Published:Updated:

ஈரோடு: `10% வியாபாரம்கூட இல்லை!’ - கலங்கும் கனி மார்க்கெட் ஜவுளி வியாபாரிகள்

ஈரோடு கனி மார்க்கெட்
ஈரோடு கனி மார்க்கெட்

3 மாதத்துக்குப் பிறகு கடைகளைத் திறந்தும் 10 சதவிகித வியாபாரம்கூட இல்லை எனக் கலங்குகின்றனர் கனி மார்க்கெட் வியாபாரிகள்.

தமிழகத்திலேயே விடிய விடிய ஜவுளி வியாபாரம் நடக்கும் ஒரே இடம் ஈரோட்டிலுள்ள `ஈ.கே.என். அப்துல் கனி மார்க்கெட்’ தான். வாராவாரம் திங்கட்கிழமை இரவு தொடங்கி, செவ்வாய் இரவு வரை நடக்கும் வார இரவுச் சந்தையில் மட்டும் 3 கோடிக்கு மேல் வியாபாரம் நடைபெறும். இதுவே பண்டிகை மற்றும் சீஸன் சமயங்களில் அசால்ட்டாக வியாபாரம் 5 கோடியைத் தாண்டும். ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கொல்கத்தாவிலிருந்தும் இந்த சந்தைக்கு வந்து ஜவுளி வாங்கிச் செல்ல பெரும் கூட்டம் இருக்கிறது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக எப்போதுமே பரபரப்பாக பல நூறு கோடி வியாபாரம் பார்த்து வந்த இந்தத் துணி மார்க்கெட், கொரோனாவால் முழுவதுமாக முடங்கிக் கிடக்கிறது.

ஈரோடு கனி மார்க்கெட்
ஈரோடு கனி மார்க்கெட்

இந்த கனி மார்க்கெட்டில் ஒவ்வொரு பருவ நிலைக்கு ஏற்ப பருத்தி ஆடைகள், லுங்கி, வேஷ்டி, போர்வை, பெட்ஷீட், துண்டு, காட்டன் சேலைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் போன்றவை பல்வேறு வகைகளில் மிக குறைந்த விலையில் கிடைக்கும். கொரோனா லாக்டெளனால் இந்த வியாபாரங்கள் முழுக்க பாதிப்படைந்திருக்கின்றன. 3 மாதத்துக்குப் பிறகு, கடைகளைத் திறந்தும் 10 சதவிகித வியாபாரம்கூட இல்லை எனக் கலங்குகின்றனர் கனி மார்க்கெட் வியாபாரிகள்.

இதுகுறித்து ஈரோடு கனி மார்க்கெட் தினசரி சங்கத் தலைவர் நூர் முகமது அவர்களிடம் பேசினோம். ``பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி என அடிவாங்கி அடிவாங்கி மேலெழுந்து வந்தோம். ஏற்கெனவே ஸ்மார்ட்சிட்டி திட்டத்தால 500-க்கும் மேற்பட்டோருக்கு கடைகளை இழந்து தவிச்சிட்டு வந்தாங்க. இந்நிலையில் கொரோனா வந்து எங்கள் வாழ்வாதாரத்தையே பெரும் கேள்விக்குறியாக்கிவிட்டது. ஒரு கோடி வியாபாரம் நடந்த இடத்துல ஒரு லட்சம் கூட வியாபாரம் ஆக மாட்டேங்குது.

நூர் முகமது
நூர் முகமது

காலையில இருந்து சாயங்காலம் வரை கடையைத் திறந்து வச்சிருந்தாலும் 1,000 ரூபாய்கூட வியாபாரம் ஆக மாட்டேங்குது. ரம்ஜான், பக்ரீத், ஆடி 18 வியாபாரம் என எல்லாம் போச்சு. பஸ் இல்லாததால ஈரோடு மக்களே வர மாட்டேங்கிறாங்க. கையில பணம் இல்லாம வியாபாரிங்கிற ஃபீலிங்கே போயிடும் போல. பொது போக்குவரத்தை அரசு விட்டாதான் எங்களால இனி வியாபாரம் பண்ண முடியும். இல்லைன்னா கடையை சாத்திட்டு வீட்ல பசியோட படுத்துத் தூங்க வேண்டியதுதான்” என்றார்.

செல்வராஜ்
செல்வராஜ்

ஈரோடு கனி மார்க்கெட் வாரச்சந்தை அனைத்து ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ், ``கொரோனா லாக்டெளனுக்கு முன்னாடியே திங்கட்கிழமை ராத்திரி நடக்கும் வாரச் சந்தையை மூடச் சொல்லிட்டாங்க. கிட்டத்தட்ட 4 மாசமா வாரச் சந்தை நடக்காததால சுமார் 50 கோடி வியாபாரம் நடக்கலை. ஏராளமான சரக்குகள் குடோன்ல தேங்கிக் கிடக்கும். சம்மர் சீஸனுக்காக வாங்கி வைக்கப்பட்ட காட்டன் உடைகள் எதுவும் வியாபாரமாகலை.

அதையெல்லாம் அடுத்த சம்மர் சீஸனுக்குத்தான் விற்க முடியும். அதுவரைக்கும் எப்படிங்க கடனைக் கட்டுறது. ஆடி மாசம் நடைபெறும் கோயில் திருவிழாக்களால சிகப்பு, மஞ்சள் சேலை அதிகமா விக்கும். கேரளா ஆட்கள் வந்து கேரளா சேலைகள், லுங்கி, காவி வேஷ்டி போன்றவற்றை வாங்குவாங்க, ஆந்திரா, பீகார், அசாம், திரிபுரா, கல்கத்தா போன்ற வட மாநிலங்களில் பெட்ஷீட் அதிகமாகப் போகும். இப்ப எந்த வியாபாரமும் இல்லாததால என்ன செய்யுறதுன்னு தெரியாம ஸ்தம்பிச்சுப் போய் நிக்குறோம். அரசுதான் இந்தச் சூழலை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கணும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு