Published:Updated:

ஈரோடு: மின்வாரிய ஸ்கிராப் ஏலம்: அதிகாரிகள் துணையுடன் லட்சக்கணக்கில் முறைகேடா?!

ஸ்கிராப் ஏலத்தில் இடிக்கப்படவிருக்கும் கட்டடங்கள்.

கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தின் இரண்டு கட்டடங்களை அகற்றிவிட்டு, அந்த அரை ஏக்கர் நிலத்தை மீண்டும் நில உரிமையாளருக்கே ஒப்படைத்துவிடும் நோக்கத்தில் இந்த ஏலத்தை அவசரகதியில் நடத்தி முடித்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஈரோடு: மின்வாரிய ஸ்கிராப் ஏலம்: அதிகாரிகள் துணையுடன் லட்சக்கணக்கில் முறைகேடா?!

கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தின் இரண்டு கட்டடங்களை அகற்றிவிட்டு, அந்த அரை ஏக்கர் நிலத்தை மீண்டும் நில உரிமையாளருக்கே ஒப்படைத்துவிடும் நோக்கத்தில் இந்த ஏலத்தை அவசரகதியில் நடத்தி முடித்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Published:Updated:
ஸ்கிராப் ஏலத்தில் இடிக்கப்படவிருக்கும் கட்டடங்கள்.

ஈரோடு மாவட்டம்ம் வெண்டிபாளையத்தையும், நாமக்கல் மாவட்டம், ஓடாநிலையையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலத்துடன்கூடிய கதவணை நீர்மின் நிலையம் இயங்கிவருகிறது. 30 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் வெண்டிபாளையம் நீர்மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெறும்போது, டான்ஜெட்கோ சார்பில் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகமும், துணைமின் நிலையமும் சுமார் 2.5 ஏக்கர் நிலத்தில் கட்டி முடிக்கப்பட்டன.  

வெண்டிபாளையம் நீர்மின் நிலையம் கட்டி முடித்து 10 ஆண்டுகளாக மின்உற்பத்தி நடைபெற்றுவரும் நிலையில், கட்டுமான காலத்தில் கட்டப்பட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகமும், அதையொட்டி கட்டப்பட்ட இரண்டு அலுவலகக் கட்டடங்களையும் இடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் முடிவுசெய்தனர். பல லட்சம் செலவில் கட்டப்பட்ட அந்தக் கட்டடத்தை இடித்து அதிலுள்ள கதவுகள், இரும்புச் சட்டங்கள் உள்ளிட்ட பொருள்களை ஏலம்விட மின்வாரிய அதிகாரிகள் திட்டமிட்டனர். தற்போது கட்டடத்தை இடித்து, அதிலுள்ள பொருள்களை அப்புறப்படுத்துவதற்கான ஏலத்தை மிகக் குறைந்த விலைக்கு ஏலம்விட முயல்வதாகவும், இந்த டெண்டரில் குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு மட்டுமே ஒப்பந்தப்புள்ளி குறித்த அறிவிப்பை அனுப்பியிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து பெயர் கூற விரும்பாத சில ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது, ``வெண்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள நீர்மின் திட்ட கண்காணிப்பு பொறியாளர்  அலுவலகம் கடந்த 2007-ம் ஆண்டு வாக்கில் சுமார் ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்டது. மொத்தம் மூன்று பெரிய அலுவலக அறைகளில் இரண்டு கட்டங்களை மட்டும் இடித்து அப்புறப்படுத்த மின்வாரிய அதிகாரிகள் முடிவுசெய்து அதற்கான ஒப்பந்தப்புள்ளியைக் கடந்த 14-ம் தேதி வெளியிட்டனர். பொதுவாக இது போன்ற ஸ்கிராப் விடுவதற்கான ஏல அறிவிப்பு ஆன்லைன் மூலமாகவே வெளியிடப்படும். ஆனால், இந்த ஏலத்தை ஆன்லைன் மூலம் நடத்தாமல், தங்களுக்குவேண்டிய சில ஒப்பந்ததாரர்களை மட்டும் அழைத்து அவர்களிடமிருந்து பெயரளவில் ஒப்பந்தப்புள்ளிகளைப் பெற்று இந்த ஏலத்தை கடந்த 27-ம் தேதி நடத்தி முடித்துள்ளனர்.


