Published:Updated:

`ஐதிகத்துக்கு முன்னாடி மக்கள் முக்கியமில்லையா?!’ -கொரோனா விழிப்புணர்வில் க்ளாப்ஸ் வாங்கும் கலெக்டர்

கூட்டத்தில் கலெக்டர் கதிரவன்
கூட்டத்தில் கலெக்டர் கதிரவன்

மக்கள் நல்லாயிருக்கணும்னுதானே கோயில், மசூதி, சர்ச் எல்லாத்துக்கும் போறோம். இந்த வைரஸ் பரவல் கட்டுப்படுற வரைக்கும் இதைக் கொஞ்சம் குறைச்சுக்குவோம்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாதென தமிழக அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மாவட்ட ரீதியாக கலெக்டர்கள் முன்னின்று இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு கலெக்டர் கதிரவனோ, இந்த விவகாரத்தில் கூடுதல் அக்கறையெடுத்து நோய்த் தாக்கம் ஏற்படாமலிருக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளைச் செய்துவருகிறார்.

கொரோனா ஆலோசனைக் கூட்டம்
கொரோனா ஆலோசனைக் கூட்டம்

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், ஜவுளி, உணவகம், நகைக்கடை, தொழிற்சாலைகளைச் சேர்ந்த உரிமையாளர்களுடன் கூட்டம் போட்டு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறார். மக்கள் அதிகமாகக் கூடும் துணிச்சந்தை, மாட்டுச்சந்தை போன்றவற்றுக்குத் தற்காலிக தடைவிதித்திருக்கிறார். இந்த வரிசையில் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களின் பிரதிநிதிகளுடன் கலெக்டர் இன்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

அப்போது கலெக்டர் பேசுகையில், `ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவை ஏன் 2 மாசம் தள்ளிப் போடக் கூடாது. திருவிழாவுக்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் வருவாங்க. இந்த நேரத்தில் இது தேவையில்லாத சிக்கலாகாதா?... ஒரு நூறு பேருக்கு வைரஸ் பரவுனா அப்படியே அது வைரலாகிடும். எல்லாரும் போய் ஹாஸ்பிட்டல்ல படுத்துக்கிட்டா யார் போய் சாமியைக் கும்புடுறது?... சாமி அங்கத்தானே இருக்கப் போவுது. ரெண்டு மாசம் கழிச்சும் திருவிழாவை நடத்தலாமே’ எனக் கூற, கோயில் அதிகாரியோ, `ஐதிகப்படி இதுவரை கோயில் திருவிழாவை தள்ளிப்போட்டதில்லைங்க சார்’ என பதிலளித்தார்.

ஆனால் கலெக்டரோ, `ஐதிகம் நம்மளைக் காப்பாத்தாதே?... இது ஒரு மெடிக்கல் எமர்ஜென்சி டைம். ஸ்கூல், காலேஜ் எல்லாத்தையும் மூடிட்டோம். ஐதிகத்துக்கு முன்னாடி மக்கள் ரொம்ப முக்கியமில்லையா. இந்த ஐதிகமெல்லாம் மக்களுக்காகத் தானே வகுக்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளில் திருவிழாவை நிறுத்தச் சொல்லி எந்தப் பிரச்னையாவது வந்துருக்கா. சொஸைட்டி நல்லா இருக்கணும்னுதானே சாமி கும்புடுறோம். மக்கள் நலனுக்காக இந்த ஒருதடவை திருவிழாவை தள்ளிப் போடுறதைக் கொஞ்சம் யோசிங்க’ என்றார்.

கலெக்டர் கதிரவன்
கலெக்டர் கதிரவன்

விடாப்பிடியாக பேசிய கோயில் அதிகாரி, `பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாங்கிறது ஈரோடு மக்களின் சென்டிமென்ட் சார். அதுமட்டுமல்லாம மாரியம்மனுக்கு வேப்பிலை, மஞ்சள்தான் பயன்படுத்துறோம். அது கிரிமிநாசினி தானே’ எனச் சொல்ல, `கொரோனாவுக்கு இதெல்லாம் ஒத்து வராதுங்க. அப்படின்னா எல்லாரும் மஞ்சளையும், வேப்பிலையும் சாப்பிட்டுடலாமே... இதேபோல மசூதிகளிலும், சர்ச்சுகளில் கூட்டம் கூடுவதை தவிர்த்துக்கொள்வது நல்லது. வீட்டிலிருந்தபடியும் கடவுளை கும்பிடலாம். மக்கள் நல்லாயிருக்கணும்னு தானே கோயில், மசூதி, சர்ச் எல்லாத்துக்கும் போறோம். இந்த வைரஸ் பரவல் கட்டுப்படுற வரைக்கும் இதைக் கொஞ்சம் குறைச்சுக்குவோம்” என வழிபாட்டுத் தலங்களின் பிரதிநிதிகளிடம் கோரிக்கை வைத்தார். அவர்களும் இதை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தனர்.

தொழில் நிறுவனங்கள், சந்தை வியாபாரிகள், வழிபாட்டுத் தலங்களின் பிரதிநிதிகள் என அனைவரிடமும் பக்குவமாய்ப் பேசி எடுத்துச் சொல்லி, மக்களை ஒத்துழைக்க வைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கலக்கி வரும் கலெக்டர் கதிரவனுக்கு மக்கள் மத்தியிலிருந்து வாழ்த்துகள் குவிகின்றன.

அடுத்த கட்டுரைக்கு