Published:Updated:

``ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்துவிட்டேன், அதனால்தான்..!" - வங்கி நகைகளுடன் மாயமான மேலாளர் கைது

மேலாளர் கைது

கிராம வங்கியிலிருந்து ரூ.1 கோடி மதிப்பிலான நகைகளுடன் மாயமான மேலாளரை போலீஸார் கைதுசெய்தனர்.

``ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்துவிட்டேன், அதனால்தான்..!" - வங்கி நகைகளுடன் மாயமான மேலாளர் கைது

கிராம வங்கியிலிருந்து ரூ.1 கோடி மதிப்பிலான நகைகளுடன் மாயமான மேலாளரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
மேலாளர் கைது

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தை அடுத்த டி.ஜி.புதூரில் இயங்கி வரும் தமிழ்நாடு கிராம வங்கியில் மேலாளராக இருந்தவர் மணிகண்டன். அந்த வங்கியில் அடகுவைக்கும் வாடிக்கையாளர்களின் நகைகளை இருப்பு வைக்கும் லாக்கரின் சாவி மேலாளர் மணிகண்டன் வசம்தான் இருந்திருக்கிறது. இந்த நிலையில், வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த வாடிக்கையாளர்களுக்குச் சொந்தமான ரூ.1 கோடி மதிப்புள்ள 1,800 கிராம் நகைகளுடன் வங்கி மேலாளர் மணிகண்டன் திடீரென மாயமாகி விட்டதாகத் தகவல் பரவியது.
இதையடுத்து நகைகளை அடகு வைத்தவர்கள் வங்கியை முற்றுகையிட்டு தங்களது நகைகள் பாதுகாப்புடன் உள்ளதா எனக் கேட்டு அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
வங்கியில் இருப்புள்ள நகைகளை பரிசோதனை செய்த மண்டல மேலாளர் டேவிட் விஜயகுமார், காணாமல் போனது 14 பேருக்குச் சொந்தமான 1,932 பாக்கெட்டுகளில் வைக்கப்பட்டிருந்த 1,700 கிராம் தங்க நகைகள் மட்டுமே என்றும், இந்த நகைகளை எடுத்து வேறு இடத்தில் அடமானம் வைத்து பணம் வாங்கியிருப்பதாக தெரியவந்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

கிராம வங்கி
கிராம வங்கி

அரசு வங்கி என்பதால் காணாமல் போன நகைகளுக்குக் காப்பீட்டு பணம் மூலமாக நகைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், இது குறித்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகாரளித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் காணாமல்போன மணிகண்டனை ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்து ஈரோடு கிளைச் சிறையில் அடைத்தனர். போலீஸாரிடம் கொடுத்திருக்கும் வாக்குமூலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் முழுத் தொகையையும் இழந்துவிட்டதாக மணிகண்டன் கூறியிருக்கிறார். அவர்மீது தொடரப்பட்டிருக்கும் வழக்கு குறித்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோமதி நம்மிடம் பேசினார். ``மணிகண்டன் மீது பண மோசடிப் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து கைதுசெய்து ஈரோடு கிளைச்சிறையில் அடைத்திருக்கிறோம். ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் பணத்தை இழந்து விட்டதாக தனது வாக்குமூலத்தில் மணிகண்டன் தெரிவித்திருக்கிறார். அவர் அளித்த தகவலின்பேரில் இதுவரை 14 பவுன் நகைகள் மட்டுமே மீட்கப்பட்டிருக்கிறது.

வங்கி முற்றுகை
வங்கி முற்றுகை

வங்கியில் காணாமல் போன நகைகளையும், வங்கி இருப்பில் உள்ள மற்ற நகைகளையும் சரிபார்த்து யாருடைய நகைகள் எல்லாம் காணாமல் போனது என்பதற்கான பட்டியலை தயாரித்து வருகிறோம். இந்தப் பட்டியலை வங்கியின் ஆவணங்களுடன் சரிபார்த்த பிறகே மணிகண்டன் எவ்வளவு நகைகளை எடுத்துச் சென்றிருக்கிறார் என்ற உண்மை தெரியவரும். மணிகண்டன் அளித்திருக்கும் வாக்குமூலத்தில் முரண்பாடு இருந்தால் அவரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிப்போம். மேலும் காணாமல் போன நகைகளை எங்கெல்லாம் அடகு வைத்திருக்கிறார் என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.