Published:Updated:

பரமக்குடி: இம்மானுவேல் சேகரன் நினைவுதினம்! - அனைத்துக் கட்சியினர் அஞ்சலி

இம்மானுவேல் குடும்பத்தினர் அஞ்சலி.
இம்மானுவேல் குடும்பத்தினர் அஞ்சலி. ( உ.பாண்டி )

இம்மானுவேல் சேகரன் பரமக்குடி அருகேயுள்ள செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். 1956-ம் ஆண்டு முதுகுளத்தூரில் நடந்த சாதிக் கலவரத்தை தொடர்ந்து நடந்த சமாதானக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், 1957-ம் ஆண்டு செப்டம்பர் 11-ல் வெட்டிக் கொல்லப்பட்டார்.

பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனின் 63-ம் ஆண்டு நினைவுதின குருபூஜை இன்று காலை தொடங்கியது. அமைச்சர்களும் அனைத்துக்கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து மக்கள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டதால், பரபரப்பு ஏதுமின்றி அமைதியான முறையில் நினைவுதின குருபூஜை நடந்தது.

பரமக்குடி: இம்மானுவேல் நினைவிடத்தில் அமைச்சர்கள் அஞ்சலி
பரமக்குடி: இம்மானுவேல் நினைவிடத்தில் அமைச்சர்கள் அஞ்சலி
உ.பாண்டி

தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகப் போராடிய இம்மானுவேல் சேகரன், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். 1956-ம் ஆண்டு முதுகுளத்தூரில் நடந்த சாதிக் கலவரத்தை தொடர்ந்து நடந்த சமாதானக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், 1957-ம் ஆண்டு செப்டம்பர் 11-ல் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் பரமக்குடியில் ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகிறது.

தி.மு.க-வினர் அஞ்சலி
தி.மு.க-வினர் அஞ்சலி
உ.பாண்டி

இம்மானுவேல் சேகரனின் 63-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. இம்மானுவேல் சேகரனின் சொந்த கிராமமான செல்லூரைச் சேர்ந்தவர்களும், இம்மானுவேல் சேகரனின் குடும்பத்தினரும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி முதல் மரியாதை செய்தனர். அ.தி.மு.க சார்பில் தமிழக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜலெட்சுமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா, பரமக்குடி எம்.எல்.ஏ சதன்பிரபாகர், மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி ஆகியோருடன் ஏராளமான அ.தி.மு.க தொண்டர்களும் இம்மானுவேல் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், தமிழரசி, சத்தியமூர்த்தி, ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி, முன்னாள் எம்.பி பவானிராஜேந்திரன், முன்னாள் மாவட்டச் செயலாளர் திவாகரன் உள்ளிட்ட தி.மு.க-வினர் அஞ்சலி செலுத்தினர். ம.தி.மு.க சார்பில் அந்தக் கட்சியின் மாநில நிர்வாகிகள் புலவர் செவந்தியப்பன், அழகுசுந்தரம், மாவட்டச் செயலாளர் பேட்ரிக் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். முதுகுளத்தூர் எம்.எல்.ஏ மலேசியா பாண்டி தலைமையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செல்வப்பெருந்தகை, மாவட்டத் தலைவர் தேவேந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பா.ஜ.க சார்பில் அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவர் முரளிதரன் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சி அஞ்சலி
காங்கிரஸ் கட்சி அஞ்சலி
உ.பாண்டி

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கியச் சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருப்பதுடன் மாற்றுப் பாதைகளில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டிருக்கிறது. மேலும், இம்மானுவேல் நினைவிடம், நகரின் முக்கியப் பகுதிகள், பதட்டமான கிராமங்களில் கண்காணிப்பு கேமராக்கள், ஆளில்லா விமான கேமராக்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு