Published:Updated:

`நாம் உழைப்பவர்கள், நமக்கு கொரோனா வராது!' - கிராம மக்கள்முன் முதல்வர் எடப்பாடி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

`அரசு மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் பயின்று வெளியே வரும் மாணவர்கள் ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும்"

திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி ஒன்றுக்கு கடந்த 2011-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு மருத்துவக்கல்லூரி திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டது. ஒவ்வொரு பட்ஜெட் அறிவிப்பின் போதும் மருத்துவக் கல்லூரியை எதிர்பார்த்து திண்டுக்கல் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை மனதில்கொண்டு தமிழகத்தில் பரவலாக மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசு அமைக்கத் திட்டமிட்டுள்ளது. அவ்வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல்லில் மருத்துவக் கல்லூரிக்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.

அடிக்கல் நாட்டு விழா
அடிக்கல் நாட்டு விழா

நத்தம் சாலையில் உள்ள அடியனூத்து பஞ்சாயத்தில் 90 ஏக்கர் நிலத்தில் மருத்துவக்கல்லூரி வளாகம் அமைய இருக்கிறது. முதல் கட்டமாக 20 ஏக்கர் நிலத்தில் கட்டடங்கள் அமைய இருக்கின்றன. இதற்காக 327 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21-ம் கல்வி ஆண்டில் 150 மாணவர்கள் சேர்க்கப்பட இருக்கிறார்கள்.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நத்தம் மற்றும் நிலக்கோட்டையில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டடம் குஜிலியம்பாறை தாலுகாவில் தொப்பைசாமி ஆற்றின் குறுக்கே அணை கட்டு, பாலாறு குடியிருப்பு அருகில் தேவஸ்தான கோயிலுக்கு குடிநீர் வழங்குவதற்காக பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்தல் ஆகிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

செயற்கையாக உருவாக்கப்பட்ட வாழைகள்
செயற்கையாக உருவாக்கப்பட்ட வாழைகள்
குமரேசன்

மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் விழா அரங்குக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. உலகம் முழுவதும் பரவி வரும் வைரஸிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் நிறுத்தப்பட்டு அவர்கள் சானிடைஸர்கள் எடுத்துக்கொண்ட பின்னரே அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். விழா மேடையின் அருகே நெல், வாழை மற்றும் கரும்பு ஆகிய வயல்களை செயற்கையாகவும் உருவாக்கி இருந்தனர்.

`பரிசீலனையில் இருக்கிறது; விரைவில் மயிலாடுதுறை தனி மாவட்டம்!' - நாகை விழாவில் முதல்வர் பழனிசாமி

விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ``பழநி திருக்கோயில் அமைந்த பகுதியை நவீனமயமாக்க 58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளும் தொடங்கியுள்ளது. திருப்பதி போல பழநி கோயிலும் அனைத்து நவீன வசதிகள் கொண்ட கோயிலாக அமையும். 5 புதிய மாவட்டங்களை உருவாக்கி இருக்கிறோம். புற்றுநோய் கண்டறியக் கூடிய கருவியை 5 மருத்துவமனைகளுக்குக் கொடுத்திருக்கிறோம். கரூரில் தனியார் மருத்துவமனையை விஞ்சிய அரசு மருத்துவமனைகளை உருவாக்கி இருக்கிறோம்.

ஆனால், நாங்கள் எதுவும் செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் பொய் சொல்கின்றன. இந்தியாவில் 100-க்கு 70 பிரசவம் அரசு மருத்துவமனையில்தான் நடக்கிறது. கைகள் இல்லாமல் இருந்த திண்டுக்கல் மாற்றுத்திறனாளிக்கு இறந்தவர் கைகளை பொருத்தி சாதனை படைத்திருக்கிறோம். மருத்துவத் துறையில் மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறோம்" என்றார்.

விழாவில் கலந்துகொண்டவர்கள்
விழாவில் கலந்துகொண்டவர்கள்

தொடர்ந்து அவர் பேசும்போது, ``அரசு மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் பயின்று வெளியே வரும் மாணவர்கள் ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், ``எம்.வி.எம். கல்லூரியில் உள்விளையாட்டு அரங்கம் பரிசீலனையில் இருக்கிறது. அ.தி.மு.க-வுக்கு அடித்தளமான மாவட்டம் திண்டுக்கல். தமிழகத்தில் 30 ஆண்டுக்காலம் ஆட்சியில் இருக்கும் ஒரே அரசு அ.தி.மு.க அரசு. கொரோனா வைரஸ் தாக்குவதில் இருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். நமக்கு நோய் தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனை சென்று பரிசோதனை செய்ய வேண்டும். கை மற்றும் கால்களைக் கழுவி வீட்டுக்குள் செல்லுங்கள். தமிழகத்தில் ஒருவருக்குத்தான் கொரோனா பாதிப்பு இருந்தது. அவரும் தற்போது குணமடைந்துவிட்டார்" என்று பேசினார்.

``எங்கள் அமைச்சரவையில் மூத்த அமைச்சர், அனைவரையும் சிரிக்க வைக்கக்கூடிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்" என்று குறிப்பிட்ட முதல்வர், விழா முடிந்து திரும்பி வரும் வழியில், வெள்ளோடு கிராமத்தில் பேசினார். அதில், ``நாம் உழைக்கும் மக்கள். நமக்கு கொரோனா வராது" என்று கூறினார். இந்த விழாவில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

`திண்டுக்கல் சீனிவாசனுக்கு வயசாகிடுச்சு; ராஜேந்திர பாலாஜி பக்திமான்'-எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?
அடுத்த கட்டுரைக்கு