இந்த ஏலத்தில் பங்கேற்ற ஒப்பந்ததாரரில் ஒரு நபர், டெண்டரில் பங்கேற்ற மற்ற ஒப்பந்ததாரர்களைத் தனியே அழைத்து குறிப்பட்ட தொகையைக் கொடுத்து டெண்டரை வாபஸ் பெறச் செய்து, தனக்கே இந்த டெண்டரை கிடைக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறார். இதற்கு மின்வாரிய அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். பல லட்சம் செலவில் கட்டப்பட்ட இந்த இரண்டு கட்டடங்களின் இரும்புச் சட்டங்கள், கதவுகள், கருங்கற்கள் போன்றவை பல லட்சத்துக்கு ஏலம் போகும். ஆனால் இது வெறும் ரூ. 2.5 லட்சத்துக்கு மட்டுமே இறுதி ஏலம் கோரப்பட்டிருக்கிறது.

வெண்டிபாளையம் கதவணை நீர்மின் நிலைய கட்டுமானப் பணிகளின்போது கட்டப்பட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம்.
வெண்டிபாளையம் கதவணை நீர்மின் நிலைய கட்டுமானப் பணிகளின்போது கட்டப்பட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம்.

அதுமட்டுமல்ல, கட்டடம் அமைந்திருக்கும் நிலமும், தற்போதுள்ள துணைமின் நிலையமும் சேர்த்து 2.5 ஏக்கர் நிலம், கடந்த 2006-ம் ஆண்டில் அதன் நில உரிமையாளரிடமிருந்து  கையகப்படுத்தப்பட்டது. அந்த நிலத்துக்குத் தரவேண்டிய தொகையை மின்வாரியம் இன்னும்  நில உரிமையாளருக்கு வழங்கவில்லை. கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் அங்கு அமைந்திருக்கும் துணைமின் நிலையத்தை மீண்டும் நில உரிமையாளருக்கு ஒப்படைக்க முடியாது. ஆனால், கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தின் இரண்டு கட்டடங்களை அகற்றிவிட்டு, அந்த அரை ஏக்கர் நிலத்தை மீண்டும் நில உரிமையாளருக்கே ஒப்படைத்துவிடும் நோக்கத்தில் இந்த ஏலத்தை அவசரகதியில் நடத்தி முடித்துள்ளனர்” என்றனர்.        

இது குறித்து ஈரோடு மண்டல நீர்மின் நிலைய மேற்பார்வை பொறியாளர் பத்மநாபனிடம் கேட்டபோது, ``ஏலம் குறித்த அறிவிப்பு ஈரோடு மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகங்கள், ஒருசில பஞ்சாயத்து அலுவலகங்களின் அறிவிப்புப் பலகையில் ஒட்டிவைக்கப்பட்டிருக்கிறது. ஏலத்தில் 11 பேர் கலந்துகொண்டனர். அவர்கள் ஏலம் கூறியதை வீடியோ எடுத்துவைத்திருக்கிறோம். இந்த டெண்டர் இறுதியானது அல்ல. இந்த டெண்டர் குறித்து முதன்மை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் அடங்கிய டெண்டர் கமிட்டிக்கு அனுப்பிவைத்து, சரிபார்க்கப்பட்ட பின்னரே டெண்டர் இறுதிசெய்யப்படும்.
நில உரிமையாளருக்குத் தொகை வழங்குவதை மின்வாரியமும், அரசும்தான் முடிவுசெய்ய வேண்டும். நிலத்துக்கு எவ்வளவு தொகை வழங்குவது என்பதை மாவட்ட நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்,

இது குறித்து பெயர் கூற விரும்பாத சென்னை டான்ஜெட்கோவின் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ``ஏலத்தில் முறைகேடு நடந்திருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். நில உரிமையாளருக்குத் தொகையை வழங்காததற்கான காரணத்தையும் விசாரித்துக் கூறுகிறேன்” என்றார்.