Published:Updated:

கொரோனா அச்சம்: சென்னையில் 5 மணி நேரம் பிளாட்பாரத்தில் கிடந்த முதியவர் சடலம்!

முதியவர் சடலம்
முதியவர் சடலம்

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை அருகிலேயே முதியவரின் சடலம் 5 மணி நேரம் அநாதையாகக் கிடந்துள்ளது. கொரோனா அச்சம் காரணம் முதியவரின் சடலத்தை எடுத்துச் செல்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் மக்களை அச்சத்தில் ஆழ்த்திவருகிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா அதிகம் உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. ஊரடங்கையொட்டி தீவிர வாகனச் சோதனையில் போலீஸார் ஈடுபட்டுவருகின்றனர்.

முதியவர் சடலம்
முதியவர் சடலம்

கொரோனா அச்சம் காரணமாக ஒரு மனிதனுக்கு உதவி செய்யவே பலர் தயங்கும் சூழல் நிலவுகிறது. இந்தச் சூழலில் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நேற்று காலை முதியவர் ஒருவர் பிளாட்பாரத்தில் படுத்திருந்தார். அவரின் உடலில் எந்தவித அசைவும் இல்லை எனப் பெரியமேடு காவல் நிலையத்துக்கும் மாநகராட்சி அலுவலகத்துக்கும் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால், யாரும் அங்கு வரவில்லை. 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அங்கு வந்தனர். அவர்கள் முதியவரைப் பரிசோதித்துப் பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ் ஊழியர்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர். அதனால் அநாதையாக முதியவரின் சடலம் பிளாட்பாரத்திலேயே சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் கிடந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

முதியவர்

முன்னதாக தனியார் தொண்டு நிறுவனத் தன்னார்வலர்கள் அங்கு வந்தனர். அவர்களும் முதியவரை மீட்டுக் காப்பகத்தில் சேர்க்க முடிவு செய்தனர். ஆனால் முதியவர் இறந்ததால் அவரின் சடலத்தை எடுத்துச் செல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் போலீஸாரும் மாநகராட்சி அதிகாரிகளும் அங்கு வரவில்லை. சடலத்தை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸும் வராதால் தனியார் தன்னார்வலர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கேயே காத்திருந்தனர். கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்களும் முதியவரின் சடலம் அருகே வரவில்லை.

முதியவர் சடலம்
முதியவர் சடலம்

இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறுகையில், ``உயிரிழந்த முதியவர் யாரென்று தெரியவில்லை. அவர் உடை எதுவும் அணியாமல் நிர்வாணமாக பிளாட்பாரத்தில் படுத்திருந்துள்ளார். ஊரடங்கு காரணமாக உணவு கிடைக்காமல் சோர்வாகக் காணப்பட்டதாக அந்தப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர். சில நாள்களுக்கு முன்தான் இந்த பிளாட்பாரத்தில் தங்கியிருந்துள்ளார். அவர் இறந்தபிறகு சடலத்தை எடுத்துச் செல்வதில்கூட சிக்கல் நீடித்தது. எனவே, சாலைகளில் தங்கியிருக்கும் ஆதரவற்றவர்களுக்கு உணவு, தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

மாநகராட்சி அலுவலகம்

பெரியமேடு போலீஸாரிடம் கேட்டதற்கு, ``கொரோனா பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளதால் சம்பவ இடத்துக்குச் செல்ல காலதாமதமாகிவிட்டது. முதியவரின் சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளோம். பிரேதப் பரிசோதனை முடிவில்தான் முதியவரின் இறப்புக்கான காரணம் தெரியவரும்" என்றார்.

முதியவர் சடலம்
முதியவர் சடலம்
``கொரோனா அச்சம்; வீட்டுக்குள் அனுமதிக்காத ஓனர்?" - 5 மணி நேரம் தெருவில் கிடந்த தொழிலாளியின் சடலம்

சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, `சம்பவம் தொடர்பாக விசாரித்துவருகிறோம்' என்று மட்டும் கூறினர்.

முதியவர் இறந்து கிடந்த இடம், ரிப்பன் மாளிகை அருகில்தான் உள்ளது. அப்படியிருந்தும் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் உடனடியாக அங்கு செல்லாததற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை என்கின்றனர் தன்னார்வலர்கள்.

தன்னார்வலர்கள் எடுத்த முயற்சி காரணமாக முதியவரின் சடலம் அரசு மருத்துவமனை பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்தச் சம்பவத்தைப் பார்த்தபோது மனிதநேயம் மரித்துவிட்டதா என்று எண்ணத் தோன்றியது.

அடுத்த கட்டுரைக்கு