மேற்குத் தொடர்ச்சி மலையில் நெல்லை மாவட்டம், களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் யானை, கரடி, புலி, மான் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. வனக்காப்பகத்தின் அருகிள்ள கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளுக்குச் சொந்தமான விளைநிலங்கள் அந்தப் பகுதியில் உள்ளன.

காடுகளிலுள்ள விவசாய நிலத்தில் அந்தப் பகுதி மக்கள் பயிர்களைப் பயிரிட்டுவருகிறார்கள். இருப்பினும், காட்டு விலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிட்டிருக்கும் வாழை, நெல் உள்ளிட்டவற்றைச் சேதப்படுத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அதனால் விலங்குகளிடமிருந்து விளைநிலத்தைப் பாதுகாக்கும் வகையில், மலையடிவாரத்தில் மின்வேலி அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
இந்த நிலையில், நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்துக்குட்பட்ட சிங்கம்பட்டி பீட் இரண்டிலுள்ள பட்டா நிலங்களில் விவசாயம் நடைபெற்றுவருகிறது. அந்தப் பகுதிக்குள் நுழைந்த இரண்டு வயதுள்ள ஆண் யானை, அங்கிருந்த பனைமரங்களை வேரோடு பிடுங்கி எறிந்திருக்கிறது. ஒரு பனைமரத்தைப் பிடுங்கியபோது அதன் பசுமையான மட்டை, அருகில் சென்றுகொண்டிருந்த மின் வயரில் பட்டிருக்கிறது.

மின்சாரத்தில் பனை பட்டதால் அதில் பாய்ந்த மின்சாரம் யானை உடலில் பட்டதில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்ததும், களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பகப்பிரியா தலைமையிலான வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழந்த சம்பவத்தால் விவசாயிகளிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.