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ ரங்கநாதனிடம் உதவி கேட்கும்படி கூறி அவரின் செல்போன் நம்பரையும் கொடுத்துள்ளனர்.

`ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் இறந்த வீரர்கள்!’ -இறுதி ஊர்வலத்தில் ஹெல்மெட் அணிந்து தந்தையைத் தேடிய மகள்
ராஜேஸ்வரி
ராஜேஸ்வரி

இதையடுத்து ராஜேஸ்வரி, எம்.எல்.ஏ ரங்கநாதனுக்கு போன் செய்து பேசி விவரத்தைக் கூறியுள்ளார். அதன்கேட்ட எம்.எல்.ஏ உதவி செய்வதாகக் கூறியதோடு ராஜேஸ்வரியின் வீட்டின் அருகில் உள்ள கட்சியினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள், அங்கு சென்று சாந்தம்மாவின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

இதையடுத்து வில்லிவாக்கம் நாதமுனி பகுதியில் உள்ள மயானத்தில் சாந்தம்மாளின் சடலம் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு ஆண் குழந்தைகள் இல்லாததால் ராஜேஸ்வரியே இறுதிச் சடங்கை செய்துள்ளார். ஊரடங்கால் வேலைக்கு செல்லாத ராஜேஸ்வரி மற்றும் அவரின் தங்கை வருமானமின்றி தவித்து வந்துள்ளனர். அம்மாவையும் இழந்த சோகம் அவர்களை வாட்டியது.

ராஜேஸ்வரிக்கு உதவி
ராஜேஸ்வரிக்கு உதவி

ராஜேஸ்வரியிடம் போனில் பேசினோம். ``எங்களுடைய சொந்த ஊர் விழுப்புரம். சென்னையில் அப்பா ஏழுமலை மேஸ்திரியாக வேலைபார்த்தார். அவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அம்மா சாந்தம்மா, ஹவுஸ் கீப்பிங் வேலைபார்த்தார். எங்கள் வீட்டில் 4 பெண் குழந்தைகள். நான் ப்ளஸ் டூ வரை படித்துவிட்டு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறேன்.

கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அம்மா வீட்டில் 3 ஆண்டுகளாகக் குடியிருந்து வருகிறேன். சில மாதங்களாக அம்மாவுக்கு ஆஸ்துமா பிரச்னை இருந்தது. அதனால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தோம். சில தினங்களுக்கு முன் மருத்துவமனையிலிருந்து அம்மாவை வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி கூறிவிட்டனர். வீட்டில் அம்மா நலமாகத்தான் இருந்தார்கள். கடந்த 2-ம் தேதி இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துட்டாங்க. என்னசெய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டு இருந்தோம்.

ராஜேஸ்வரி
ராஜேஸ்வரி
ஊரடங்கிலும் பிறந்தநாள் கேக்கை கத்தியால் வெட்டி கொண்டாடிய இளைஞர்கள் - வீடியோவால் சிக்கிய பின்னணி

அந்தச் சமயத்தில்தான் எம்.எல்.ஏ ரங்கநாதனிடம் செல்போனில் பேசி விவரத்தைக் கூறினேன். எனக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறிய எம்.எல்.ஏ உடனடியாக உதவிக்கு ஆட்களையும் ஏற்பாடு செய்தார். அக்கம் பக்கத்தினர் உதவியோடு அம்மாவின் இறுதி அஞ்சலி நடந்தது. மூத்த மகள் என்பதால் அம்மாவுக்கு நான்தான் இறுதி சடங்கு செய்தேன்" என்றவரால் பேச முடியவில்லை.

சிறிது நேரத்துக்குப் பிறகு அவர், ``கஷ்டப்பட்டாலும் அம்மாவும் அப்பாவும் எங்களைப் படிக்க வைத்துள்ளனர். கடைசி தங்கச்சி டிகிரி படித்துள்ளார். அவருக்கு வேலை கிடைக்க அரசு உதவ வேண்டும். அம்மா இறுதி அஞ்சலிக்கு உதவிய எம்.எல்.ஏ ரங்கநாதன் மற்றும் கட்சியினருக்கு நன்றியைத தெரிவித்துக் கொள்கிறேன். அம்மாவின் இறுதி அஞ்சலி முடிந்து அன்றைய தினம் வீட்டில் இருந்தபோது திடீரென கதவை தட்டும் சத்தம் கேட்டது. வெளியில் வந்து பார்த்தால் எம்.எல்.ஏ ரங்கநாதன், கொடுக்கச் சொன்னதாகப் பணமும் அரிசி, மளிகைப் பொருள்களைக் கட்சியினர் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். அம்மா இல்லாத வீடு வெறிச்சோடி இருக்கிறது" என்றார் கண்ணீர்மல்க.

அடுத்த கட்டுரைக்கு