Published:Updated:

``உறைந்து நின்ற அம்மா, கட்டி கலங்கிய தங்கை..!" - அப்பாவின் `வைரல்' சிலை பற்றி புவனேஸ்வரி

அப்பாவின் சிலை முன்பு மணமக்கள்
அப்பாவின் சிலை முன்பு மணமக்கள் ( ம.அரவிந்த் )

பல கரெக்‌ஷன்ஸ் சொல்லி சிலிக்கான் மற்றும் ரப்பரில் சிலையை வடிவமைக்க வைத்தோம். அப்பாவின் உயரம், நிறம், தோற்றம், மீசை முதற்கொண்டு அப்படியே தத்ரூபமாக வருவதற்கு ரொம்பவே மெனக்கெட்டோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பட்டுக்கோட்டையில், அப்பா மறைந்த நிலையில் தன் திருமணம் நடைபெறுவதை எண்ணி அவரின் இளைய மகளான மணப்பெண் கலங்கிய நிலையில் மணப்பெண்ணின் அக்கா, அப்பாவின் சிலையைத் தத்ரூபமாக வடிவமைத்து மேடையில் வைத்து திருமண பரிசாக அளித்தார். அந்த சிலை முன்னிலையில் மணமக்கள் மாலை மாற்றி ஆசி வாங்கிய வரவேற்பு நிகழ்ச்சி, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சிலை முன்பு குடும்பத்தினர்
சிலை முன்பு குடும்பத்தினர்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தங்கவேல் நகரைச் சேர்ந்தவர் செல்வம், ஐஸ் பேக்டரி மற்றும் இறால் பண்ணை தொழில் செய்து வந்தார். இவரின் மனைவி கலாவதி. இவர்களுக்கு புவனேஸ்வரி, திவ்யா, லட்சுமிபிரபா என மூன்று மகள்கள்.

மகள்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த செல்வம் முதல் இரண்டு மகள்களுக்கும் தான் முன் நின்று விமரிசையாகத் திருமணத்தை நடத்தினார். டாக்டரான மூத்த மகள் புவனேஸ்வரி தன் கணவர் கார்த்திக் சிவக்குமாருடன் லண்டனில் வசித்து வருகிறார்.

சிலை
சிலை

இந்நிலையில் 2012-ம் ஆண்டு உடல் நிலையில் குறைபாடு ஏற்பட்டு 61 வயதில் செல்வம் இறந்துவிட்டார். அப்போது கடைசி மகள் லட்சுமி பிரபா ப்ளஸ் டூ படித்து வந்தார். படிப்பு முடிந்த பிறகு, சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து தந்தை இறந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, லட்சுமி பிரபாவுக்குத் திருமண ஏற்பாட்டை செய்தனர் குடும்பத்தினர். அப்பா இல்லை என்கிற பெரும் வருத்தத்துடன், அவர் இருந்து தன் கல்யாணத்தை நடத்தி வைக்க தனக்குக் கொடுத்து வைக்கவில்லையே என்பதை நினைத்துக் கலங்கினார் லட்சுமி பிரபா. ஒரு வழியாக அவரை சமாதானம் செய்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர்.

மாலை மாற்றிக்கொண்ட மணமக்கள்
மாலை மாற்றிக்கொண்ட மணமக்கள்

கடந்த 27-ம் தேதி லட்சுமி பிரபாவுக்கும், குமாரபாளையத்தை சேர்ந்த கிஷோர் என்பவருக்கும் பட்டுக்கோட்டையில் திருமணம் நடைபெற்றது. திங்களன்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெகிழ்ச்சியான விஷயம், புவனேஸ்வரி தன் தந்தை செல்வத்தின் சிலையைத் தத்ரூபமாக வடிவமைத்து தன் தங்கைக்குப் பரிசாகக் கொடுத்து, தன் திருமணத்துக்கு தன் அப்பா இல்லையே என்ற லட்சுமி பிரபாவின் குறையைத் தீர்த்துள்ளார்.

லட்சுமி பிரபாவின் அப்பா முன்னின்று நடத்தினால் எப்படியிருக்குமோ அதேபோல் அவரது சிலை முன்பு சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது அவருடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி. இந்தச் சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அப்பாவின் சிலையுடன் லட்சுமி பிரபா
அப்பாவின் சிலையுடன் லட்சுமி பிரபா

இது குறித்து புவனேஸ்வரியிடம் பேசினோம். ``எங்க அப்பா செல்வம் முற்போக்கு சிந்தனை கொண்டவர். எங்க குடும்பத்துல யாரும் பெருசா படிக்கலைங்கிறதால பொம்பளை பிள்ளைகளா இருந்தாலும் எங்களை நல்லா படிக்க வைக்கணும்னு நினைச்சார். அதேபோல் பல எதிர்ப்புகளுடன் எங்களை நல்லா படிக்கவும் வெச்சார்.

இன்னைக்கு நாங்க எல்லாரும் நல்ல நிலையில் இருப்பதற்குக் காரணம் எங்களோட படிப்புதான். என்னையும் திவ்யாவையும் நல்ல இடத்துல கல்யாணம் செஞ்சு கொடுத்தார் அப்பா. அவர் முன்னின்று நடத்தின எங்க கல்யாணம் சிறப்பாக பிரமாண்டமாக நடந்துச்சு. அதன் பிறகு அவர் இறந்துட்டார்.

சிலை
சிலை

எங்க அப்பா, கடைசி தங்கச்சி லட்சுமி பிரபா மேல அளவு கடந்த பிரியம் வெச்சிருந்தார். அவர் இல்லாம லட்சுமி பிரபாவுக்கு திருமண ஏற்பாடு செஞ்சப்போ எங்க எல்லோருக்கும் வருத்தமா இருந்துச்சு. குறிப்பா லட்சுமி பிரபா அப்பாவை நெனச்சு ரொம்பவே உருகினா. அப்பா இருந்து திருமணத்தை நடத்தி வைக்காததை நினைச்சு கலங்கினாள்.

லண்டனிலிருந்த நான், என் தங்கை லட்சுமி பிரபாவுக்கு அப்பா இருப்பதுபோல் சர்ப்ரைஸாக எதையாவது செய்யணும்னு நெனச்சேன். பல ஐடியாக்கள் செய்து, இறுதியா அப்பாவின் சிலையை வடிவமைத்து திருமண நிகழ்ச்சியில் வைக்கலாம்னு முடிவு செஞ்சோம்.

குடும்பத்தினர்
குடும்பத்தினர்

இதற்காக பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனம்கிட்ட, அப்பாவின் சிலையை வடிவமைப்பதற்கு ஆர்டர் கொடுத்தோம். சிலை செய்பவர் என்னதான் போட்டோவை பார்த்து செஞ்சாலும் அப்பாவை போலவே ஒரிஜினலா வருமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. உடனே, நானும் என் கணவர் கார்த்திக் சிவக்குமாரும் லண்டனிலிருந்து கிளம்பி பெங்களூரு வந்தோம்.

அத்துடன் அங்கிருந்தபடியே பல கரெக்‌ஷன்ஸ் சொல்லி சிலிக்கான் மற்றும் ரப்பரில் சிலையை வடிவமைக்க வைத்தோம். அப்பாவின் உயரம், நிறம், தோற்றம், மீசை முதற்கொண்டு அப்படியே தத்ரூபமாக வருவதற்கு ரொம்பவே மெனக்கெட்டோம். நாங்களே ஆச்சர்யப்படுற அளவுக்கு ரூ. 6 லட்சம் செலவில் அப்பாவின் சிலை தயாரானது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி
திருமண வரவேற்பு நிகழ்ச்சி

இதற்காக என் கணவர் கார்த்தி சிவக்குமார் எனக்கு கொடுத்த ஒத்துழைப்பை இப்ப நெனச்சாலும் எனக்கு கண்களில் நீர் கசிகிறது. இதையடுத்து, சர்ப்ரைஸாக அப்பாவின் சிலையை மண்டபத்துக்குக் கொண்டு வந்து மேடையில் வச்சோம். அப்பாவை நேரில் பார்ப்பதைப்போல் உணர்ந்த லட்சுமி பிரபா சிலையைக் கட்டிக்கொண்டு, தான் ஒரு மணப்பெண் என்பதையும் மறந்து அழுதாள்.

சிலையைத் தொட்டுப் பார்த்து ஆச்சர்யப்பட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். அம்மா கலாவதி அதிர்ச்சியில் அப்படியே உறைஞ்சுட்டாங்க. அம்மாகிட்ட முன்னரே சிலைப் பற்றி சொன்னப்போ, `அதெல்லாம் வேண்டாம், எல்லோருக்கும் கஷ்டமாகிடும்'னு சொன்னாங்க.

ஆனா, சிலையைப் பார்த்ததும் தொட்டுப் பார்த்து கலங்கிட்டாங்க. `என் பொண்ணு, என் கணவரை மீண்டும் கொண்டு வந்துட்டாள்'னு நெகிழ்ச்சியோடு எல்லார்கிட்டயும் சொல்லிட்டே இருந்தாங்க. `அப்பா' முன்னாடி மணமக்களை மாலை மாத்த வெச்சோம். குரூப் போட்டோ எடுத்துக்கிட்டோம். நிகழ்ச்சிக்கு வந்தவங்க `அப்பா'கூட செல்பி எல்லாம் எடுத்துக்கிட்டாங்க.

எங்க அப்பா முன்னாடி நின்னு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துகிறார் என்ற உணர்வு எல்லாருக்கும் இருந்துச்சு. அப்பாவை நேரில் வரவைக்க முடியாதுதான். ஆனா, அவர் இல்லாத குறையை கொஞ்சமேனும் போக்க நெனச்சோம்.

மணமக்கள்
மணமக்கள்

அது சாத்தியமாகியிருக்கு. இனி `அப்பா' வீட்டுல, எங்க கூடவே நிரந்தரமா இருக்கப் போறார். இனி எங்க வீட்ல எல்லா நிகழ்ச்சிகளும் `அப்பா' முன்னாடிதான் நடக்கும். இது எங்க குடும்பத்துக்கே ஒரு புது சந்தோஷத்தைக் கொடுத்திருக்கு'' என்றார்.

மகள்களின் அப்பாக்களுக்கு ஆயுள் முடிவதேயில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு