Published:Updated:

ஈரோடு: `ஒரே நாள்ல 5,000 ஒப்பிட்டு செஞ்சிருக்கோம்!’ - பாரம்பர்ய பலகாரம்; அசத்தும் தம்பதி

ஒருநாள் நைட் ஆரம்பிச்சு அடுத்த நாள் மதியம் வரைக்கும் 5,000 ஒப்பிட்டு வரை செஞ்சிருக்கோம்.

சடசடவென மழை பிடிக்க ஆரம்பித்த ஒரு மாலை வேளை. ஈரோடு அரசு மருத்துவமனை தாண்டி, ஈ.வி.என்.சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தோம். சாலை ஓரமாக இருந்து வந்த அந்த ரம்மியமான வாசனை, வண்டியை ஓரம் கட்ட வைத்தது. சிறிய தோசைக்கல்லில் பருப்பு மற்றும் தேங்காய் ஒப்பிட்டு/ போளி வெந்துகொண்டிருந்தது. மழையில் நனைத்து கொண்டே பலகாரம் செய்துகொண்டிருந்த அந்தத் தம்பதியிடம் கேட்பதற்கு ஏதோ ஒரு கதை இருப்பதாகத் தோன்றியது. ஒப்பிட்டு ஒன்றை வாங்கி சுவைத்தபடியே அவர்களிடம் பேச்சை ஆரம்பித்தோம்.

ஜெய்கணேஷ் - டயானா தம்பதி
ஜெய்கணேஷ் - டயானா தம்பதி

ஈரோடு திருநகர் காலணி பகுதியைச் சேர்ந்த அந்தத் தம்பதியின் பெயர் ஜெய்கணேஷ் - டயானா. ஜெய்கணேஷ் `டிப்ளோமா இன் டெக்ஸ்டைல் நிட்டிங் டெக்னாலஜி’ படித்திருக்கிறார். டயானாவோ, `பி.ஏ ஹிஸ்டரி’ படித்திருக்கிறார். கடந்த 2 வருடமாக ஈரோட்டின் பல சாலையோரங்களில் கடை போட்டு வியாபாரம் செய்து வந்திருக்கின்றனர். `நன்கு படித்த நீங்கள் சாலையோரம் பலகாரக் கடை நடத்த வேண்டிய அவசியமென்ன?’ எனக் கேட்டோம்.

நினைவுகளில் கடைசி அடுக்குகளிலிருந்த நினைவுகளோடு பேச்சை ஆரம்பித்தார் டயானா. ``நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்துல 50 வருஷத்து முன்னாடியே எங்க அம்மா - அப்பா இதுமாதிரி ஒரு பலகாரக்கடையை ஆரம்பிச்சாங்க. முறுக்கு, அதிரசம், ஜிலேபி என அனைத்து விதமான பலகாரத்தையும் விற்பனை செஞ்சு, ஊர் ஊரா சைக்கிள்ல போய் வித்துட்டு வருவாங்க. ‘ஜிலேபிக்காரவங்க’ன்னு சொன்னாதான் எங்க தெருவுல எல்லாரும் தெரியும். அந்தக் காலத்துலயே எங்க அம்மா - அப்பா தயாரிச்ச ஜிலேபி அவ்ளோ ஃபேமஸ். அவங்ககிட்ட இருந்துதான் நான் பாரம்பர்ய பலகாரங்களை எப்படிச் செய்யுறதுன்னு கத்துக்கிட்டேன்.

ஜெய்கணேஷ் - டயானா தம்பதி
ஜெய்கணேஷ் - டயானா தம்பதி

நான் ஒரு கம்பெனிக்கு வேலைக்குப் போனேன். எங்க வீட்டுக்காரர் 10 வருஷமா செல்போன் கடை நடத்திக்கிட்டு வந்தாரு. இருந்தாலும், குடும்பத்துக்குப் போதுமான வருமானம் பெருசா கிடைக்கலை. எங்களோட சொந்த வீடு வேற அடமானத்துல இருக்கு. இதையெல்லாம் சரிசெய்ய ஒரே வழி இதுதான்னு, எங்களோட பாரம்பர்யத் தொழில்ல இறங்கிட்டோம். `வேலன் ஸ்வீட்ஸ்’ங்கிற பேர்ல பருப்பு ஒப்பிட்டு, தேங்காய் ஒப்பிட்டு, அதிரசம், அரிசி முறுக்கு என எல்லாம் விற்பனை செய்றோம். ஒப்பிட்டுதான் எங்ககிட்ட ஃபேமஸ். என்கூடப் பிறந்தவங்க மொத்தம் 8 பேர். 8 பேரும் இப்போ இந்தப் பாரம்பர்ய பலகாரங்களைத்தான் தொழிலாக செஞ்சுக்கிட்டு வர்றோம்” என அசர வைத்தார்.

தொடர்ந்து பேசிய ஜெய்கணேஷோ, ``பலகாரத் தொழில்ல இறங்கலாம்னு முடிவு செஞ்சதும் குமாரபாளையத்துலதான் முதல்ல கடை போட்டோம். அங்க பெருசா வியாபாரமாகலை. ஒரு தடவை ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவுல கடை போட்டிருந்தோம். நல்லா வியாபாரமாச்சு. அப்பதான் ஈரோட்டுல கடை போடுலாம்ங்கிற முடிவுக்கு வந்தோம். நானும் என் மனைவியும் குமாரபாளையத்துல இருந்து ஈரோட்டுக்கு 17 கி.மீ பைக்லயே வருவோம். சிலிண்டர், அடுப்பு, பாத்திரம்னு எல்லாத்தையும் பைக்ல எடுத்துக்கிட்டு வர்றது ரொம்ப சிரமமாக இருக்கும். 7 மாசத்துக்கு மேல பைக்ல வந்து போக முடியலை. வாடகை வீடு பாத்துக்கிட்டு ஈரோடு வந்துட்டோம். கடந்த 2 வருஷமாக நல்லா வியாபரம் ஆகுது.

ஜெய்கணேஷ் - டயானா தம்பதி
ஜெய்கணேஷ் - டயானா தம்பதி

சாயங்காலம் 6 மணிக்கு மேலதான் கடை போடுவோம். சராசரியா ஒரு நாளைக்கு 2,000 ரூவா கிடைக்கும். நாங்க எப்படி சாப்பிடுவோமோ அப்படித்தான் எல்லோருக்கும் சுவையா, தரமாக செஞ்சிக் கொடுக்குறோம். மக்களும் வீட்ல செஞ்ச மாதிரி நல்லா இருக்குன்னு சொல்றப்ப மனசுக்கு அவ்ளோ சந்தோஷமாக இருக்கும். இதுமட்டுமல்லாம கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் பலகாரம் செஞ்சுக் கொடுக்கிறோம். இதுவரைக்கும் 30-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு பலகாரங்கள் செஞ்சிக் கொடுத்துருக்கோம். ஒருநாள் நைட் ஆரம்பிச்சு அடுத்த நாள் மதியம் வரைக்கும் 5,000 ஒப்பிட்டு வரை செஞ்சிருக்கோம். ரோட்ல கடை போட்டுருக்கிறது கொஞ்சம் சிரமமாக இருக்குங்க. சின்னதா ஒரு இடம் பார்த்து கடை போடலாம்னு இருக்கோம். வாழ்க்கை ரொம்ப மகிழ்ச்சியா போய்க்கிட்டு இருக்குங்க” என்றார்.

எங்களுடைய உரையாடல் முடிகின்ற நேரத்தில் மழையும் விட்டிருந்தது. விடைபெற்று வீட்டுக்குத் திரும்பினோம். வீட்டுக்கு வந்தும் கையில் அந்த ஒப்பிட்டின் வாசம். மனசிலோ தன்னம்பிக்கையோடு உழைக்கும் அந்தத் தம்பதியின் மகிழ்ச்சியான முகம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு